
Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வரும் சூழலில், இப்போது தங்கத்தை வாங்கலாமா இல்லை இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாமா என்பதே பொதுமக்கள் அனைவரது பிரதான கேள்வியாக உள்ளது. இதற்கிடையே இப்போது இருக்கும் சூழலில் யார் எல்லாம் தங்கம் வாங்கலாம்… ஒருவர் தங்கம் வாங்கும் முடிவை எப்படி எடுக்கலாம் என்பது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
தங்கம் விலை இந்தாண்டு, அதிலும் குறிப்பாகக் கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை உயர்வதை மட்டுமே மக்கள் பார்த்து வந்த சூழலில் இந்த சரிவு பெரும் நிம்மதி கொடுப்பதாக இருக்கிறது. இந்த நேரத்தில் தங்கத்தை வாங்க விரும்பிய மக்கள் அனைவரும் ஓடிச் சென்று தங்கத்தை வாங்குகிறார்கள்.

ஆனந்த் சீனிவாசன்
அதேநேரம் சிலருக்கு இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை இன்னும் கொஞ்சக் காலம் காத்திருக்கலாமா என்பதில் தொடர்ந்து கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக மிகத் தெளிவான விளக்கத்தைத் தனது யூடியூப் பக்கத்தில் கொடுத்திருக்கிறார்.
தங்கம்
ஒரு ஆண்டு மட்டுமே தங்கத்தை வைத்திருப்பேன் என நினைப்போர் வாங்கலாமா என்ற கேள்விக்கு அவர், “ஓராண்டுக்கு எல்லாம் சொல்ல முடியாது .. இந்த போர் ஆறு மாதங்கள் போனால் என்ன பணம் முடியும். எனவே, ஓராண்டுக்கு எல்லாம் சொல்ல முடியாது. அதேநேரம் 3 ஆண்டுகள் வைத்திருப்பேன் என்றால் தாராளமாகத் தங்கம் வாங்கலாம். இந்த ரேட்டுக்கு வாங்கலாம்” என்றார்.
தங்கத்தை வாங்கிவிட்டு அமைதியாக லாக்கரில் போட்டு வைத்துவிடுவேன்.. அதைப் பற்றி யோசிக்கவே மாட்டேன் என்பவர்கள் என்ன செய்யலாம் என்ற கேள்விக்கு அவர், “தாராளமாக வாங்கலாம். இன்னும் சிலர் நான் ரூ.5000- 6000 ரேஞ்சில் தங்கம் வாங்கினேன். இப்போது ரூ.13000ல் வாங்க வேண்டுமா எனக் கேட்கிறார்கள். இப்போது வலிக்கிறது எனச் சொல்வோர் நாளை கிராமுக்கு ரூ.20,000க்கு வாங்க வேண்டி இருக்கும்.
எளிமையாகச் சொல்கிறேன்
நான் எளிமையாகச் சொல்கிறேன்.. உனக்குத் தேவையா இல்லையா எனப் பாருங்கள்.. தேவை என்றால் வாங்குங்கள்.. தேவையில்லை என்றால் வாங்க வேண்டாம். இப்போது என்னிடம் இருக்கும் தங்கம் எனக்கு போதிய செக்யூரிட்டி தரும் அளவுக்கு இருக்கிறதா என்பதைப் பொறுத்து முடிவு செய்யுங்கள். எனது அடுத்த தலைமுறைக்கு எல்லாம் தர வேண்டும் என்றால் வாங்குங்கள்.. இல்லையென்றால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிராமுக்கு ரூ.30 முதல் 35 ஆயிரம் வரை கூட கொடுத்து வாங்க வேண்டி இருக்கும்.
கல்யாணம் இருக்கா?
இதைச் செய்யுங்கள்.. செய்ய வேண்டாம் எனச் சொல்வது என் வேலை இல்லை.. ஆனால், 5 ஆண்டுகளில் தங்கம் விலை ரூ.20,000ஐ தாண்டி இருக்கும் என்றே நான் சொல்கிறேன். தங்கம் விலை எப்போது மிகக் குறைந்த ரேஞ்சுக்கு போகும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. எனவே குறையக் குறைய வாங்குவதே சரியானதாக இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு தங்கத்தை வாங்குவதில் முடிவெடுக்க வேண்டும்.
உங்களுக்கு வீட்டில் கல்யாணம் இருக்கிறது என்றால் தங்கத்தை வாங்கலாம்.. அடுத்த ஓராண்டில் கல்யாணம் இருந்தாலும் சரி, 10 ஆண்டுகளில் கல்யாணம் இருந்தாலும் சரி தங்கத்தை வாங்குவதே சரியாக இருக்கும்” என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/who-should-buy-gold-now-and-how-to-decide-key-decision-on-buying-gold-explains-anand-srinivasan-786051.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

