ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! | Iran Rejects Trump’s 15-Point Plan, Israel Intensifies Attacks

International

oi-Rajkumar R

தெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 அம்ச திட்டத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த திட்டத்தை ஏற்க மறுத்த ஈரான், அதனை ஏற்க முடியாது எனக் கூறியிருப்பது, போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

ஈரான், அணு ஆயுத கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தங்களுக்கு முழுமையாக இணங்க மறுத்ததையடுத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. இந்த போர் தொடங்கி 25 நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், அமெரிக்கா மேற்கு ஆசியப் பகுதியில் கூடுதல் ராணுவத்தை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Iran Israel us

இதே நேரத்தில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 15 அம்சங்களைக் கொண்ட திட்டத்தை வெளியிட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஒரு மாத காலத்துக்கு போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்பது முதன்மையானதாக உள்ளது.

15 அம்ச திட்டம்

அதேபோல், ஈரான் அணு ஆயுத திட்டங்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஹோர்மூஸ் நீரிணை திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஈரானிடம் இருப்பில் உள்ள யுரேனியம் அனைத்தையும் சர்வதேச அணுசக்தி முகமைக்கு (IAEA) ஒப்படைக்க வேண்டும் என்றும் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரானின் நடான்ஸ், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோ பகுதிகளில் உள்ள அணு உற்பத்தி மையங்களை மூடி, சர்வதேச ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

டொனால்ட் டிரம்ப்

அதேபோல், அண்டை நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்த வேண்டும், ஏவுகணை தயாரிப்பு எண்ணிக்கைக்கும், அதன் தாக்கும் தூரத்துக்கும் வரம்பு விதிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் இந்த திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு ஈரான் இணங்கினால், அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் முழுமையாக நீக்கப்படும் என்றும், அணு மின்சக்தி உற்பத்திக்கான தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரான் மறுப்பு

இந்த திட்டம் தொடர்பாக பதிலளித்த ஈரான் ராணுவ அதிகாரிகள், அமெரிக்காவின் ஆஃபர கடுமையாக விமர்சித்துள்ளனர். ஈரான் ராணுவ தலைமையக செய்தித் தொடர்பாளர் இப்ராகிம், ‘ஒப்பந்தம் என்ற பெயரில் தனது தோல்வியை மறைக்க ட்ரம்ப் முயற்சிக்கிறார். வெற்று வாக்குறுதிகளால் எங்களை சமாதானப்படுத்த முடியாது’ என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மற்றொரு உயர் அதிகாரி அலி அப்துல் லாஹி அலியாபாடி கூறுகையில்,, ‘முழுமையான வெற்றி கிடைக்கும் வரை இந்த போர் தொடரும்’ என்று திட்டவட்டமாக அறிவித்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பேச்சு?

இதனால், போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் உடனடியாக வெற்றியடையும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மறைமுக பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தும் முயற்சிகள் பாகிஸ்தான் மூலம் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீர் இந்த பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல்

இதே நேரத்தில், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை தொடரும் என்றும், திட்டமிட்ட இலக்குகளை அடையும் வரை தாக்குதல்கள் நிறுத்தப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது. அதற்கு பதிலடியாக, ஈரானும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், போர் நீடித்தால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலை நிலவரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கச்சா எண்ணெய்

குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச திட்டத்தையும் ஈரான் மறுத்துள்ள நிலையில், இரு தரப்பும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பது போர் நிறுத்த முயற்சிகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. வரும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-rejects-trump-s-15-point-plan-israel-intensifies-attacks-784429.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo