
India
oi-Nantha Kumar R
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சுற்றுப்பயணம் செய்தபோது முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்க செல்லவில்லை. திரெளபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அவருக்கான கழிவறையில் தண்ணீர் இல்லாததும், சாலையில் குப்பைகள் இருந்ததாகவும் கூறப்படும் சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜியின் அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்துள் நிலையில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம், தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். தமிழகத்தை போல் மேற்கு வங்க மாநிலத்திலும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் 9 வது சர்வதச சந்தால் மாநாடு நடந்தது.

பழங்குடியினரின் நலன் சார்ந்த இந்த மநாட்டில ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்துக்கு ஜனாதிபதி வரும்போது ஆளுநர், முதல்வர்நேரில் வரவேற்க வேண்டும், மற்ற அமைச்சர்களும் இருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை. தலைமை செயலாளர், டிஜிபியும் வர வேண்டும். ஆனால் யாரும் செல்லவில்லை.
அதிருப்தியான ஜனாதிபதி
மேலும் நிகழ்ச்சிக்காக இடம் திடீரென்று மாற்றப்பட்டு குறைந்த பரப்ப்பளவு கொண்ட இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சாலைகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்தது. இதனால் ஜனாதிபதி திரெளபதி முர்மு அதிருப்தியை வெளிப்படுத்தினார். தன்னை முதல்வர் சந்திக்காதது பற்றி கேள்வி எழுப்பிய அவர் ஏமாற்றத்தையும் பதிவு செய்திருந்தார்.
மேலும் ”இந்த நிகழ்ச்சி மக்கள் வருவதற்கு கடினமான ஒரு இடத்தில் நடத்தப்படுகிறது. ஒருவேளை பழங்குடியினரின் நலனை மாநில அரசு விரும்பவில்லை. அதனால்தான் மக்கள் இங்கு வருவதை தடுத்திருக்கலாம். மம்தா பானர்ஜி என் ஒரு இளைய சகோதரியை போன்றவர். நானும் வங்கத்தின் மகள். அவர் வருத்தமாக இருக்கிறாரா, அதனால்தான் இடம் மாற்றப்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், அது முக்கியமல்ல. நீங்கள் அனைவரும் நலமாக இருங்கள்” என்று அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
மத்திய – மாநில அரசு இடையே மோதல்
இந்த விவகாரம் மத்திய அரசுக்கும், மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜியின் அரசுக்கும் இடையே மோதலை அதிகப்படுத்தி உள்ளது. ஜனாதிபதி திரெளபதி முர்முவை மம்தா பானர்ஜி தலைமையிலான பாஜக அரசு அவமதித்துள்ளது என்று பாஜக சாடியது. இதற்கு மம்தா பானர்ஜி பாஜக தனது அரசியல் நோக்கங்களுக்கான உயரிய பதவியில் உள்ளவரை தவறாக பயன்படுத்தி வருகிறது என சாடியிருந்தார்.
விளக்கம் கேட்ட மத்திய உள்துறை
இதன் தொடர்ச்சியாக தான் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் நந்தினி சக்கரவர்த்தியிடம் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் விரிவான அறிக்கை கேட்டுள்ளார்.
இன்று மாலை 5 மணிக்குள் அறிக்கையாக விளக்கம் அளிக்க கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கழிவறையில் தண்ணீர் இல்லையாம்
அதில் 4 முக்கிய விஷயங்களை சுட்டிக்காட்டி விளக்கம் கோரியுள்ளார். முதல் விஷயம் ஜனாதிபதி திரெளபதி முர்முவை வரவேற்கவும், வழியனுப்பவும் முதல்வர், தலைமை செயலாளர், டிஜிபி ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். 2வது விஷயமாக ஜனாதிபதிக்காக அமைக்கப்பட்ட கழிவறையில் தண்ணீர் இல்லாதது ஏன்? குறைபாட்டுக்கு என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
3வது விஷயமாக நிகழ்ச்சிக்கான பாதை முழுவதும் குப்பைகள் நிறைந்திருந்தது ஏன்?, 4வது விஷயமாக இந்த குறைபாடுகளுக்கு காரணமான டார்ஜிலிங் மாவட்ட ஆட்சியர், சிலிகுரி காவல் ஆணையர் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தான் பொறுப்பு. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விகளை எழுப்பி உள்ளார்.
மோடி கண்டனம்
முன்னதாக இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, ” ஜனநாயகத்தையும், பழங்குடியின சமூகங்களின் மேம்பாட்டையும் நம்பும் அனைவரும் மனமுடைந்துள்ளனர். ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஜனாதிபதி வெளிப்படுத்திய வலி மற்றும் வேதனை, இந்திய மக்களின் மனதில் ஆறாத வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முன்எப்போதும் இல்லாதது. அவமானமான செயலாகும்.
மேற்கு வங்கத்தின் திரிணாமுல் அரசு அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. ஜனாதிபதிக்கான அவமதிப்புக்கு அவர்களின் நிர்வாகமே பொறுப்பு. சந்தால் கலாச்சாரம் போன்ற ஒரு முக்கியமான விஷயத்தை மேற்கு வங்க அரசு இவ்வளவு அலட்சியமாக நடத்தியது துரதிர்ஷ்டவசமானது. ஜனாதிபதி பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது மற்றும் இந்த அலுவலகத்தின் புனிதம் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். மேற்கு வங்க அரசு மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சிறந்த புரிதல் இருக்கும் என்று நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
மம்தா பானர்ஜி கொடுத்த விளக்கம்
இதற்கு பதிலளிக்கும் வகையில் மம்தா பானர்ஜி, ”ஜனாதிபதியின் நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் போதுமான ஏற்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஜனாதிபதி அலுவலகத்துக்கு கடிதம் எழுதியது. தொலைபேசி வழியாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தனியார் அமைப்பான சர்வதேச சந்தால் கவுன்சில், சிலிகுரியில் நடைபெற்ற 9வது சர்வதேச ஆதிவாசி சந்தால் மாநாட்டிற்கு ஜனாதிபதியை அழைத்தது. ஜனாதிபதி சார்பில் ஒரு முழுக் குழு மார்ச் 5ம் தேதி வந்து பார்வையிட்டது. அப்போதும் ஏற்பாடுகள் இல்லாத நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைப்படி சிலிகுரி மாநகராட்சி மேயர், டார்ஜிலிங் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிலிகுரி காவல் துறை ஆணையர் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று வழியனுப்பி வைத்தனர். மேற்கு வங்க முதல்வர் பெயர் பட்டியலில் இல்லை. இதனால் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் எந்த நெறிமுறை மீறலும் நடைபெறவில்லை பாஜக நாட்டின் மிக உயரிய பதவியை அவமதித்து, அதன் சொந்த கட்சி நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்துகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று மம்தா பானர்ஜி விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/droupadi-murmu-union-government-seeks-explanation-to-west-bengal-mamata-banerjee-government-779601.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
