
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2வது வாரமாகத் தொடர்கிறது. இந்த போரின் காரணமாகச் சர்வதேச அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது. ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள் என்ன.. மத்திய கிழக்கு போர் முடியும் சூழலுக்கு வந்துவிட்டதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் கடந்த 28ம் தேதி புதிய மோதல் வெடித்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகும் ஈரான் முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடந்தன. அதற்கு ஈரானும் கூட பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.

சர்வதேச பாதிப்பு
இஸ்ரேலை நேரடியாகத் தாக்கிய ஈரான், மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க மையங்களைக் குறிவைத்தும் தாக்குதல்களை நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்கவே ஒரு பிராந்திய போர் வெடிக்கும் சூழல் உருவானது. மேலும், இதனால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.
இறங்கி வரும் ஈரான்
இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாசிட்டிவ் விஷயத்தை ஈரான் சொல்லியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் 3 நிபந்தனைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.. இந்த 3 விஷயங்களை ஏற்றுக்கொண்டால் போரை முடிவுக்குக் கொண்டு வரத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதாவது ஈரானின் உரிமைகளை அங்கீகரிப்பது, எதிர்காலத் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது, அத்துடன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை தான் நிபந்தனைகள். இந்த 3 கண்டிஷன்களை நிறைவேற்றினால் நிச்சயம் போரை முடித்துக் கொள்ளலாம் என்று ஈரான் இறங்கி வந்துள்ளது.
3 கண்டிஷன்கள்
இது தொடர்பாக ஈரான் அதிபர் பெசெஷ்கியான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் நான் பேசியபோது, பிராந்திய அமைதிக்கான ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். சியோனிச ஆட்சியாலும் (இஸ்ரேல்) அமெரிக்காவாலும் தூண்டப்பட்ட இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர, ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை அங்கீகரிப்பது, இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிரான சர்வதேச உத்தரவாதங்களை அளிப்பது ஆகியவை மட்டுமே ஒரே வழி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித்தொடர்பாளர் அபோல்ஃபாஸ்ல் ஷெகார்ச்சி வெளிப்படையாகவே அமெரிக்காவை எச்சரித்து இருந்தார். அதாவது ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா தாக்கினால்.. பாரசீக வளைகுடாவில் எந்தத் துறைமுகம், பொருளாதார மையமும் ஈரானின் வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருக்காது என அவர் கூறியிருந்தார். அதாவது எங்கள் துறைமுகத்தில் நீங்கள் கை வைத்தால் மத்திய கிழக்கில் பிராந்திய போர் வெடிக்கும் என எச்சரித்து இருந்தார்.
என்ன நடந்தது?
கடந்த சில நாட்களாகவே கமேனி மரணத்திற்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈரான் இறங்கி இருந்தது. இதனால் மத்திய கிழக்கு முழுக்கவே தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடந்து வந்தன. இந்தச் சூழலில் தான் போரை முடிவுக்குக் கொண்டு வர ஓகே எனச் சொல்லி ஈரான் இறங்கி வந்துள்ளது. இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதும் கவனம் பெறுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-demands-3-conditions-to-end-middle-east-tension-rights-recognition-reparations-no-more-attac-780651.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
