
Cricket
oi-Vigneshkumar
பெங்களூர்: ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக ஆர்சிபி இருந்து வருகிறது. ஆர்சிபி அணியைச் சமீபத்தில் பிர்லா குழுமம் வாங்கியிருந்த சூழலில், அணியின் பெயர் மாற்றப்படுவதாகத் தகவல் பரவியது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய சூழலில், ஆதித்யா பிர்லா தரப்பில் இருந்து இது தொடர்பாக விளக்கம் வந்துள்ளது.
19ஆவது ஐபிஎல் தொடர் இந்தாண்டு நடைபெறுகிறது. வரும் மார்ச் 28ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன ஆர்சிபி அணியும் சன் ரைசர்ஸ் அணியும் மோதுகிறது. மே 31ம் தேதி இறுதிப் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் தொடங்கும் முன்பே இந்தாண்டு ஆர்சிபி குறித்தே எங்குப் பார்த்தாலும் பேச்சாக இருக்கிறது.

ஆர்சிபி
அண்மையில் தான் ஆர்சிபி அணியை ஆதித்யா பிர்லா குரூப் தலைமையிலான 4 நிறுவனங்களைக் கொண்ட ஒரு குழுமம் வாங்கியது. ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரைப் பல அணிகள் அதன் உரிமையாளரின் பெயரிலேயே இருக்கும். இப்போது ஆதித்யா பிர்லா குரூப் ஆர்சிபியை வாங்கியதால் அதன் பெயர் மாற்றப்படுமோ என்ற கேள்வி எழுந்தது. இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.
₹16,706 கோடி
யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ஆர்.சி.பி-யின் 100 சதவீதப் பங்குகளைக் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டமைப்பு வாங்கியது. இதன் மதிப்பு சுமார் $1.78 பில்லியன் (₹16,706 கோடி) மதிப்பாகும். இதன் மூலம் மிகவும் காஸ்ட்லி ஐபிஎல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெறுகிறது. பிர்லா தலைமையிலான இந்த கூட்டமைப்பில் பிளாக்ஸ்டோனின் தனியார் பிரிவான பிஎக்ஸ்.பி.இ (BXPE), அமெரிக்க முதலீட்டாளர் டேவிட் பிளிட்ஸரின் போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் மீடியா குழுமமான டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை அங்கம் வகிக்கின்றன.
ஐபிஎல் 2008ல் தொடக்கப்பட்ட சமயத்தில் இருந்து உள்ள அணிகளில் ஒன்றாக ஆர்சிபி இருந்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளில் ஆர்சிபி பல முறை இறுதிப் போட்டி வரை வந்திருந்தாலும் கூட ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருந்தது. அந்த வரலாற்றை மாற்றி கடந்தாண்டு தான் முதல்முறையாகத் தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. வென்றவுடனேயே ஆர்சிபி அணி கைமாறிய நிலையில், அதன் பெயர் மாற்றப்படுமோ என்ற கேள்வி எழுந்தது.
அனன்யா பிர்லா
இதற்கிடையே அணியின் பெயர் மாற்றம் குறித்த தகவல்களுக்கு, ஆதித்யா பிர்லா குழுமத்தின் அனன்யா பிர்லா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஆர்.சி.பி.யின் பெயர் மாறாது என்பதைக் கூறியிருக்கிறார். ஆர்சிபி என்பதை வெறும் பெயரைத் தாண்டி, அதன் ரசிகர்களுக்கு ஒரு எமோஷனாக இருக்கிறது. அப்படியிருக்கும்போது அதன் பெயரை மாற்றுவதாக வந்த தகவல் ரசிகர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பிர்லா தரப்பிடம் இருந்து வந்துள்ள விளக்கம் ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு நிம்மதி தருவதாகவே இருக்கிறது.
ராயல் சேலஞ்சர்ஸ்
முன்னதாக அணி விற்பனை தொடர்பாக யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளை ஒரு கூட்டமைப்பிற்கு விற்பதற்கான இறுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறோம். அணியை வாங்கும் கூட்டமைப்பில் ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம், போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோனின் நிரந்தர தனியார் முதலீடு பிரிவு பிஎக்ஸ்.பி.இ ஆகியவை இடம் பெற்று இருக்கிறது.. ₹16,660 கோடி (INR 166.6 பில்லியன்) புல் கேஷ் மூலம் டீல் நடக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஆண்கள் அணியுடன், பெண்கள் பிரீமியர் லீக் (WPL) அணியும் விற்கப்பட்டது.. இதன் மூலம் ஆர்.சி.பி, ஐபிஎல் வரலாற்றிலேயே மிக விலையுயர்ந்த அணியாக மாறியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு ஒனர்ஷிப் முழுமையாக மாறும் என தெரிகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/rcb-name-change-ananya-birla-confirms-no-plan-to-change-royal-challengers-bangalore-after-buying-784537.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
