
India
oi-Rajkumar R
திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் ” கும்பமேளா மோனாலிசா” என்று வைரலான இளம் பெண் மோனாலிசா போஸ்லே தனது காதலர் பார்மன் கானுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். மாற்று மதங்களை சேர்ந்த இந்த காதல் ஜோடி, குடும்ப எதிர்ப்பை மீறி கேரளாவில் உள்ள கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
18 வயதான மோனாலிசா போஸ்லே மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரத்தை சேர்ந்தவர். மகாராஷ்டிராவை சேர்ந்த பார்மன் கானுடன் அவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் அறிமுகமானதாக கூறப்படுகிறது. அந்த அறிமுகம் பின்னர் காதலாக மாறியது.
ஆனால் இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த உறவுக்கு மோனாலிசாவின் குடும்பம், குறிப்பாக அவரது தந்தை ஜெய் சிங் போஸ்லே கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவரை தூரத்து உறவினருடன் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மோனாலிசா சமீபத்தில் கேரளாவில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வந்திருந்தார். பூவார் பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவரது தந்தை அவரை கண்டுபிடித்து சொந்த ஊருக்கு அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக பதற்றம் ஏற்பட்டதால் மோனாலிசா மற்றும் அவரது காதலர் பார்மன் கான் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு கோரினர்.
மோனாலிசா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரது தந்தையையும் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அப்போது மோனாலிசாவுக்கு 18 வயது நிறைவடைந்துள்ளதால் அவர் யாருடன் வாழ வேண்டும் என்பது குறித்து தானே முடிவு செய்யும் சட்ட உரிமை உள்ளதாக போலீசார் குடும்பத்தினருக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு மோனாலிசா தனது காதலருடன் காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்.
பின்னர் இருவரும் கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் பகுதியில் அமைந்துள்ள அருமனூர் ஸ்ரீ நைனார் தேவா கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு இந்த தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த திருமண நிகழ்ச்சியில் கேரள அரசின் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி கலந்து கொண்டு தம்பதியருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அவர் இந்த நிகழ்வை “உண்மையான கேரளக் கதை” என்று குறிப்பிட்டார். மேலும் CPI(M) மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சியில் மோனாலிசா சிவப்பு நிற சேலை அணிந்து சிந்தூருடன் பாரம்பரிய வடிவில் மணமகளாக வந்திருந்தார். அதேபோல் பார்மன் கான் வெள்ளை சட்டை மற்றும் முண்டு அணிந்து மணமகனாக கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மோனாலிசா போஸ்லே கடந்த ஆண்டு நடைபெற்ற மகாகும்ப் மேளாவில் திடீரென தேசிய அளவில் கவனம் பெற்றார். 2025ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்ப் விழாவின் போது அவர் ருத்ராட்ச மாலைகள் மற்றும் பூமாலைகள் விற்பனை செய்து கொண்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் அவரது அழகான தோற்றம், ஆம்பர் நிற கண்கள் மற்றும் புன்னகை பலரது கவனத்தை ஈர்த்தது. இதன் காரணமாகவே அவருக்கு “மோனாலிசா” என்ற பெயர் சமூக வலைதளங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.
வைரல் புகழை தொடர்ந்து மோனாலிசாவுக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. மலையாளத்தில் இயக்குனர் பி. பினு வர்கீஸ் இயக்கும் “நாகம்மா” என்ற படத்தின் மூலம் அவர் அறிமுகமாக உள்ளார். அந்த படத்தில் நடிகர் கைலாஷுடன் அவர் நடிக்கிறார். மேலும் பாலிவுட்டிலும் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. “தி டைரி ஆஃப் மணிப்பூர்” என்ற படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/viral-mahakumbh-girl-monalisa-marries-boyfriend-farman-khan-in-kerala-temple-780579.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
