கிம் ஜாங் உன்னை தூக்கும் டிரம்ப்? Decapitation வெறியில் அமெரிக்கா.. அடுத்த டார்க்கெட்டில் வடகொரியா? | Is Kim Jong Un the next target for US President Donald Trump?

International

oi-Nantha Kumar R

பியாங்யாங்: அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போர் புரிந்து வருகிறது. முதல் நாள் போரிலேயே ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் அமெரிக்கா தற்போது Decapitation யுக்தியை கையில் எடுத்து செயல்பட்டு வரும் நிலையில் டிரம்பின் அடுத்த டார்க்கெட்டாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னாக இருக்கலாம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி தீவிரமாக தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் 11வது நாளாக இன்று தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது. இதனால் போர் இப்போதைக்கு முடிய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

is-kim-jong-un-the-next-target-for-us-president-donald-trump

இருப்பினும் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து முதல் நாளே, ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுவிட்டது. இவர் தான் ஈரானின் முக்கிய லீடராகவும், அமெரிக்காவுக்கு அடிபணியாமலும் செயல்பட்டு வந்தார். அவரை குறிவைத்து முதல் நாள் போரிலேயே தீர்த்து கட்டிவிட்டது அமெரிக்கா – இஸ்ரேல். இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது.

வெனிசுலா அதிபர் கைது

அயதுல்லா அலி கமேனி பிப்ரவரி கடைசி நாளில் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு முன்பாக கடந்த ஜனவரியில் தான் அமெரிக்க படை வீரர்கள் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரஸ் ஆகியோரை அந்த நாடு புகுந்து கைது செய்தார் டிரம்ப். இவர்கள் 2 பேரும் தற்போது அமெரிக்காவின் சிறையில் உள்ளனர்.

கிம் ஜாங் உன் மீம்கள்

இந்நிலையில் தான் தற்போது இணையதளங்களில் கிம் ஜாங் உன் தொடர்பான மீம்.. வீடியோக்கள் ஆக்கிரமித்துள்ளன. அதாவது வெனிசுலா, ஈரானை அமெரிக்காவால் தாக்க முடியும்.. ஆனால் வடகொரியாவை டிரம்பால் தொட முடியுமா? என்று இணையவாசிகள் பலரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி, ”ஏவுகணை (ஈரான் போரை குறிப்பிட்டு) ஏதாவது இந்த பக்கம் (வடகொரியா) வந்திச்சி நான் அணுகுண்டை வீசுவேன்” என மீம்கள் பரவி வருகிறது.

அதேபோல், ”விளையாட்டு சாமான் (அணுஆயுதம்) வைத்து கொண்டு எவ்வளவு நாள் டா வெயிட் பண்ணுறது.. யாராவது என் கூட விளையாட (சண்டைக்கு) வாங்கடா” என்றும், ”என்னை அமெரிக்கா கேவலப்படுத்துவது போல் விபிஎன் பயன்படுத்தி போஸ்ட் போடு.. அதை காரணமாக கூறி அமெரிக்காவை தாக்கலாம்” என்று பல மீம்கள் இணையதளங்களில் நிரம்பி கிடக்கிறது.

அடுத்த டார்க்கெட் கிம் ஜாங் உன்?

இதனை பார்க்கும் நெட்டிசன்களும், ”இவர் (கிம் ஜாங் உன்) உண்மையிலேயே மண்டை கோளாறு புடிச்சவரு தான்.. அமெரிக்கா சீண்டினால் அணுகுண்டை தான் கையில் எடுப்பார்” என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் தான் வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்க்கெட் உண்மையாகவே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தானா? என்பது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் டொனால்ட் டிரம்ப் தற்போது Decapitation யுக்தியை பயன்படுத்தி எதிரி நாடுகளை அழித்து வரும் நிலையில் அதே பாணியில் கிம் ஜாங் உன் டார்க்கெட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

வடகொரியா – அமெரிக்கா பிரச்சனை

இதற்கு முக்கிய காரணம் வடகொரியாவை எடுத்து கொண்டால் அமெரிக்காவின் பரமஎதிரியாக உள்ளது. அதேபோல் அமெரிக்காவின் மிரட்டல் காரணமாகவே வடகொரியா அணுஆயுதம் மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்து வைத்துள்ளது. குறிப்பாக அண்டை நாடுகளாக உள்ளன தென்கொரியா, ஜப்பானுடன், வடகொரியா தொடர்ந்து மோதி வருகிறது. ஏவுகணை சோதனைகளை எல்லையில் மேற்கொண்டு அச்சுறுத்துகிறது.

