
International
oi-Rajkumar R
டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய எண்ணெய் மையமாக கருதப்படும் கார்க் தீவு மீது அமெரிக்கா குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெளியாகிய தகவல் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார்க் தீவு, சாதாரண புவியியல் இடம் அல்ல. ஈரானின் பொருளாதாரத்தின் இதயம் என்று கூறக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம், அந்தத் தீவிலிருந்தே ஈரானின் சுமார் 90 சதவீத கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதாவது, ஈரானின் வருவாயில் பெரும்பங்கு இந்தத் தீவை சார்ந்தே உள்ளது. இந்த தீவு ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ளது. உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றாக கருதப்படும் இந்த நீரிணையை ஈரான் மூடியதாக கூறப்படும் நிலையில், உலகளாவிய எரிபொருள் சந்தையில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்கா ஈரான் மோதல்
இந்த சூழலில் கார்க் தீவின் முக்கியத்துவம் இன்னும் அதிகரித்துள்ளது. ஈரானில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பல இடங்களில் இருந்தாலும், அவற்றை சேமித்து, சுத்திகரித்து, ஏற்றுமதி செய்யும் மையமாக கார்க் தீவு செயல்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பைப்லைன்கள் மூலம் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய் இந்தத் தீவில் சேமிக்கப்படுகிறது. அங்கிருந்து பெரிய எண்ணெய் கப்பல்கள் மூலம் சர்வதேச சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், இந்தத் தீவு செயலிழந்தால் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி முறையே பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
கார்க் தீவு முக்கியத்துவம்
சர்வதேச உளவு அமைப்பான சிஐஏ கூட 1980களிலேயே கார்க் தீவை ஈரானின் பொருளாதாரத்துக்கும், போர் திறனுக்கும் மிக முக்கியமான இடமாக குறிப்பிட்டிருந்தது. இதுவே இன்று நடைபெறும் ராணுவ நடவடிக்கைகளில் இந்த தீவு ஏன் முக்கிய குறியாக மாறியுள்ளது என்பதற்கான விளக்கமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அமெரிக்கா இந்த தீவை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியை பாதிக்க முயற்சி செய்ததாக அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட இந்த தாக்குதல் குறித்து பேசுகையில், “மத்திய கிழக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த தாக்குதல் நடத்தப்பட்டது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த தாக்குதல் முழுமையான எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. காரணம், கார்க் தீவின் முக்கிய எண்ணெய் கிடங்குகள் அல்லது சுத்திகரிப்பு நிலையங்கள் நேரடியாக தாக்கப்பட்டால் அதன் தாக்கம் ஈரானை மட்டுமல்ல உலகையே பாதிக்கும்.
ஈரான் எண்ணெய் ஏற்றுமதி
உலகளவில் எண்ணெய் விலை திடீரென உயர்ந்து, பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது. இதற்கிடையில், ஈரான் இந்த தாக்குதலில் தங்களது எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு அமைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. மேலும் எண்ணெய் வளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு கடுமையான பதிலடி அளிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
எண்ணெய் சந்தை தாக்கம்
மொத்தத்தில் பார்க்கும்போது, கார்க் தீவு என்பது ஈரானின் பொருளாதார நரம்பு மட்டுமல்ல, உலக எண்ணெய் சந்தையின் முக்கியக் கட்டுப்பாட்டு புள்ளியாகவும் உள்ளது. இந்தத் தீவை குறிவைத்து மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் மத்திய கிழக்கு அரசியல் நிலைமையை மட்டுமல்ல, உலக பொருளாதாரத்தையே பாதிக்கும் திறன் கொண்டது. அதனால் தான் இந்த தீவைச் சுற்றியுள்ள ஒவ்வொரு முன்னேற்றத்தையும் உலக நாடுகள் கவனமாகக் கண்காணித்து வருகின்றன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/why-iran-s-kharg-island-is-key-target-in-us-israel-conflict-781987.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
