
International
oi-Hema Vandhana
மாஸ்கோ: இன்று உலகமே அதிகமாக பேசும் விஷயம் கச்சா எண்ணெய் பற்றியதாகத்தான் இருக்கும்.. பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏறினாலும் நம்முடைய வீட்டு பட்ஜெட்டும் சேர்ந்தே மாறுகிறது. பூமிக்கு அடியிலிருந்து எடுக்கும்போது பிசுபிசுப்பாக, கருப்பு நிறச் சேறு போல இருக்கும் இந்த கச்சா எண்ணெய்யை திரவத் தங்கம் என்கிறார்கள். இந்த ஒரு திரவம் மட்டும் இல்லாவிட்டால் இன்று உலகமே ஓடாது. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அழுக்குத் திரவம், எப்படி நாம் பயன்படுத்தும் பெட்ரோலாகவும், டீசலாகவும் மாறுகிறது என்பதை இங்கு சுருக்கமாக பார்ப்போமா…!!
கச்சா எண்ணெய்யை பொறுத்தவரை, அப்படியே எடுத்து வண்டியில் ஊற்ற முடியாது. அதை கிளீன் செய்துதான் பயன்படுத்த வேண்டும். இதற்காக பெரிய தொழிற்சாலைகளுக்கு இந்த எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

கருப்புத் தங்கம்
அங்கே ஒரு மிகப்பெரிய பாத்திரத்தில் ஊற்றி, சுமார் 400°C வெப்பநிலைக்கு இந்த எண்ணெயை கொதிக்க வைப்பார்கள். எண்ணெய் கொதிக்கும்போது ஆவியாக மாறும். அந்த ஆவியை ஒரு உயரமான கோபுரத்திற்குள் செலுத்துவார்கள்.
அந்தக் கோபுரத்தில் ஆவி மேலே செல்ல செல்ல, குளிர்ச்சியாகி மீண்டும் திரவமாக மாறும். இதில் ஹைலைட் என்னவென்றால், லேசான எடை கொண்ட பொருட்கள் கோபுரத்தின் உச்சிக்கு சென்றுவிடும். கனமான பொருட்கள் அடியிலேயே தங்கிவிடும்.., இப்படித்தான் ஒவ்வொரு பொருளாகப் பிரித்தெடுக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் – பொருட்கள்
கச்சா எண்ணெயிலிருந்து ஏகப்பட்ட பொருட்கள் கிடைக்கின்றன.. முதலில் கிடைப்பது நாம் வீட்டில் சமைக்கப் பயன்படுத்தும் எல்.பி.ஜி சிலிண்டர் கேஸ். அதற்கடுத்தபடியாக கார், பைக்குகளுக்கு ஊற்றும் பெட்ரோல் கிடைக்கிறது. இன்னும் கொஞ்சம் கீழே போனால் மண்ணெண்ணெய் மற்றும் வானத்தில் பறக்கும் விமானங்களுக்கு தேவையான உயர்தர எரிபொருள் கிடைக்கிறது.
அதற்கு அடுத்த அடுக்கில் லாரி, பஸ் போன்ற பெரிய வண்டிகளுக்கு பயன்படும் டீசல் கிடைக்கிறது. இதுமட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், சுவர்களில் பூசும் பெயிண்ட், ஏன்… கார் இன்ஜினில் ஊற்றும் ஆயில் கூட இதிலிருந்துதான் கிடைக்கிறது.
எல்லாவற்றையும் எடுத்து முடித்த பிறகு கடைசியில் அடியில் தங்கும் அந்த கருப்பு நிறக் கழிவுதான் நாம் சாலை போடப் பயன்படுத்தும் தார். அதாவது, கச்சா எண்ணெயில் ஒரு சொட்டு கூட குப்பையில் போவதில்லை.
பெட்ரோல் விலை உயர்வு
இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெயில் 85 சதவீதத்தை வெளிநாடுகளிலிருந்துதான் வாங்குகிறது. இதற்காகவே இந்தியா ஒரு பெரிய தொகையை செலவிடுகிறது.
சர்வதேச போர் சூழல் அல்லது டாலரின் மதிப்பு மாறும்போதுதான் இங்குப் பெட்ரோல் விலை ஏறுகிறது. இதை சமாளிக்க, இப்போது பெட்ரோலில் கரும்பிலிருந்து எடுக்கும் எத்தனால் என்ற பொருளை கலக்க அரசு முடிவு செய்துள்ளது. இது இறக்குமதி செலவைக் குறைக்கும். அதேபோல பெட்ரோல் வண்டிகளுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்தவும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மொத்தத்தில், கச்சா எண்ணெய் என்பது வெறும் எரிபொருள் மட்டுமே கிடையாது.. அது இந்த உலகையே இயக்கும் ஒரு மாபெரும் சக்தி., வருங்காலத்தில் மாற்று வழிகள் வந்தாலும், இப்போதைக்கு இந்த கருப்புத் தங்கம் தான் உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கிறது…!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/beyond-the-barrel-how-putin-s-discounted-black-gold-is-powering-india-s-daily-essentials-782651.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
