
Business
oi-Vigneshkumar
சென்னை: நமது நாட்டில் தங்கத்தை வாங்குவது சேமிப்பைத் தாண்டி கலாச்சார ரீதியாகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் தங்கம் விலை எப்படி இருந்தாலும் மக்கள் அதை வாங்குவதை நிறுத்துவதே இல்லை. இதற்கிடையே ஒருவர் எந்தளவுக்குத் தங்கத்தை ரொக்கமாக வாங்கலாம்.. கூடுதலாக எதாவது ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமா.. இதிலுள்ள ரூல்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியக் கலாச்சாரத்தில் தங்கத்திற்கு எப்போதும் ஒரு தனித்துவமான இடம் இருக்கிறது.. இந்தியர்களுக்குத் தங்கம் என்பது வெறுமன முதலீடு மட்டுமல்லாமல்.. அது செழிப்பின் அடையாளமாகவும் கலாச்சாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே பண்டிகைக் காலங்களில் நாம் தங்கம் வாங்குகிறோம். மேலும், திருமணம் உள்ளிட்ட சட்டங்களிலும் தங்கம் முக்கிய இடம் பிடிக்கிறது.

தங்க விற்பனை விதிகள்
இந்தக் காலத்தில் எல்லாமே டிஜிட்டல் வசமாகிவிட்டது. ரூ.5, ரூ.10க்கு கூட யுபிஐ மூலம் செலுத்துகிறோம். ஆனால், இதுபோல பண்டிகை நாட்களில் தங்கம் வாங்கும்போது பலரும் ரொக்கமாகவே பணத்தைச் செலுத்த விரும்புகின்றனர். இருப்பினும், நிதி மோசடிகள் மற்றும் கருப்புப் பணப் புழக்கம் அதிகரித்து வருவதால், தங்க விற்பனை விதிமுறைகளை மத்திய அரசு தொடர்ந்து கடுமையாக்கி வருகிறது.
தங்க நகை வாங்குபவர்கள் மனதில் எழும் முக்கியக் கேள்வி, ஒரு பரிவர்த்தனையில் எவ்வளவு ரொக்கத்தைச் செலுத்தலாம் என்பதுதான். தற்போதைய மத்திய அரசின் விதிகளின்படி, ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ₹2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை மட்டுமே ரொக்கமாக வாங்க முடியும். இந்த வரம்புக்கு மேல் தங்கத்தை வாங்க வேண்டும் என்றால்… நிச்சயம் யுபிஐ, வங்கி பரிமாற்றம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அல்லது காசோலை மூலமாகவே பணத்தைச் செலுத்த வேண்டும்.
எவ்வளவு லிமிட்?
அதாவது ₹2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் தங்கம் வாங்கும் போது, NEFT, RTGS அல்லது டிமாண்ட் டிராஃப்ட் போன்ற மின்னணு முறைகளில் பணம் செலுத்துவது கட்டாயமாகும். அதேசமயம் ₹2 லட்சத்திற்குக் குறைவான மதிப்பில் தங்கம் வாங்க வேண்டும் என்றால் ரொக்கமாக வாங்கலாம். ஆனால், இப்போது முறைகேடுகளைத் தவிர்க்க ரூ.2 லட்சத்திற்குக் குறைவாக வாங்கினாலும் கூட பல நகைக்கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடம் ஐடி விவரங்களைப் பெற்று கொள்கிறார்கள்.
அதேபோல பலருக்கும் இருக்கும் மற்றொரு கேள்வி.. தங்கத்தை வாங்க பான் கார்டு வேண்டுமா என்பது தான்.. தங்கத்தை வாங்கும்போது பான் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாகும். ₹50,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கும்போது, உங்களது பான் அட்டையின் விவரங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அளவிலான தங்கப் பரிமாற்றங்களைக் கண்காணிக்கவும், கணக்கில் வராத பணப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் மத்திய அரசு இந்த விதியை அறிமுகப்படுத்தியது.
ஏன் கட்டாயம்?
எனவே, ரூ.2 லட்சத்திற்குக் குறைவான மதிப்பில் தங்க நகைகளை வாங்கும்போது ரொக்கமாகக் கொடுத்தாலும், பான் அட்டையைக் கொடுத்தாக வேண்டும். வாடிக்கையாளர்களின் பான் விவரங்களைப் பெற்று, நகைக்கடைக்காரர்களும் அதைச் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும். இந்தத் தகவல்களை அவர்கள் வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டும்.. பான் அட்டை வழங்கப்படாவிட்டால், நகைக்கடைக்காரர் தங்கத்தை விற்பனை செய்ய முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.
பான் ஓகே.. தங்கம் வாங்கும்போது அப்போ ஆதார் தேவையா என்ற கேள்வி நம்மில் பலருக்கும் வரும். தங்கம் வாங்க ஆதார் அவசியம் இல்லை என்பதே பதிலாகும். ஆதார் விவரங்கள் கட்டாயமில்லை என்றாலும், சில குறிப்பிட்ட வரம்புகளைத் தாண்டி அதிக மதிப்புள்ள நகைகளை வாங்கும்போது, கூடுதல் சரிபார்ப்பிற்காகச் சில நகைக்கடைக்காரர்கள் ஆதார் கார்டை கேட்கலாம். இது வாடிக்கையாளரின் அடையாளத்தைச் சரிபார்க்க உதவுகிறது.
என்ன காரணம்!
பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவே மத்திய அரசு இந்த விதிகள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பது, தங்கச் சந்தையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவது மற்றும் அதில் முறைகேடுகளைத் தடுப்பதுமே மத்திய அரசின் இந்த விதிகளின் நோக்கமாகும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/how-much-gold-can-you-buy-in-cash-in-india-key-rules-and-limits-to-know-under-income-tax-act-2026-780591.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
