
Tamilnadu
oi-Vignesh Selvaraj
திருநெல்வேலி: நெல்லையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் மூன்று சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி ஆனந்தசேகருக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தசேகர் என்பவரை கைது செய்திருந்தனர்.

கூலித் தொழிலாளியான ஆனந்தசேகர், 6, 7 மற்றும் 8 வயதுடைய 3 சிறுமிகளை மிரட்டி தனி வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஒரே நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த கொடூர சம்பவத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன் என அந்த சிறுமிகளை ஆனந்த் சேகர் மிரட்டினார். இதனால் பயந்துபோன சிறுமிகள் வெளியில் சொல்லவில்லை.
எனினும் அந்தச் சிறுமிகளின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தெரிந்தது.
இதை கவனித்த பெற்றோர்கள் அவர்களிடம் அன்பாக விசாரித்தனர். அப்போது தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை சிறுமிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆனந்தசேகரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது,
குற்றம் சாட்டப்பட்ட ஆனந்த சேகருக்கு மரண தண்டனை விதித்து இன்று போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கும் தலா ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/death-sentence-for-anandasekar-in-shocking-nellai-sexual-assault-case-of-three-girls-780777.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
