
International
oi-Mani Singh S
பியாங்யாங்: கிளஸ்டர் குண்டுகளுடன் சென்று தாக்கும் வல்லமை கொண்ட குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. ஆபத்தான இந்த கிளஸ்டர் குண்டுகளுடன் கூடிய ஆயுதத்தை கிம் ஜாங் உன் சோதித்து பார்த்து இருப்பது சர்வதேச அளவில் பெரும் உன்னிப்பாக கவனம் பெற்றுள்ளது.
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுகும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அமெரிக்காவின் தடையை மீறி அணு ஆயுத சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் வடகொரியா சோதனை செய்து வருகிறது. சீனா மற்றும் ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டும் வடகொரியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளை சீண்டும் விதமாகவும் அவ்வப்போது ஏவுகணைகளை சோதித்து வருவது வழக்கம்.

கிளஸ்டர் குண்டுகள்
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனால், கடுமையான பஞ்சத்தில் இருந்தாலும் தனது ஆயுத வலிமையை தொடர்ந்து வடகொரியா அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்தான், ஒரு புதிய ஏவுகணையை வடகொரியா சோதித்து அதிர வைத்துள்ளது. டெவில் ஆயுதம் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணை கிளஸ்டர் குண்டுகளை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
அதாவது ஏவுகணை விழுந்த இடத்தில் இருந்து பல நூறு குண்டுகளாக பிரிந்து வெடித்து சிதறும். இந்த கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்த சர்வதேச சமூகங்கள் தடை விதித்துள்ளன. வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ இது தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-
சர்ச்சைக்குரிய ஆயுதங்கள்
பியோங்யாங் ஏப்ரல் 6 முதல் 8 வரை நடத்திய ஆயுத சோதனைகளில், ஹவாசாங்- KN-23 என்றும் அழைக்கப்படும் ஏவுகணை, கிளஸ்டர் குண்டு போர் முனையுடன் சோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன போர்க்களத்தில், கொத்து குண்டுகள் பெரும் சர்ச்சைக்குரிய ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன. ஒரே ஒரு ஏவுகணை அல்லது குண்டு, காற்றில் நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளை வெளியிட்டு, ஒரு பெரிய பரப்பளவில் அவற்றைச் சிதறடிக்கும்.
இந்தக் குண்டுகள் ‘பிசாசின் ஆயுதம்’ என்று அழைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், அவை காலம் காலாமாக போர்முனையில் பயன்படுத்தப்படும் குண்டுகள் போல் அன்றி ராணுவம் இலக்குகள் மற்றும் சிவில் இலக்குகள் என அனைத்து பகுதிகளிலும் பாரபட்சம் இல்லாத அளவு தாக்குதல் நடத்தும் தன்மை கொண்டவை.
சோதித்து பார்த்த வடகொரியா
பல சிறிய குண்டுகள் வெடிக்காமல் தரையில் கிடந்து, நீண்ட நாட்களுக்கு வெடிக்காத வெடிபொருட்களாக பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. இந்த கொடூர ஆயுதங்களுடன் குறுகிய தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணையைத்தான் வடகொரியா சோதித்து அதிர வைத்துள்ளது. உலகாளவிய அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் வெனிசுலாவிற்குள் அதிரடியாக புகுந்து அந்த நாட்டின் அதிபரை அமெரிக்கா கைது செய்தது. அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக போதை பொருள் ஊருடுவலை தடுக்க தவறியதாக அந்த நாட்டு அதிபரை கைது செய்த டிரம்ப், தற்போது புளோரிடா சிறையில் அடைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஈரான் மீது தாக்குதல் தொடுத்து அந்த நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியை கொலை செய்தது.
யாராலும் அச்சுறுத்த முடியாது
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு மத்தியில்தான் வடகொரியா தனது ஆயுத பலத்தை சமீப காலமாக தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. ஏற்கனவே குறிப்பிட்ட நாடுகளை போல் அல்லாமல் வடகொரியா அணு ஆயுத பலம் கொண்ட நாடாகும். கடந்த மாதம் வடகொரியாவின் அவையில் பேசிய கிம் ஜாங் உன், நமது தேசைத்தை யாராலும் அச்சுறுத்த முடியாது. தேவைப்பட்டால் அந்த அச்சுறுத்தலை கொடுக்கும் நாடாக நாம் உள்ளோம்” என்று கூறியிருந்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/devil-weapon-north-korea-testing-a-missile-with-cluster-bomb-788817.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


