
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ள சூழலில், சர்வதேச அளவில் மிகப் பெரிய அளவில் எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. அந்த குறிப்பிட்ட இடத்தில் பதற்றம் உச்சத்தில் இருக்கும் சூழலில் மர்மமான ஜாம்பி கப்பல் ஒன்று ஹார்முஸை கடந்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் மோதல் உச்சத்தில் இருக்கிறது. இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் மோதல் 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. மேலும், இதனால் ஹார்முஸ் ஜலசந்தியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் சப்ளையை பாதித்துள்ளது.

ஜாம்பி கப்பல்
இதற்கிடையே மர்மமான ஜாம்பி கப்பல் ஒன்று ஹார்முஸை கடந்துள்ளதாகத் தெரிகிறது. எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு கப்பல் போல் தன்னை காட்டிக் கொண்ட இந்த ஒரு மர்மக் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் முக்கிய எரிசக்திப் போக்குவரத்து வழிகளில் நிலவும் அபாயங்களைத் தவிர்க்கப் பயன்படுத்தப்படும் புதிய தந்திரோபாயங்கள் குறித்து இது பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.
“ஜமால்” எனத் தன்னை அடையாளப்படுத்திய இந்த கப்பல் ஜலசந்தியை விட்டு வெளியேறியதாகக் கண்காணிப்புத் தரவுகள் காட்டின. சரி, கப்பல் அங்கிருந்து கடந்துவிட்டது. இதில் கவலைப்படவே சந்தேகம் கொள்ளவோ என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். உண்மையான ஜமால் LNG கப்பல் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் உள்ள ஒரு கப்பல் உடைப்புத் தளத்தில் ஏற்கெனவே உடைத்து நொறுக்கப்பட்டது. செயலிழந்த ஒரு சட்டப்பூர்வ கப்பலின் போலி அடையாளத்தைப் பயன்படுத்தி, இந்த மர்ம கப்பல் ஹார்முஸை கடந்துள்ளதே இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
முதல்முறை
ஈரான் மோதல் தீவிரமடைந்த பிறகு, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஜாம்பி கப்பல் கடப்பது இதுவே முதல்முறையாகும். ஏவுகணை அச்சுறுத்தல்கள், ராணுவ பதட்டங்களால் இந்த நீர் வழிப்பாதை தற்போது அபாயகரமான மண்டலமாக மாறியுள்ளது. இந்தியா உட்பட வெகு சில நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க ஈரான் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குழப்பம்
கப்பலின் நடத்தையே மர்மத்தை மேலும் அதிகப்படுத்துவதாக இருக்கிறது. கடந்த மார்ச் 13ம் தேதி ஓமன் அருகே கண்காணிப்பு அமைப்புகளில் முலில் தோன்றிய இந்த ஜாம்பி கப்பல், பின்னர் தனது டிரான்ஸ்பாண்டரை அணைத்துள்ளது. இதனால் கண்காணிப்பு அமைப்புகளில் அது தென்படவில்லை. சில நாட்கள் அது ஐக்கிய அமீரகம் அருகே மீண்டும் தோன்றியுள்ளது. இறுதியில் ஈரானின் தென்கிழக்கு கடலோரத்தில் அறியப்பட்டது. இருப்பினும், அது எங்குச் செல்கிறது என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை. தனது அடையாளம் மற்றும் வழித்தடத்தை மறைக்கவே ஜாம்பி கப்பல் இதுபோல குழப்பமான சிக்னலை பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
இங்கு நாம் இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். கப்பல் துறையில் இந்த “ஜாம்பி கப்பல்கள்” என்பது முற்றிலும் புதியது இல்லை. வெனிசுலா, ரஷ்யா போன்ற வணிக தடை விதிக்கப்பட்ட நாடுகளில் எண்ணெய் வர்த்தகம் செய்ய பொதுவாக இது போன்ற ஜாம்பி கப்பல்களே பயன்படுத்தப்படும்.. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தியில், இவ்வளவு பதற்றத்திற்கு நடுவே ஜாம்பி கப்பல்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.!
ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தியை பொறுத்தவரை அது சர்வதேச எரிசக்தி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஒரு கப்பல் பாதையாகும்.. உலகளவில் கணிசமான அளவு பகுதி எண்ணெய் மற்றும் எரிவாயுவை இது கொண்டு செல்கிறது. இதில் ஏற்படும் எந்தத் தலையீடும் உலகளாவிய சந்தைகளுக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா, துருக்கி போன்ற நாடுகள் தங்கள் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்காக ஈரான் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. மற்ற கப்பல்கள் தங்கள் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்து, மெல்ல அந்த ஹார்முஸை கடக்க முயல்கின்றன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/jamal-zombie-ship-slips-through-hormuz-fake-lng-carrier-identity-beats-iran-blockade-amid-crisis-783387.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
