
International
oi-Velmurugan P
பாரிஸ்: “எங்கள் நாட்டுத் தரவுகள் எங்களுக்கே சொந்தம்.. இனி அமெரிக்காவின் தயவு தேவையில்லை” என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு அதிரடியாக கல்தா கொடுத்துள்ளது பிரான்ஸ் அரசு. அமெரிக்கா அரசு கனவிலும் நினைக்காத இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் அந்த அதிரடி அரசியல் பின்னணிதான் இப்போது உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இத்தனை காலமும் அரசு அலுவலகங்களில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மென்பொருளைப் பயன்படுத்தி வந்த பிரான்ஸ், இனி அதற்குப் பதிலாக இலவச மற்றும் பாதுகாப்பான ‘லினக்ஸ்’ மென்பொருளுக்கு மாறப்போவதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக அந்நாட்டின் டிஜிட்டல் முகமையான DINUM-ல் உள்ள கணினிகள் அனைத்தும் மாற்றப்பட இருக்கிறது

இது குறித்துப் பிரான்ஸ் அமைச்சர் டேவிட் ஆமியேல் உருக்கமாகப் பேசுகையில், “எங்கள் டிஜிட்டல் விதியை இனி நாங்களே தான் தீர்மானிக்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்களின் பிடியில் சிக்கித் தவிப்பதை இனி ஏற்றுக்கொள்ள முடியாது” என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
இந்தத் திடீர் மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் அந்தப் பின்னணித் தகவல் தான் உண்மையான விபரீதம். 2025 ஜனவரியில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபரான பிறகு, உலகத் தலைவர்கள் மீதான அவரது பிடி இறுகி இருக்கிறது. தனக்குப் பிடிக்காதவர்கள் மீது ட்ரம்ப் விதிக்கும் பொருளாதாரத் தடைகளால், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படுவதோடு, அமெரிக்கத் தொழில்நுட்பச் சேவைகளும் (கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்றவை) அதிரடியாக திடீரென நிறுத்தப்படுகின்றன.
எப்போது வேண்டுமானாலும் மைக்ரோசாஃப்ட் சேவையை அமெரிக்கா துண்டிக்கலாம் என்ற அச்சம் தான் பிரான்ஸை இந்த விபரீத முடிவை எடுக்க வைத்துள்ளது. பிரான்ஸ் எடுத்திருப்பது இது முதல் முடிவல்ல. ஏற்கனவே மைக்ரோசாஃப்ட் ‘டீம்ஸ்’ பயன்பாட்டைத் தூக்கி எறிந்துவிட்டு, தங்கள் நாட்டுத் தயாரிப்பான ‘விசியோ’ என்ற மென்பொருளுக்கு மாறிவிட்டனர். அதுமட்டுமின்றி, மக்களின் சுகாதாரத் தரவுகளையும் மைக்ரோசாஃப்ட் கிளவுடில் இருந்து எடுத்துத் தங்கள் நாட்டுப் பாதுகாப்புத் தளத்திற்கு மாற்றத் திட்டமிட்டுள்ளனர்.
தொழில்நுட்ப உலகில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட பிரான்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சி, மற்ற ஐரோப்பிய நாடுகளையும் சிந்திக்க வைத்துள்ளது. பின்னாளில் மற்ற நாடுகளை போல் ஒரு நிலை வரக்கூடாது என நினைத்த பிரான்ஸ், முன்கூட்டியே உஷாராகிவிட்டதாகவே பார்க்கப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/france-ditching-microsoft-windows-is-europe-afraid-of-us-tech-dominance-the-untold-story-788867.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


