
Business
oi-Vigneshkumar
சென்னை: அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த தனது முடிவை நேற்றிரவு எடுத்தது. அமெரிக்கா எடுத்த அந்த முடிவு சர்வதேச தங்க மார்கெட்டில் எதிரொலித்துள்ளது. இந்த முடிவு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சரிந்தது. அது இந்தியாவிலும் எதிரொலித்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களுக்கு இதே நிலையே இருக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்க பெடரல் வங்கியின் ஆலோசனைக் கூட்டம் கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. நம்ம ஊரில் எப்படி ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை நடத்தி வட்டி விகிதம் குறித்த முடிவுகளை எடுக்குமோ, அதேபோலத் தான் அமெரிக்க பெடரல் வங்கியும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் குறித்த முடிவுகளை எடுக்கும்.

வட்டி விகிதம்
கடந்த இரு நாட்களாக இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தபடியே வட்டி விகிதத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. 3.5% முதல் 3.75%ஆகவே வட்டி விகிதம் இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, சர்வதேச மார்கெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்தன. அமெரிக்கா- ஈரான் போரினால் கச்சா எண்ணெய் விலைகள் உயரும் சூழலில், தங்கம் மற்றும் வெள்ளி சரிவைச் சந்தித்து வருகிறது.
மத்திய கிழக்கு
மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் படைகளின் ஈரான் மீதான தாக்குதல்களும், தெஹ்ரானின் பதிலடித் தாக்குதல்களும் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகிறது. முதலில் இந்த மோதல் ஒரு சில நாட்களிலேயே முடிந்துவிடும் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், தற்போதைய சூழலில் பதற்றம் தணிந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இந்த மோதலில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருக்கும் சூழலில், வட்டி விகிதம் குறைக்கப்படாது என்றே பலரும் எதிர்பார்த்தன.
அமெரிக்க பெடரல் வங்கி
அதன்படியே, அமெரிக்க பெடரல் வங்கி தனது முக்கிய வட்டி விகிதங்களை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மாற்றாமல் வைத்தது. அதற்கு முன்பு, மூன்று முறை தொடர்ச்சியாக 0.25% குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 3.5% முதல் 3.75%ஆக தொடரும் என ஜெரோம் பவுல் அறிவித்தார்.
அமெரிக்காவின் இந்த முடிவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக 2வது முறையாக வட்டி விகிதம் மாற்றப்படவில்லை. ஜனவரி மாத கூட்டத்திலும் மத்திய வங்கி விகிதங்களை மாற்றாமல் வைத்திருக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் முடிவு செய்திருந்தது. கடந்தாண்டு செப்டம்பர், அக்டோபர், மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இப்போது அது நிலையாக உள்ளது.
தங்க மார்கெட்
அமெரிக்காவின் இந்த முடிவு நேரடியாகத் தங்க மார்கெட்டில் எதிரொலித்துள்ளது. இந்த வட்டி விகித முடிவு காரணமாகச் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு 5000 டாலருக்கு கீழ் இறங்கியது. காலை 9.30 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,852.86 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. அதேபோல ஏப்ரல் மாதத்திற்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் 4,857.20க்கு வர்த்தகமாகி வருகிறது. இந்திய மார்கெட்டிலும் இது நேரடியாக எதிரொலிக்கும் என்றே தெரிகிறது!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/us-fed-rate-gold-price-impact-gold-silver-prices-drop-as-fed-keeps-the-rates-steady-at-3-5-3-75-782541.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
