
Business
oi-Prasanna Venkatesh
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த அகவிலைப்படி (Dearness Allowance – DA) உயர்வு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுவாக மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்படும் இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை, இந்த ஆண்டு நிர்வாக காரணங்களால் சிறிய தாமதத்துடன் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 58% ஆக உள்ள அகவிலைப்படி, 2% உயர்வுடன் 60% ஆக அதிகரிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பொதுவாக மத்திய அரசு இந்த அகவிலைப்படி உயர்வை, தொழிலாளர் நுகர்வோர் விலை குறியீடு (CPI-IW) அடிப்படையில் கணக்கிடப்படும் 12 மாத சராசரி பணவீக்க அளவை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.

கடந்த 10 வருடத்தில் அதாவது 2016ஆம் ஆண்டில் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% சதவீதத்தில் இருந்து தொடர்ந்து உயர்ந்து தற்போது 60% அளவீட்டை தொட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நிலவும் பணவீக்கத்தின் தாக்கத்தை தெளிவாக காட்டுகிறது.
அகவிலைப்படி அறிவிப்பில் ஏன் தாமதம்?
இந்த ஆண்டில் DA உயர்வு அறிவிப்பு வழக்கமான காலக்கட்டத்தை விட சற்று தாமதமாகியுள்ளது. இதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. முதல் விஷயம் 50 சதவீத அளவீடு.
அகவிலைப்படி-யில் ‘50% வரம்பு’ என்பது வரலாற்றில் முக்கிய மாற்றங்களுக்கு வழிவகுத்த ஒரு முக்கிய கட்டமாகும். குறிப்பாக 5வது மற்றும் 6வது சம்பளக் கமிஷனின் போது, அகவிலைப்படி 50 சதவீதம் அளவீட்டை தாண்டிய பின்பு அதில் ஒரு பகுதியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்பட்டு ‘Dearness Pay’ என அழைக்கப்பட்டது.
ஆனால் 7வது சம்பளக் குழு இந்த நடைமுறையை மாற்றியது. 50% அடைந்தவுடன் DA-வை கட்டாயமாக அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு பதிலாக, வீட்டு வாடகை தொகை (HRA), குழந்தைகள் கல்வி உதவித்தொகை (Children Education Allowance), மற்றும் கிராஜூவிட்டி வரம்புகள் போன்ற பல்வேறு கொடுப்பனவுகளை தொடர்ந்து உயர்த்தப்படும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
அகவிலைப்படி உயர்வை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் போது மற்ற கொடுப்பனவுகள் மூலம் வரும் நிதி சுமை அதிகம் என்பதால் இந்த விதியில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டது. இதை மீண்டும் மத்திய அரசு செயல்படுத்த திட்டமிடுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தற்போது DA உயர்வு அறிவிப்பில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு சில நிர்வாக மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளதாக கருதப்படுகிறது. முதலில், அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகைகளை வழங்குவதற்கான மொத்த செலவை அரசு கணக்கிடுகிறது. இது அரசின் நிதிசுமையை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும் என்பதால் பணவீக்கத்தின் போக்கை முடிவு செய்து அறிவிக்கலாம் என அரசு காத்திருக்க கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இரண்டாவது, DA உயர்வு காலக்கட்டத்தை 8வது சம்பளக் குழுவை பரிந்துரை உடன் இதனை சமநிலைப்படுத்துவதற்காக அரசு அறிவிப்பு நேரத்தை திட்டமிட்டு தாமதப்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
மூன்றாவது, இந்தியாவில் 5 மாநிலத்தில் தேர்தல் நடப்பதற்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது, அதேபோல் அரசு கச்சா எண்ணெய் விலை உயர்வு மூலம் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் காரணத்தால் பட்ஜெட் நிதி திட்டமிடல் போன்ற காரணிகளும் இந்த தாமத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால் மத்திய அரசு அகவிலைப்படியில் எந்த கொள்கை மாற்றத்தையும் செய்ய திட்டமிடவில்லை. மேலும் DA உயர்வு அறிவிப்பு எப்போது வெளியானாலும், 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவை தொகை மூலம் ஈடு செய்யப்படும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/da-hike-delay-explained-will-central-govt-employees-see-60-allowance-and-salary-changes-soon-786689.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
