சண்டைக்கு மட்டும் வாங்க.. சமாதானத்துக்கு வாய்ப்பே இல்லை! ட்ரம்பை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்யும் ஈரான்! | Iran Rejects Trump’s Ceasefire Claim as Middle East War Escalates

International

oi-Rajkumar R

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் சண்டை நிறுத்தம் செய்ய தாங்கள் எந்தவித அழைப்பும் விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்துக்கு நேரடி பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் உயர்தலைவர் அலி கமேனி உள்ளிட்ட முக்கிய ராணுவ அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

US Iran Israel

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. மேலும் உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது.

ஈரான் போர் நிறுத்தம்

இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது என்றும், போர் நிறுத்த ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது என்றும் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் இதனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி முற்றிலும் மறுத்துள்ளார்.அவர் தனது சமூக வலைதள பதிவில், “சண்டை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு எங்கள் நாடு கோரிக்கை விடுத்ததாக கூறுவது முற்றிலும் பொய். அமெரிக்கா திணித்துள்ள இந்த போர் தவறு என்பதை உணரும் வரை எங்கள் பாதுகாப்புப் படை தாக்குதலை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் ஏவுகணை தாக்குதல்

இதற்கிடையில், ஈரான் தொடர்ந்து வளைகுடா நாடுகள் மற்றும் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தரப்பின் தகவலின்படி, ஈரான் ஏவிய ஏவுகணைகள் பல இடங்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. சில இடங்களில் தீ விபத்துகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ‘கிளஸ்டர்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஈரானின் டிரோன் தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

மத்திய கிழக்கு போர் பதற்றம்

புஜைராவில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்தும் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபியில் நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானின் 35 டிரோன்களை இடைமறித்து அழித்ததாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. மேலும் 4 ஏவுகணைகள் மற்றும் 3 டிரோன்களை தடுத்து அழித்ததாக பஹ்ரைன் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஈரானின் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் ஈரான் மோதல்

அதேபோல் லெபனானின் தலைநகர் பெய்ரூட் பகுதிகளிலும் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் லெபனானுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. முதல் இரண்டு வார மோதல்களில் ஈரானின் ஏவுகணை திறனில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. சண்டை நிறுத்தம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை என்ற ஈரானின் நிலைப்பாடு, மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-rejects-trump-s-ceasefire-claim-as-middle-east-war-escalates-781979.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo