
International
oi-Halley Karthik
கொழும்பு: ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஆசிய நாடுகளை இந்த விலை ஏற்றம் பாதித்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.460 என்கிற அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலைகள் இன்று முதல் 25% உயர்த்தப்பட்டுள்ளன. சமீபத்தில்தான் பொருளாதார பிரச்சனைகளிலிருந்து இலங்கை வெளியே வந்தது. இப்படி இருக்கையில் பெட்ரோல் விலை உயர்வு, மீண்டும் இந்த பிரச்சனைக்குள் இலங்கையை தள்ளும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புதிய விலை நிலவரம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய இரு நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன.
பெட்ரோல் (92 Octane): ஒரு லிட்டர் சுமார் ரூ. 370-லிருந்து ரூ. 460-ஆக உயர்வு.
டீசல் (Auto Diesel): ஒரு லிட்டர் சுமார் ரூ. 315-லிருந்து ரூ. 395-ஆக உயர்வு.
மண்ணெண்ணெய்: மீன்பிடி மற்றும் சமையல் தேவைகளுக்கான மண்ணெண்ணெய் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏன் இந்த திடீர் உயர்வு?
ஈரான்-இஸ்ரேல் மோதலால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $120-ஐத் தாண்டியுள்ளது. இதற்கு முன்னர் இதன் விலை $90-ல் இருந்தது. அதேபோல, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் காப்பீடு மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது. இன்னொரு முக்கியமான காரணம், டாலர் தட்டுப்பாடு. இலங்கை தனது இறக்குமதிக்குத் தேவையான டாலர்களைச் செலுத்த சிரமப்படுவதால் விலை அதிகரித்திருக்கிறது.
பாதிப்புகள் என்ன?
எரிபொருள்தான் எல்லாவற்றிற்கும் அத்தியாவசியம். எனவே அதன் விலை உயர்ந்தால், மற்ற பொருட்களின் விலையும் கணிசமாக உயரும். பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் 20% முதல் 30% வரை உயர வாய்ப்புள்ளது. லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உடனடியாக உயரும். டீசல் மூலம் இயங்கும் வெப்ப மின் நிலையங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பதால், மின் கட்டணமும் உயர்த்தப்படலாம்.
இந்தியாவுக்கும் பாதிப்பு
இலங்கையை போலவே இந்தியாவிலும் கூடிய சீக்கிரத்தில் எரிபொருள் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 5 மாநில தேர்தல் வருவதால், இந்த நேரத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவது மத்திய அரசுக்கு பேக் ஃபயராக அமைந்துவிடும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/sri-lanka-hikes-fuel-prices-by-25-amid-middle-east-war-petrol-and-diesel-rates-skyrocket-783539.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
