
Business
oi-Vigneshkumar
சென்னை: இந்தியப் பங்குச்சந்தை கடந்த ஓராண்டாகவே சரிந்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்று வருவதே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்கள் இப்போது தங்கள் முதலீடுகளை வெளியே எடுப்பது ஏன் இதன் பின்னணி தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கடந்த ஓர் ஆண்டாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் பெரும் ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளன. குறிப்பாக சில காலமாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒரு சிலர் நீண்ட ஏற்றத்திற்குப் பிறகு வரும் வழக்கமான சரிவு என்கிறார்கள். அதேநேரம் இன்னும் சிலர், சந்தையில் உருவாகி இருந்த பப்பிள் வெடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எதனால் இப்படி சந்தை சரிகிறது என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
ஆனால், ஒரு விஷயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதாவது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளைத் தொடர்ந்து விற்று வருவது குறித்து அனைத்து நிபுணர்களும் உடன்படுகிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்திருந்த நிறுவனங்களே பெரியளவில் சரிந்துள்ளதும் இதை உறுதி செய்வதாகவே இருக்கிறது.
குறிப்பாகக் கடந்த மார்ச் மாதத்தின் முதல் பாதியில் மட்டும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து ₹31,000 கோடிக்கும் அதிகமாகப் பணத்தை எடுத்துள்ளதாக நோமுரா நிறுவனத்தின் டேட்டா காட்டுகிறது. ஏதோ குறிப்பிட்ட துறை என இல்லாமல் ஒட்டுமொத்தமாகவே பல்வேறு நிறுவனங்களின் பங்குகளையும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்றுள்ளனர்.
காரணம் 1
புவிசார் அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலையேற்றம், அமெரிக்க டாலரின் வலுவடைந்து வருவது மற்றும் அமெரிக்கக் கடன் பத்திரங்களின் வருவாய் அதிகரிப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுவாகப் போர் பதற்றம் ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்காவை நோக்கியே செல்வார்கள். அதாவது போர் காலங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதில் தெளிவில்லாத சூழல் இருக்கும். அதுபோன்ற காலங்களில் மற்ற இடங்களில் செய்துள்ள முதலீடுகளை விற்றுவிட்டு, அமெரிக்க அரசுப் பத்திரங்கள் போன்ற பாதுகாப்பான முதலீடுகளைச் செய்வார்கள். இப்போதும் அதுவே தான் நடக்கிறது.
காரணம் 2
அதேநேரம் இது மட்டுமே ஒரே காரணம் இல்லை. ஏஐ கூட இதில் பங்கு வகிக்கிறது. அதாவது உலகமே இப்போது ஏஐ பின்னால் தான் சென்று கொண்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஏஐ சார்ந்த விவகாரங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவே முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், இந்தியா இதில் ரொம்பவே பலவீனமாக இருக்கிறது.
அதாவது ஏஐ விவகாரங்களில் இந்தியாவின் பங்கு குறைவாக இருப்பதும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை எடுக்க இன்னொரு காரணமாக இருக்கிறது. ஐடி சர்வீஸஸில் இந்தியாவுக்கு முக்கிய இடம் இருந்தாலும் கூட செமி கண்டெக்டர், கிளவுட் தொழில்நுட்பக் கட்டமைப்பு, டேட்டா சென்டர் போன்ற AI விவகாரங்களில் இந்திய நிறுவனங்களுக்குப் பெரிய பங்கு இல்லை.. உலகமே இதன் பின்னால் செல்லும் சூழலில், இந்தியாவுக்கு இதில் பெரிய பங்கு இல்லாததும் முதலீட்டாளர்களின் தயக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம்
உதாரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் TSMC, சாம்சங், SK ஹையினிக்ஸ் ஆகிய மூன்று மாபெரும் செமி கண்டெக்டர் நிறுவனங்களில் மட்டும் கிட்டத்தட்ட $1.75 டிரில்லியன் முதலீடு செய்துள்ளனர். இது இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச்சந்தை மதிப்பைக் காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஐ சந்தையில் இந்தியா நிறுவனங்கள் போட்டி கொடுக்காதது முக்கிய காரமாக இருக்கிறது.
காரணம் 3
இத்தோடு சேர்ந்து இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது. இதனால் இந்தியாவில் லாபம் அதிகரித்தாலும் கூட டாலர் மதிப்பில் பார்க்கும்போது பெரியளவில் லாபம் இருக்காது. இந்த மூன்றும் தான் இப்போது பிரதான காரணமாக இருக்கிறது. பங்குச்சந்தைகள் சரிவுக்கு மூன்று முக்கிய காரணங்களை வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/why-foreign-investors-are-quitting-indian-stock-market-fall-reason-experts-lists-three-things-783673.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
