அமெரிக்காவில் ஒரு இன்ச் கூட இனி பாதுகாப்பு இல்லை.. செய்து காட்டிய ஈரான்.. இதுதான் தரமான சம்பவம்! | No place in USA is safe anymore: Iran ballistic attack in Indian ocean has bigger story

International

oi-Shyamsundar I

டெஹ்ரான்: ஈரான் ஏவுகணைகளின் உண்மையான வீச்சு என்ன? அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ராணுவக் கோட்டையாகக் கருதப்படும் டீகோ கார்சியாவை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணைகள் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றம், இப்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டிருக்கிறது. இதுவரை ஈரான் ஏவுகணைகள் அதிகபட்சமாக 2,000 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே பாயும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், சனிக்கிழமை அன்று ஈரான் நடத்திய இந்தத் துணிச்சலான முயற்சி, உலக நாடுகளின் ராணுவக் கணக்குகளை தலைகீழாக மாற்றியிருக்கிறது.

Iran Israel war

நடந்தது என்ன?

ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளமான டீகோ கார்சியாவை (Diego Garcia) நோக்கி இரண்டு நடுத்தர தூர ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. ஈரானிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தளத்தைக் குறிவைத்திருப்பது இதுவே முதல்முறை.

இதில் ஒரு ஏவுகணை நடுவானிலேயே செயலிழந்து விழுந்ததாகவும், மற்றொன்றை அமெரிக்காவின் ‘SM-3’ ரக இடைமறிப்பு ஏவுகணை தடுத்து அழித்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதல் முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதைத் தாண்டி, ஈரான் காட்டியிருக்கும் “தூரம்தான்” இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.

திடுக்கிடும் திருப்பம்: 2,000 டூ 4,000!

ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி இதற்கு முன்பு, “எங்கள் ஏவுகணைகளின் எல்லை 2,000 கிலோமீட்டர்தான்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது 4,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்க முயன்றதன் மூலம், ஈரான் தனது உண்மையான பலத்தை உலகிற்கு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறது.

“எதிரிகள் கற்பனை செய்ததை விட ஈரானின் ஏவுகணை வீச்சு அதிகம் என்பதை இந்த நடவடிக்கை நிரூபித்துள்ளது” என மெஹ்ர் செய்தி நிறுவனம் மார்தட்டியுள்ளது.

பிரிட்டன் கண்டனம்.. ட்ரம்ப் விமர்சனம்!

இந்தத் தாக்குதல் முயற்சியை “பொறுப்பற்ற செயல்” என பிரிட்டன் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதே சமயம், பிரிட்டனின் தாமதமான முடிவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார். “பிரிட்டனிடமிருந்து இவ்வளவு தாமதமான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. நமது உறவு மிகவும் நெருக்கமானது, அவர்கள் இன்னும் வேகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் இந்த டீகோ கார்சியா முக்கியம்?

இந்தியப் பெருங்கடலின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவு, அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத் தளம். இங்கிருந்துதான் பிரம்மாண்ட குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் உளவு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வளவு தொலைவில் உள்ள ஒரு தளத்தை ஈரான் குறிவைத்திருப்பது, இனி எந்த அமெரிக்கத் தளமும் பாதுகாப்பானது அல்ல என்ற அரசியல் செய்தியை உரக்கச் சொல்கிறது.

அடுத்தது என்ன?

ஈரானின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பென்டகன் கூடுதல் போர்க்கப்பல்களையும் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களையும் மத்திய கிழக்கு மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பம் ஐரோப்பாவின் தெற்குப் பகுதி வரை பாயும் வல்லமை கொண்டதா என்ற அச்சமும் தற்போது எழுந்துள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக இந்த ஏவுகணைகள் இலக்கைத் தாக்கத் தவறினாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்திற்குள் ஊடுருவ முடியும் என்ற ஈரானின் சிக்னல், சர்வதேச அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/no-place-in-usa-is-safe-anymore-iran-ballistic-attack-in-indian-ocean-has-bigger-story-783489.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo