
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் 5வது வாரமாகத் தொடரும் சூழலில், அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். குறிப்பாக இஸ்ரேலுக்காகவே இந்த போரில் அமெரிக்கா ஈடுபடுவதாகச் சாடிய பெசெஷ்கியன், இதில் அமெரிக்காவுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஆரம்பித்த போர் சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த போர் ஓரிரு வாரங்களிலேயே முடிந்துவிடும் என்றே பலரும் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் பாதிப்புகள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

ஈரான் அதிபர் கேள்வி
நடுவே போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுவார்த்தை நல்ல நிலையிலேயே இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுக்கும் ஈரான், போர் ஆரம்பித்தது முதல் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை எனக் கூறி வருகிறது. இதற்கிடையே அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அமெரிக்க மக்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் சொல்வதைக் கேட்கும் டிரம்ப்
மத்திய கிழக்கில் இப்போது டிரம்ப் நடத்தி வரும் மோதல் உண்மையாகவே அமெரிக்காவின் நலன்களுக்கு தானா எனக் கேள்வி எழுப்பினார். அமெரிக்கா போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாகச் சாடிய பெசெஷ்கியன், இஸ்ரேல் சொல்வதைக் கேட்டே அமெரிக்கா செயல்பட்டு வருவதாகவும் சாடினார். தனது சமூக வலைத்தளத்தில் இந்த கடிதத்தை வெளியிட்டுள்ள பெசெஷ்கியன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் மேலும், “ஈரானின் எரிசக்தி மற்றும் தொழிற்துறை வசதிகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்பைத் தாக்குவது என்பது எப்படி ராணுவ நடவடிக்கையாகும். இது நேரடியாக ஈரான் மக்களை இலக்காகக் கொள்ளும் தாக்குதல்.. இது போர்க் குற்றம் மட்டுமல்லாது, ஈரான் நாட்டிற்கு வெளியேயும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும்.. இத்தகைய செயல்கள் சர்வதேச அளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். உயிரிழப்புகள் அதிகரிக்கும்.. பொருளாதார செலவுகள் மோசமாகும். போர் ஆண்டுக் கணக்கில் நீடிக்கும் சூழலை உருவாக்கும்.
அமெரிக்காவுக்கு என்ன நன்மை
நான் ஒன்றை மட்டும் அமெரிக்க மக்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்காவின் நலன் எனச் சொல்லும் டிரம்ப் இந்த போரை நடத்துகிறார். உண்மையாகவே இந்த போரால் அமெரிக்காவுக்கும் அமெரிக்கர்களுக்கும் என்ன நன்மை கிடைக்கிறது? இந்த போரை நியாயப்படுத்த ஈரானிடமிருந்து எதாவது அச்சுறுத்தல் இருந்ததா? இஸ்ரேலின் பிரதிநிதியாக… இஸ்ரேல் சொல்வதைக் கேட்டே அமெரிக்கா இந்த போரில் ஈடுபட்டு வருகிறது.. அமெரிக்கா ஃபர்ஸ்ட் என்பது இந்த போரில் இருக்கிறதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
எதிரிகள் இல்லை
சாதாரண அமெரிக்கர்கள் ஈரானின் எதிரிகள் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் மேலும், “மோதல் வேண்டுமா அல்லது நல்லுறவு வேண்டுமா என்று முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.. இந்த முடிவே எதிர்காலத் தலைமுறைகளின் போக்கை வடிவமைக்கும்.. கடந்த காலங்களில் ஈரான் மீது பலரும் படையெடுத்துள்ளனர். அப்படி ஈரான் மீது படையெடுத்து வந்தவர்கள் பெயர்கள் வரலாற்றில் களங்கத்துடன் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், ஈரான் கண்ணியம் மற்றும் பெருமையுடன் இன்றும் துணிந்து நிற்கிறது” என்றார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-president-questions-us-attack-asks-if-the-middle-east-crisis-really-puts-america-first-786441.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
