
Tamilnadu
oi-Vishnupriya R
விருத்தாசலம்: திமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்த நிலையில் கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணி, எல். முருகனை சந்தித்தது ஏன் என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதிய தலைமுறை சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: ஏன் எடப்பாடி பழனிசாமி எங்களை அழைத்து கூட்டணி குறித்து பேசவில்லை, எத்தனை தொகுதி என்பதையும் பேசாமல் இருக்கிறாரே என எங்களுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த முறை எல்லா முடிவுகளையும் எடப்பாடி பழனிசாமிதான் எடுக்கிறார், இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. கூட்டணி பேச அவரே உங்களை அழைப்பார் என சொல்லிவிட்டனர்.

ஆனால் எங்களை அழைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பத்திரிகையாளர்கள் எல்லாம் செல்லும் இடத்தில் எல்லாம் எப்போது கூட்டணி என கேட்டு வந்தனர். என்னால் அதற்கு பதில் சொல்ல முடியாது ஒரு நிலை வந்தது.
ஈஷா யோகா மையத்திற்கு ஒவ்வொரு சிவராத்திரிக்கும் நான் செல்வதுண்டு. ஆனால் இந்த முறை தேர்தல் என்பதால் நான் ஈஷா சென்றது கவனம் பெற்றது. ஒவ்வொரு முறையும் ஈஷா மையத்திலிருந்து எனக்கு அழைப்பு வரும்.
அந்த வகையில் இந்த முறையும் எங்களுக்கு அழைப்பு வந்தது. வேலுமணியோ, எல் முருகனோ எங்களை அழைக்கவில்லை. என் பெயர் எழுதப்பட்டு எனக்கென ஒரு சீட் போட்டியிருப்பார்கள். என்னை எங்கே அழைத்துச் சென்று உட்கார வைப்பார்கள் என எனக்கு தெரியாது. ஈஷா யோகா மையத்தினர் என்னை அழைத்து கொண்டு என் சீட்டில் உட்கார வைத்தனர்.
அப்போதுதான் என் அருகே அண்ணன்கள் எஸ்.பி.வேலுமணி, எல்.முருகன் ஆகியோர் இருந்தனர். அது கேஷுவலாக நடந்தது. திட்டமிட்டு நடந்தது கிடையாது. எங்களுக்கு இருவரையும் நீண்ட காலமாக தெரியும்.
ஆனால் எங்களுக்கு அதிமுகவுடன் கூட்டணி, ஈஷா யோகா மையத்தில் உருவானது என்றெல்லாம் பத்திரிகையாளர்கள்தான் செய்தி வெளியிட்டனர். அப்படியிருக்கும் எடப்பாடி அழைக்கும் வரை காத்திருக்க முடியாது, ஒரு முடிவு எடுக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் சொன்னார்கள். அதனால் திமுகவுடன் கூட்டணி வைத்தோம். திமுகவும் நாங்கள் அவர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என எங்களுக்கு அழைப்பு விடுத்தார்கள். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு தேமுதிகவை கூட்டணி வைக்க அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது: எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கியவர்களின் முதுகில் குத்தும் தன்மை கொண்டவர் என்றும் தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பி வைத்ததே எஸ்.பி.வேலுமணிதான் என எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. கோவை ஈஷா யோகா மையத்தில் பிரேமலதாவை சந்தித்து வேலுமணி இப்படி சொன்னதாக எனக்கு சிலர் கூறியிருந்தனர் என புகழேந்தி குறிப்பிட்டார். இந்த நிலையில் இது எதேச்சையாக நடந்த சந்திப்பு என பிரேமலதா விளக்கியுள்ளார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/premalatha-vijayakanth-explains-sp-velumani-l-murugan-meet-at-isha-yoga-center-amid-dmk-alliance-de-789345.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