இதனால் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் ராணுவவீரர்கள், கடற்படை வீரர்கள், விமானப்படை வீரர்கள் தென்கொரியாவில் உள்ளன. வடகொரியாவிடம் இருந்து தென்கொரியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா சார்பில் ராணுவ தளம், விமானதளம், கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது.

டிரம்பின் வெறி

மேலும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் மட்டுமே நெருக்கமாக இருக்கும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பிற நாடுகளுடன் நட்பு பாராட்டுவது கிடையாது. குறிப்பாக அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். இதற்கிடையே தான் வெனிசுலா, ஈரானை தொடர்ந்து டிரம்பின் பார்வை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை நோக்கி செல்லலாம் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே சக்தி வாய்ந்த தலைவராக மாற வேண்டும் என்ற வெறியுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயல்பட்டு வருகிறார். அமைதிக்கான தலைவர் என்று மார்த்தட்டி கொண்ட டிரம்ப் தற்போது தனக்கு பணியாத நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது, வரிகளை விதிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தான் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கடந்த ஜனவரியில் அமெரிக்க படையால் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு தற்போதைய போரில் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் டிரம்பின் ஆதிக்க மனப்பான்மையை வெளிக்காட்டுகிறது. இருப்பினும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை, டிரம்ப் தொட்டால் நிச்சயம் அது பெரிய போராக மாறலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.

பயத்தில் வடகொரியா

இந்த விவகாரங்கள் பற்றி தென்கொரியா தலைநகர் சியோலை சேர்ந்த தேசிய பாதுகாப்பு சார்ந்த நிறுவனத்தின் ஆய்வாளர் கோ மியாங்-ஹியூன் ‘தி யுரேஷியன் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறுகையில், ‘தலைவரை காப்பது தான் எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் முக்கியம் என்பது வடகொரியாவின் தலையாய கொள்கை. இப்படியான சூழலில் அமெரிக்காவின் தற்போது நடவடிக்கைகள் வடகொரியாவில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயம் அந்த நாட்டில் உணரப்படுகிறது” என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தி யூரேஷியன் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ” வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டு அந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் வலிமையை காட்டுகிறது.

Decapitation என்பது என்ன?

இந்த அதிரடி நடவடிக்கைகள் அமெரிக்காவை எதிர்க்கும் பல நாடுகளின் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அமெரிக்கா இப்போது Decapitation யுக்தியில் செயல்பட்டு வருகிறது. Decapitation என்பது தமிழில் “தலை துண்டிப்பு” என்று பொருள்படும். அதாவது அமெரிக்கா தன்னை எதிர்க்கும் நாட்டின் தலைவரை கைது செய்வது அல்லது கொல்வது என காலி செய்கிறது.

இதுபற்றி அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ராபர்ட் பேஜ் கூறுகையில், ”ஒரு நாட்டின் தலைவர் என்பவர் நம் உடலில் உள்ள மூளை போன்றவர். அதனை அழித்தால் உடல் இறந்துவிடும். மூளையை குழப்பினால் உடலை கட்டுப்படுத்த முடியாது. அதன்படி ஒரு நாட்டின் தலைவரை பதவியில் இருந்து இறக்கினாலோ அல்லது கொன்றாலோ அது எதிரி நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

அதன்பிறகு எந்த வகையான போரிலும் எளிதாக வெல்லலாம். ஏனென்றால் கொல்லப்பட்ட தலைவர்களின் பதவியை நிரப்புவது மிகவும் சவாலானது. அதே அனுபவம் மற்றும் திறமை கொண்ட ஒரு நபரை உடனடியாக கண்டறிவது அரிது. இந்த யுக்தியை தான் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது” என கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு புதிது அல்ல

இதுபற்றி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் டேவிட் இக்னேஷியஸ் கூறுகையில், ”அமெரிக்கா தற்போது Decapitation என்ற யுக்தியை போரிடும் முறையாக உருவாக்கி வருகிறது” என்றார். அமெரிக்காவை எடுத்து கொண்டால் இத்தகைய செயல் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு லிபியா தலைவர் முனாவர் கடாஃபி மற்றும் ஈராக் அதிபர் சதாம் உசேன் உள்ளிட்டவர்களை அமெரிக்கா கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/is-kim-jong-un-the-next-target-for-us-president-donald-trump-780069.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo