
India
oi-Vigneshkumar
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாகத் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. இதற்கிடையே அங்குள்ள ஒரே வாக்குச்சாவடியில் இருந்து 340 இஸ்லாமியர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர்கள் உரிய ஆவணங்களைக் கொடுத்த போதும் தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பல்வேறு மாநிலங்களிலும் சமீபத்தில் தான் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்றது. அதன்படி மேற்கு வங்கத்திலும் எஸ்ஐஆர் பணிகள் நடந்தது. இருப்பினும், அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக திரிணாமுல் தரப்பு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க எஸ்ஐஆர் தொடர்பாக மற்றொரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

340 பெயர்கள் நீக்கம்
அதாவது மேற்கு வங்கத்தின் பசிர்ஹத் வடக்கு சட்டசபை தொகுதியில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அங்குப் போரோ கோப்ரா கிராமத்தின் 5ஆம் எண் வாக்குச்சாவடியைச் சேர்ந்த 340 இஸ்லாமிய வாக்காளர்களின் பெயர்கள் துணை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதே இதற்குக் காரணம். வரைவுப் பட்டியலில் “பரிசீலனையில்” இருந்த அவர்களின் பெயர்கள், திங்களன்று வெளியான முதல் துணைப் பட்டியலுக்குப் பிறகு நீக்கப்பட்டன.
இதில் விஷயம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட இடத்தில் வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக எம்.டி. ஷஃபிவுல் ஆலம் என்பவர் இருந்தார். அவரது பெயரும் கூட துணை பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது. இது அங்கு மாநிலத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு இது தொடர்பாக போராட்மட் நடத்தினர். முஸ்லீம் என்பதாலேயே குறிவைத்து அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.
அதிருப்தி
தேர்தல் அதிகாரிகள் வெளிப்படைத்தன்மையின்றி நடந்து கொள்வதாக மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். உள்ளூர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் விமர்சித்தனர். இது தொடர்பாக பசிர்ஹத் பிளாக் IIஇன் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பிஎல்ஓ ஆலம் நேரடியாக முறையிட்டுள்ளார். இருப்பினும், இதற்கு மேல் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. மேலும், தேர்தல் பதிவு அதிகாரியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
புகார்
இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் கூறுகையில், “சட்டப்படி எஸ்ஐஆர் பணிகளில் ஒரே ஒரு ஆவணத்தைக் கொடுத்தால் போதும். ஆனால், நாங்கள் பலரும் 3 முதல் 4 ஆவணங்களைக் கூட கொடுத்தோம். ஆனாலும், எங்கள் பெயர்களை நீக்கிவிட்டார்கள். அரசியல் அழுத்தத்தால் இதுபோல நடந்து கொண்டுள்ளனர். குறிப்பிட்ட பிரிவை திருப்திப்படுத்தவே இதுபோல செய்துள்ளனர்” என்றார். இந்த விவகாரத்தில் சட்ட நிவாரணம் கோரி தீர்ப்பாயத்திற்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
களநிலவரம்
மேற்கு வங்கத்தில் பசிர்ஹத் பிளாக் II, பேகம்பூர் பீபிபூர் கிராம பஞ்சாயத்துப் பகுதியில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்கு 5ஆம் எண் வாக்குச்சாவடியில் மொத்தம் 992 வாக்காளர்கள் உள்ளனர். மரணம், அங்கிருந்து குடியேறியது ஆகிய வழக்கமான காரணங்களுக்காக 38 பெயர்கள் நீக்கப்பட்டனர். சந்தேகம் இருப்பதால் 358 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அதில் 18 பேரின் வழக்குகள் பிரச்சனையின்றி முடிந்தது. எஞ்சிய 340 பேர் 23ஆம் தேதி வெளியான துணை பட்டியலில் நீக்கப்பட்டனர். உரிய விதிகளைப் பின்பற்றிய பிறகும் தங்கள் பெயர்கள் வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக பிஎல்ஓ ஆலம் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் நடந்த பீபிபூர் பஞ்சாயத்து பசிர்ஹாட் உத்தர் சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தொகுதியில் கடந்த 4 தேர்தல்களில் இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் மாறி மாறியே வென்றுள்ளன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளில் ஒன்றாக இது இருப்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/west-bengal-election-sir-basirhat-booth-340-muslim-voters-deleted-including-blo-protests-erupt-784575.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
