
Business
oi-Prasanna Venkatesh
டெல்லி: மத்திய கிழக்கு போருக்கு மத்தியில் இந்தியாவுக்கு வந்துக்கொண்டு இருந்த ஈரான் கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் திடீரென சீனாவுக்கு திருப்பப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஈரானுக்கு அளிக்க வேண்டிய பேமெண்ட் தொகையை இந்தியா வழங்காதது தான் என கருத்து வெளியாகி வந்த நிலையில் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சகம் இதற்கு நேரடியாக விளக்கம் கொடுத்துள்ளது.
ஈரான் நாட்டின் IRGC ராணுவ படையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்மூஸ் வழித்தட்டத்தில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் செல்ல சில நாடுகளுக்கு மட்டுமே ஈரான் அனுமதி அளித்து வருகிறது. இதில் இந்தியாவும் ஒன்று, இதேபோல் இப்பாதையில் பயணிக்க வேண்டும் என்றால் பலதரப்பட்ட தரவுகளை சமர்ப்பித்து டோல் தொகையை IRGC ராணுவ படைக்கு கொடுத்த பின்பு பயணிக்க அனுமதி கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் கப்பல் சீனாவுக்கு சென்றுள்ளதற்கு காரணம் டோல் தொகை கொடுக்காதது தான் என தகவல் வெளியான தகவல்களை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் முழுமையாக மறுத்துள்ளது. இந்த தகவல்கள் ‘உண்மைக்கு புறம்பானவை’ என அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசின் விளக்கம்
இதுக்குறித்த மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு வாயிலாக வெளியிட்ட விளக்கத்தில், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தேவையான அளவு கச்சா எண்ணெயை முன்கூட்டியே உறுதி செய்துள்ளது. இதில் ஈரானிலிருந்தும் கிடைக்கும் விநியோகங்கள் அடங்கும்.
மேலும், இந்தியா 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், தேவைக்கேற்ப கொள்முதல் மூலங்களை மாற்றிக் கொள்ளும் சுதந்திரம் நிறுவனங்களுக்கு இருப்பதாகவும் வலியுறுத்தப்பட்டது. ‘ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு பணம் செலுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை’ என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.
கப்பல் திசைமாற்றம்
Ping Shun என்ற கப்பல், சுமார் 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் குஜராத்தின் வாடிநார் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டு இருந்த போது, திடீரென சீனாவை நோக்கி திசைமாற்றம் செய்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இந்த வகையான திசைமாற்றங்கள் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சாதாரணமானவை என பெட்ரோலியம் துறை அமைச்சகம் விளக்கியது. கடலில் இருக்கும் சரக்குகள், சந்தை நிலைமை மற்றும் வணிக காரணிகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான நடைமுறை என்று விளக்கியது.
LPG விநியோகம்
இதற்கிடையில் ஹார்மூஸ் வழியாக இந்தியாவுக்கு LPG விநியோகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘Green Sanvi’ என்ற இந்தியக் கப்பல் சுமார் 46,000 டன் LPG சரக்குடன் இவ்வழித்தடத்தை வெள்ளிக்கிழமை கடந்து வந்துள்ளது. இதற்கு முன் 6 கப்பல்கள் ஏற்கனவே இந்தியாவை வந்துள்ள நிலையில், இது 7வது கப்பல்.
ஈரான் எண்ணெய் கப்பல் தொடர்பான வதந்திகள் உண்மையற்றவை என்றும், இந்தியாவின் எரிசக்தி விநியோகம் நிலையாக உள்ளதையும் மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளாவிய பதற்ற சூழ்நிலையிலும், பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் திறனும், நடப்பும் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பலமாக இருக்கிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/iranian-crude-oil-ship-diverted-to-china-on-payment-issue-petroleum-ministry-dismisses-reports-as-787121.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
