
International
oi-Vigneshkumar
சியாட்டில்: கடந்த சில வாரமாகவே உலகில் நாம் எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. இது சர்வதேச அளவில் ஒரு கொந்தளிப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக இணையத்தில் “Something Very Bad Is Going To Happen” என்பது டிரெண்டாகி வருகிறது. இணையம் முழுக்க இது குறித்த தேடல்களை நிறைந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உலகில் கடந்த சில வாரமாகவே மிக மோசமான பல சம்பவங்கள் நடந்துவிட்டன. ஒரு பக்கம் மத்திய கிழக்கில் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் சங்கிலித் தொடர் போல பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயரும் சூழலில், விலைவாசியும் உயரும் ஆபத்து உருவாகியுள்ளது. இப்படி உலகெங்கும் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

கூகுள் டிரெண்டிங்
இந்தச் சூழலில் தான் “Something Very Bad Is Going To Happen”, அதாவது “ஏதோ மிக மோசமான ஒன்று நடக்கப்போகிறது” என்ற ஒரு வாக்கியம் இணையத்தில் டிரெண்டாக வெடித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இதுதான் கூகுளில் டிரெண்டாகி வருகிறது. ஒரே நாளில் இது குறித்துத் தேடப்படுவது பல மடங்கு அதிகரித்துள்ளது. பொதுவாக இதுபோன்ற தேடல்கள் நடந்தால் அது ஒரு வகைக் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால், இப்போது நாம் அச்சமடையத் தேவையில்லை. ஏனென்றால் இந்த டிரெண்டிற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது.
திகில்
உண்மையில், “Something Very Bad Is Going To Happen” என்பது நெட்ஃபிக்ஸ் தளத்தில் மார்ச் 26, வியாழக்கிழமை அன்று வெளியான ஒரு புதிய திகில் நாடகத் தொடரின் பெயராகும். இதன் அச்சுறுத்தும் தலைப்பு உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்கள் இடையே ஆர்வத்தைத் தூக்கியுள்ளது. இது கூகுள் தேடலில் முதலிடம் பெறவும், இணையத்தில் விவாதங்களை உருவாக்கவும் காரணமாக அமைந்தது.
ஏதோ ஊர் பெயர் தெரியாத சீரியஸ் எப்படி இந்தளவுக்கு டிரெண்டாகும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இந்தத் தொடரின் புகழ் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், உலகளாவிய பிளாக்பஸ்டரான “ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்” தொடரை உருவாக்கிய மேட் மற்றும் ரோஸ் டஃபர் சகோதரர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் நிர்வாக தயாரிப்பாளர்களாக உள்ளனர். இதுவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரேஞ்சர் திங்க் போல அடுத்த அதிரடி ரெடியாகவிட்டதாகவே நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இணையத் தொடர்
திகிலூட்டும் தலைப்பு மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களம் ஆகியவையும் இந்தத் தொடரின் பிரபலத்திற்கு மற்றுமொரு காரணமாகும். இந்த சீரியஸ் ரேச்சல் மற்றும் நிக்கி என்ற ஜோடியைச் சுற்றி நிகழ்கிறது. அவர்களின் திருமணத்திற்கு முந்தைய பதற்றமான நாட்களில் கதை தொடங்குகிறது, மேலும் திருமணத்திற்காக நிக்கியின் சொந்த ஊருக்கு அவர்கள் பயணம் செய்கிறார்கள்.
யாருமே எதிர்பார்க்கல
ஆனால், அவர்களின் பயணத்தில் யாருமே எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடக்கிறது. அங்கு வினோதமான மற்றும் மனம் கலங்கடிக்கும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடக்க ஆரம்பிக்கின்றன. திருமணத்திற்கு முன்பு ஆரம்பிக்கும் இந்த சிறு டிரிப், அவர்கள் வாழ்க்கையை மாற்றி போடுவதாக உள்ளது.. இந்தத் தொடரில் எட்டு பகுதிகள் உள்ளன, அவை அனைத்தும் இப்போது நெட்பிளிக்ஸில் உள்ளது.
இந்த சீரியஸை ஹாலே Z. பாஸ்டன் உருவாக்கினார். அவர் இந்தத் தொடரின் ஷோ ரன்னராகவும், டஃபர் சகோதரர்களுடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார். இதில் ரேச்சலாக கமிலா மோரோனும், நிக்கியாக ஆடம் டிமார்கோவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/something-very-bad-is-going-to-happen-google-trends-shows-netflix-horror-series-drives-searches-784817.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
