
Business
oi-Prasanna Venkatesh
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகெங்கும் வர்த்தகங்களை மாற்றி அமைக்கும் இந்த காலகட்டத்தில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் தனது நான்காம் காலாண்டு மற்றும் முழு நிதியாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. டிசிஎஸ் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் இந்த நிதியியல் முடிவுகளைப் பார்க்கும்போது, வளர்ச்சி சற்று மிதமானதாக இருந்தாலும், AI மூலம் நிறுவனத்தின் லாபத்தை பாதுகாக்கும் மற்றும் எதிர்காலத்திற்கு தயாராக்கும் ஒரு முக்கியமான காலாண்டாக இதைப் புரிந்துகொள்ளலாம்.
இது டிசிஎஸ்-ஐ AI நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில் உள்நாட்டில் அதன் சேவைக்கு வலுசேர்கும் வகையில் ‘டி-ரிஸ்கிங்’ காலாண்டு எனவும் கூறலாம். டிசிஎஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இது மிகவும் முக்கியமான காலாண்டாக அமைந்துள்ளது, இக்காலாண்டு முடிவை எப்படி பார்க்க வேண்டும் என்பதையும் இப்போது பார்ப்போம்.

டிசிஎஸ் காலாண்டு முடிவுகள்
டிசிஎஸ்-ன் 4ஆம் காலாண்டு வருவாய் ரூ.70,698 கோடியைத் தொட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது சுமார் 10 சதவீதம் அதிகமாகும். முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது 5.4 சதவீத வளர்ச்சியைக் காட்டுகிறது.
இது நிலையான நாணய மதிப்பில் கணக்கிடும் போது காலாண்டு வளர்ச்சி 1.2 சதவீதமாக இருக்கிறது. உலகளவில் ஐடி தேவைக்கான டிமாண்ட் குறைந்துள்ள நிலையிலும் முன்னேற்றத்தைக் காட்டுகிறது முக்கியமான பலமாக பார்க்கப்படுகிறது.
4ஆம் காலாண்டில் நிகர லாபம் ரூ.13,718 கோடியாக இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 12.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இயக்க லாப வரம்பு 25.3 சதவீதமாக 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்ததுள்ளது கவனிக்கப்பட வேண்டியது.
மேலும் இந்நிறுவனத்தின் முழு நிதியாண்டு (FY26) இயக்க லாப வரம்பு 25 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்த அளவாகும். நிகர லாப வரம்பும் 80 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 19.8 சதவீதமாக உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய IT சேவை நிறுவனமாக டிசிஎஸ் இந்த காலக்கட்டத்தில் லாபத்தை நிலையாக வைத்துக்கொண்டு, பணப்புழக்கத்தை வலுப்படுத்தியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விஷயமாக உள்ளது.
AI வருவாய் முக்கியத்துவம்
AI இனி வெறும் பேச்சு பொருளாக இந்திய டெக் துறையில் இருக்கப்போவது இல்லை என்பதை உணர்த்தும் வகையில், டிசிஎஸ்-க்கு ஏஐ துறை தற்போது முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியுள்ளது என்பதை இக்காலாண்டில் முடிவின் மூலம் காட்டியுள்ளது.
4ஆம் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் AI பிரிவு வருவாய் 2.3 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டியது. இது முந்தைய காலாண்டின் 1.8 பில்லியன் டாலரிலிருந்து வேகமாக உயர்ந்துள்ளதை காட்டுகிறது. டிசிஎஸ் இதுவரை சுமார் 5,500 AI திட்டங்களில் பணியாற்றியுள்ளது. AI தொழில்நுட்பத்தை டிசிஎஸ் நிறுவனம் தனது எதிர்காலத்தை தீர்மாணிக்கும் ஐந்து முக்கிய தூண்களில் ஒன்றாக வைத்துள்ளது.
டிசிஎஸ் நிறுவனத்தின் 2026ஆம் நிதியாண்டின் மொத்த வருவாய் சுமார் ரூ.2.67 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், AI பிரிவு வருவாய் 7-9 சதவீத பங்கீட்டை பெற்றுள்ளது. இது சிறிய விஷயமல்ல, மொத்த வணிகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பாதைக்கு மிகவும் முக்கியமானது.
மேலும் AI சேவைகளை டிசிஎஸ் ப்ராடெக்ட் வடிவில் விரிவுபடுத்தி, அதன் லாப வரம்புகளை பாதுகாத்துள்ளது. இது AI யுகத்தில் டிசிஎஸ் பின்தங்கிய நிலையில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
AI உள்கட்டமைப்பு
டிசிஎஸ் தனது HyperVault தளத்தைப் பயன்படுத்தி OpenAI, AMD மற்றும் ABB போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து முக்கிய பார்ட்னராக மாற்றியுள்ளது. இதை டிசிஎஸ் Infrastructure‑to‑Intelligence என்று அழைக்கிறது.
OpenAI உடனான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் 100 மெகாவாட் திறன் கொண்ட AI உள்கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இது 1 ஜிகாவாட் வரை விரிவாக்கும் வாய்ப்பும் உள்ளது. இது டிசிஎஸ் அடுத்த தலைமுறை AI பணிகள் மற்றும் நாட்டின் சொந்த AI திட்டங்களுக்கும் இந்த கட்டமைப்பு பெரிய அளவில் உதவும். இதை சொந்தமாக டிசிஎஸ் வைத்துள்ளது மூலம் கூடுதல் வருவாய், கூடுதல் லாபத்தை டிசிஎஸ் பெர வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
AMD உடன் இணைந்து ‘ஹீலியோஸ்’ தளத்தை அடிப்படையாகக் கொண்ட ரேக் அளவிலான AI உள்கட்டமைப்பை உருவாக்குகிறது டிசிஎஸ். இது 200 மெகாவாட் அளவிலான AI டேட்டா சென்டர்-ஐ உருவாக்கும். கிளவுட் மற்றும் எட்ஜ் AI பணிகளுக்கு இது உதவும்.
இந்த பணிகள் டிசிஎஸ்-ஐ AI தொழில்நுட்பத்தை கன்சல்டிங் மற்றும் அப்பிளிகேஷ்ன் திட்டங்களுக்கு அப்பால் உள்கட்டமைப்பு மற்றும் எகோசிஸ்டம் அமைப்பில் ஈடுபட வைக்கின்றன. இது ஹைபர்ஸ்கேலர் நிறுவனங்களுடன் போட்டியிட உதவும்.
பெரிய ஒப்பந்தங்கள்
டிசிஎஸ் 4ஆம் காலாண்டில் பெற்ற ஒப்பந்த மதிப்பு (TCV) சுமார் 12 பில்லியன் டாலராக உள்ளது. இதில் மூன்று மெகா ஒப்பந்தங்கள் அடங்கும். மேலும் 2026 முழு நிதியாண்டுக்கு மொத்த ஒப்பந்தம் மதிப்பு 40.7 பில்லியன் டாலராக உள்ளது. ஐந்து மெகா ஒப்பந்தங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
முழு ஆண்டு முடிவுகள்
முழு நிதியாண்டு வருவாய் சுமார் ரூ.2.67 லட்சம் கோடியாக இருக்கிறது. இது வருடாந்திர அடிப்படையில் 4.6 முதல் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. AI முதலீடுகள் அதிகரித்த நிலையிலும் இயக்க லாப வரம்பு 25 சதவீதமாகவும், நிகர லாப வரம்பு 19.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் உயர்ந்த நிலை.
டிவிடெண்ட்
4ஆம் காலாண்டு-க்கு இறுதி டிவிடெண்ட் ஆக ஒரு பங்கிற்கு ரூ.31 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக டிசிஎஸ் தனது நிதியியல் முடிவுகளில் அறிவித்துள்ளது. FY26 முழுவதும் பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் ஆக சுமார் ரூ.39,571 கோடி அளிக்கப்பட்டு உள்ளது.
இறுதியாக AI யுகத்தில் டிசிஎஸ் முதலீட்டாளர்கள் இந்த முடிவுகளை நீண்ட கால வலுவான பாதையை அமைப்பதாக பார்க்கலாம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/tcs-q4-fy26-results-analysis-ai-revenue-surges-to-2-3-billion-with-record-margins-complete-inves-788527.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
