
International
-Vigneshkumar
துபாய்: அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தான் போர் நடக்கிறது. அப்படி இருக்கும் போது அமீரகத்தை ஏன் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ஈரான் இதுபோல ஏன் செய்கிறது.. சம்பந்தமே இல்லாமல் அமீரகத்தைத் தாக்குவது ஏன் என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரில் வளைகுடா நாடான ஐக்கிய அமீரகம் உள்ளே வந்துள்ளது. அமீரகம் இந்த போரில் தாக்குதலில் இறங்கவில்லை என்றாலும் ஈரான் குறிவைத்துத் தாக்கும் முக்கிய நாடாக அமீரகம் மாறியுள்ளது. இந்த மோதல் தீவிரமடைந்ததில் இருந்து, எமிரேட்ஸ் மீது 1,714 ட்ரோன்கள், 334 பாலிஸ்டிக் மற்றும் 13 குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதல்
இதில் ஹோட்டல்கள், சுத்திகரிப்பு ஆலைகள், விமான நிலையங்கள், முக்கிய வணிகப் பகுதிகள் இதில் குறிவைக்கப்பட்டுள்ளன. அமீரகத்திற்கும் இந்த போருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அப்படியிருக்கும்போது அமீரகத்தை ஈரான் ஏன் இவ்வளவு தீவிரமாகத் தாக்குகிறது என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. அங்கு அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளன என்பதைத் தாண்டி, இதன் பின்னணியில் சிக்கலான பொருளாதாரக் காரணங்கள் உள்ளன.
காரணம்
அமெரிக்காவுக்கும் அமீரகத்திற்கும் இடையே வலுவான பொருளாதார தொடர்பு இருக்கிறது. டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அதிபரானபோது, பெரிய வெளிநாட்டு முதலீடுகளை அவர் நாடியபோது, அமீரமக் மிக பெரியளவில் பங்களித்தது. 2025ல் அமெரிக்கா $5.2 டிரில்லியன் வெளிநாட்டு முதலீட்டு உறுதிமொழிகளைப் பெற்ற நிலையில், அதில் அமீரகம் மட்டும் $1.4 டிரில்லியன் (27%) கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்தது. இது மற்ற நாடுகளை (கத்தார் $1.2 டிரில்லியன், ஜப்பான் $1 டிரில்லியன், சவுதி அரேபியா $600 பில்லியன், இந்தியா $500 பில்லியன், தென் கொரியா $450 பில்லியன், பஹ்ரைன் $17 பில்லியன், அயர்லாந்து $6.1 பில்லியன்) விட அதிகமாகும்.
அமெரிக்காவுக்கு செய்துள்ள இந்த முதலீட்டு உறுதிமொழி முதல் காரணம். இதேபோக அமீரகம் தன்னை உலகளாவிய முதலீட்டு மையமாக நிலைநிறுத்த முயல்கிறது. 1000க்கும் மேற்பட்ட வணிக, தொழில்துறை நடவடிக்கைகளில் 100% வெளிநாட்டு உரிமைக்குத் துபாய் அனுமதித்ததால், கடந்த 10 ஆண்டுகளில் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் அபரிமிதமாக அதிகரித்தன. கடந்த 2018ல் $10.4 பில்லியனில் இருந்து அந்நிய முதலீடு 2021ல் $20.7 பில்லியனாகவும், 2024ல் $45.6 பில்லியனாகவும் உயர்ந்துள்ளதை உலக வங்கி டேட்டா காட்டுகிறது.. 2024ல் மேற்காசியாவுக்கு வந்த முதலீடுகளில் 56% அமீரகத்திற்கே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலீடுகள்
மேலும், பொதுவாகவே மத்திய கிழக்கில் அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத் போன்ற நாடுகளில் அரசியல் நிலையாக இருக்கும். அங்கு பாலிசிக்கள் சட்டென மாறாது. இதனால் முதலீட்டுக்கு உகந்த மற்றும் பாதுகாப்பான இடமாக இவை கருதப்படுகின்றன. அதுவும் குறிப்பாக அமீரகம் மிகவும் ஸ்திரத்தன்மை கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே துபாய், அபுதாபி ஆகியவை முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
ஈரானின் இலக்காக அமீரகம் மாற இவையே பிரதான காரணங்களாக உள்ளன. அமீரகத்தைத் தாக்குவதன் மூலம், ஈரான் அமெரிக்காவை நேரடியாகத் தாக்காமல், அதன் முக்கியப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதாவது அமெரிக்கா வெகு தொலைவில் இருப்பதால் அதை நேரடியாகத் தாக்க முடியாது. ஆனால், அமீரகத்தைத் தாக்குவதன் மூலம் அமெரிக்க மற்றும் அமெரிக்கர்களின் பொருளாதாரத்தை முதலீட்டைப் பாதிக்க முடியும். இதை உணர்ந்தே ஈரான் அமீரகம் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.
நேரடி அடி!
சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் மூலம் பல ஆண்டுகளாக வளைகுடாப் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை அமீரகம் கட்டமைத்து வந்தது. அந்த நம்பிக்கையையும் பிளவுபடுத்த ஈரான் முயல்கிறது. இந்த ஒவ்வொரு தாக்குதலும் அமீரகம் உருவாக்கிய பிம்பத்திற்கும், அதன் மூலம் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சூழலியலுக்கும் விழும் அடியாகும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/why-iran-attacking-uae-the-invisible-connection-that-will-directly-us-and-its-economy-fastest-011-783255.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
