
International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகிய சூழலில், இது பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இந்தியா தண்ணீரைத் தர வேண்டும் எனக் கெஞ்சும் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி!
கடந்தாண்டு மே மாதம் இந்தியாவில் மிகக் கொடூரமான பஹல்காம் தாக்குதலை நடைபெற்றது. ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிப் போடுவதாக இந்த தாக்குதல் இருந்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்தும் விலகுவதாக அறிவித்தது.

தண்ணீர் பஞ்சம்
சிந்து நதி நீரையே பெருமளவு நம்பி இருந்த பாகிஸ்தானுக்கு இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தாக்குதலை நிறுத்திய பாகிஸ்தான், அப்போது முதலே சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கிடையே தண்ணீர் வேண்டும் என்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை (IWT) இந்தியா உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கெஞ்சியிருக்கிறார். பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
கெஞ்சும் பாகிஸ்தான்
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “நீர் ஆதாரங்களை ஆயுதமாக்குவது கவலையளிக்கிறது. இந்தியாவின் இந்த முடிவு, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த சர்வதேச ஒப்பந்தத்தின் சாரம்சத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக இருக்கிறது. இது பொருளாதார பாதுகாப்பை அச்சுறுத்துவதுடன், இந்த தண்ணீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.
பின்னணி
உலக வங்கியின் மத்தியஸ்தத்தில் 1960இல் சிந்து நதிநீர் ஒப்பந்தம் உருவானது. இந்த சட்டத்தின் கீழ் சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மேற்கு நதிகளைப் பாகிஸ்தானுக்கும், ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளை இந்தியாவுக்கும் பிரித்து அளிக்கிறது. இந்தியா இத்தனை காலமாக உரிய விதிகளைப் பின்பற்றி தண்ணீரைக் கொடுத்தே வந்தது. போர்க் காலங்களிலும் கூட இந்தியா தண்ணீரை நிறுத்தவே இல்லை.
ஆனால், எப்போது காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனரோ.. அப்போதே இந்தியா இந்த நீர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையைப் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்றும் தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே மீண்டும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து யோசிப்போம் எனவும் இந்தியா கூறியது. அதாவது தண்ணீரும் ரத்தமும் ஒரே பாதையில் பாயாது என்பதே இந்தியாவின் கருத்து.
நிலைமை மோசம்
இந்தியாவின் இந்த முடிவால் பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் சூழல் இருக்கிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தான் தொடர்ந்து கெஞ்சி வருகிறது. பாகிஸ்தானில் இருக்கும் தண்ணீர் பஞ்சம் குறித்து மேலும் பேசிய அவர், “பாகிஸ்தானின் பல பகுதிகளில் நீர் முறையாகக் கிடைப்பதில்லை. சிறிதளவு நீரை எடுக்கவே பல மைல் தூரம் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. பெண்களும் சிறுமிகளும் தினசரி தண்ணீரைச் சேகரிக்கவே பல மணிநேரம் செலவிடுகிறார்கள். இதனால் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. குடும்பத்துடனும் போதிய நேரத்தைச் செலவிட முடிவதில்லை.
இது குடும்பத்தில் கூடுதல் அழுத்தமும் ஏற்படுகின்றன. இந்த சிக்கலைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாதுகாப்பான நீர், சுகாதாரத்திற்கான அணுகல் நமது அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமை. மழைநீர் சேகரிப்பு போன்ற எளிய நடவடிக்கைகளால் குடும்பங்களும் சமூகங்களும் இதில் நேரடியாகப் பங்களிக்க முடியும். இவை நிலத்தடி நீரை நிரப்பி, நீர்மட்டத்தை அதிகரிக்க உதவும். மக்கள்தொகை வளர்ச்சி, காலநிலை மாறுபாடு அதிகரிக்கும் நிலையில், நாம் நீரை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும்” என்றும் அதிபர் ஆசிப் அலி சர்தாரி குறிப்பிட்டார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/pakistan-on-indus-waters-treaty-president-zardari-requests-india-to-restore-full-water-supply-783495.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
