
Tamilnadu
oi-Hema Vandhana
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியை ரசிக்க வந்த ஒரு இளைஞருக்கு, ஒரு நொடி கவனக்குறைவு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அச்சத்தை ஏற்படுத்தி விட்டது.. ஊட்டியில் உள்ள புகழ்பெற்ற ஊசிமலை காட்சி முனை (Needle Rock View Point) பகுதியில் செல்பி எடுக்க முயன்றபோது, 150 அடி ஆழமுள்ள அடர்ந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்துவிட்டார் இந்த இளைஞர்.. இந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம் பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
மதுரையை சேர்ந்தவர் சிவகுருநாதன்.. இவருக்கு 28 வயதாகிறது.. தன்னுடைய நண்பர்களுடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார் சிவகுருநாதன்..

ஊட்டி ஊசிமலை பள்ளம்
கூடலூர் அருகே உள்ள ஊசிமலை காட்சி முனையில் இயற்கை அழகை நேற்றைய தினம் ரசித்துக் கொண்டிருந்தபோது, பாறையின் நுனிப்பகுதியில் நின்று செல்பி எடுக்க சிவகுருநாதன் முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி, கண்ணிமைக்கும் நேரத்தில் செங்குத்தான 150 அடி ஆழ பள்ளத்திற்குள் அவர் உருண்டு விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
நீலகிரி சுற்றுலா பயணி
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், முதற்கட்டமாக கயிறுகளின் உதவியுடன் பள்ளத்திற்குள் இறங்க முயன்றார்கள்.. ஆனால், அந்தப் பகுதி மிகவும் செங்குத்தாகவும், அடர்ந்த புதர்கள் மற்றும் பாறைகள் நிறைந்ததாகவும் இருந்ததால் மீட்புப் பணியில் கடும் சவால்கள் முளைத்தன.
அதற்குள் இரவு நேரம் நெருங்கியதால் போதிய வெளிச்சம் இல்லாமலும், கடும் குளிரினாலும் மீட்புப் பணி தொய்வடைந்தது. இருந்தாலும் அந்த இளைஞரின் உயிரைக் காக்க வேண்டும் என்ற முனைப்பில் மீட்புக் குழுவினர் விடிய விடியப் போராடினர்.
12 மணி நேர போராட்டம்
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, ராணுவ மீட்புக் குழுவினர் மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். சுமார் 12 மணி நேர தொடர் போராட்டத்திற்குப் பிறகு, நவீன பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ராணுவத்தின் துரித நடவடிக்கையால் சிவகுருநாதன் உயிருடன் மீட்கப்பட்டார். 150 அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவரைப் பாதுகாப்பாக ஒரு ஸ்ட்ரெச்சரில் கட்டி மேலே கொண்டு வருவதற்கு பல மணி நேரங்கள் பிடித்தன.
உடனடியாக அங்கேயே முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகுருநாதன்
இப்போது சிவகுருநாதன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். செல்பிக்காக ஆபத்தான இடங்களுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு இந்தச் சம்பவம் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
சுற்றுலாத் தலங்களில் உள்ள பாதுகாப்பு வேலிகளைத் தாண்டிச் செல்வதும், விளிம்புப் பகுதிகளில் நின்று புகைப்படம் எடுப்பதும் எத்தகைய பேராபத்தை விளைவிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. 12 மணி நேரம் மரண பயத்துடன் பள்ளத்தில் சிக்கியிருந்த இளைஞரை மீட்ட ராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் விபத்து நடந்த நேரத்திலிருந்து சுமார் 12 மணி நேரமாக சிவகுருநாதன் அந்த இருண்ட பள்ளத்தில் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த நிமிடங்கள், அங்கிருந்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் திக் திக் நிலையை ஏற்படுத்தி விட்டதாம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/150-foot-death-trap-in-ooty-how-sivagurunathan-survived-12-hours-of-terror-at-needle-rock-miracle-782833.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
