
India
oi-Vigneshkumar
கொல்கத்தா: ஆர்என் ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சூழலில், அம்மாநில முதல்வர் மம்தா சில கருத்துகளைக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நீங்கள் எதை வேண்டும் என்றாலும் செய்திருக்கலாம்.. ஆனால், மேற்கு வங்கத்தில் அதுபோல எல்லாம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஆளுநர் ரவி தமிழகத்தில் ஸ்டாலின் அரசைத் துன்புறுத்தியதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2021 முதல் ஆளுநராக இருந்தவர் ஆர்என் ரவி. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர், தமிழகத்தில் இருந்து மாற்றப்பட்டு, மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது கேரளம் ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழ்நாடு கூடுதல் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ரவி நியமனம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.

மம்தா
மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் பதவி விலகி இருந்தார். அவர் ராஜினாமா செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் புதிய ஆளுநர் ஆர்.என். ரவியை பாஜகவின் தொண்டர் என்றும் விமர்சித்தார். மம்தா பானர்ஜி இது தொடர்பாக மேலும் கூறுகையில், “சி.வி. ஆனந்த போஸ் எப்படி நீக்கப்பட்டார் பார்த்தீர்களா? ஆளுநர் மாளிகையை பாஜக கட்சி அலுவலகமாக மாற்ற அவர்கள் விரும்புகிறார்கள். டெல்லியின் ஆசைகளுக்கு அனைவரும் எப்போதும் உடன்பட மாட்டார்கள்” எனச் சாடினார்.
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், மார்ச் 5ம் தேதி ஆனந்த் போஸ் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தார். ராஜினாமாவுக்கான எந்தக் காரணத்தையும் அவர் குறிப்பிடவில்லை. புதிதாக மேற்கு வங்க ஆளுநராகப் பொறுப்பேற்ற ரவி, தமிழக ஆளுநராக இருந்தபோது ஸ்டாலின் அரசைத் துன்புறுத்தியதாகவும், உச்ச நீதிமன்றமே அவரது செயல்பாடுகள் குறித்துப் பல கருத்துகளைக் கூறியதாகவும் மம்தா குறிப்பிட்டார்.
வேலை நடக்காது
ஆளுநர் ஆர்.என்.ரவியை பாஜகவின் தொண்டர் என்று குறிப்பிட்ட மம்தா மேலும் பேசுகையில், “மேற்கு வங்கம் வேறு மாதிரியான ஒரு இடம்.. நீங்கள் தமிழ்நாட்டில் எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஆனால் இங்கே அதை எல்லாம் செய்ய முடியாது. மேலும், எந்த ஆளுநரும் முழு பதவிக்காலத்தை மத்திய அரசு முடிக்க அனுமதிப்பதில்லை. இதற்கு முன்பு துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கரையும் ராஜினாமா செய்ய வைத்தனர். ஆனால் ஒரு விஷயத்தை நான் திட்டவட்டமாகச் சொல்லிக் கொள்கிறேன்.. பாஜக எங்களை அச்சுறுத்த முயன்றால், அவர்கள் வீழ்ச்சிக்குத் தேவையான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
கேஸ் சிலிண்டர்
மத்திய கிழக்கு மோதல் காரணமாக வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இதனால் நாடு முழுக்க கேஸ் சிலிண்டர் பற்றாக்குறையும் கூட ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்திலும் மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என மம்தா தெரிவித்தார். இது தொடர்பாக மம்தா பேசுகையில், “கேஸ் சிலிண்டர் விலை ஏற்கனவே உயர்த்த ஆரம்பித்தனர். மேலும், எல்பிஜி சிலிண்டர்களை 21 நாட்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும் என்கிறார்கள். வீட்டில் கேஸ் தீர்ந்தால், 21 நாட்களுக்கு யாரும் சமைக்காமல் இருப்பாரா? இவற்றை நீங்கள் யோசிக்க மாட்டீர்களா? மக்கள் என்ன சாப்பிடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
உதவித் தொகை திட்டம்
இதற்கிடையே மம்தா அரசு புதிதாகத் தொடங்கியுள்ள ‘பாங்லார் யுவ சாத்தி’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி திட்டம் பலதரப்பு மக்களுக்குப் பெரியளவில் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், மாநிலத்தில் இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, இன்னும் வேலை கிடைக்காதவர்களுக்கு மாதந்தோறும் ₹1,500 உதவித்தொகையாக வழங்கப்படும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/mamata-to-governor-ravi-you-harassed-stalin-in-tamil-nadu-but-it-will-not-work-in-west-bengal-780149.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
