
India
-Vigneshkumar
திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் சூழலில், அங்கு எந்த கட்சி வென்று ஆட்சியை அமைக்கும் என்பது தொடர்பாக முக்கிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் ஆட்சியில் இருக்கும் பாஜகவே கிளீன் ஸ்வீப் வெற்றியைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறையும் வாய்ப்பு குறைவு எனக் கூறப்பட்டுள்ளது.
இப்போது தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களோடு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலம் என்றால் அது அசாம் தான். காங்கிரஸின் கோட்டையாக இருந்த அசாமில் கடந்த 2016ம் ஆண்டு பாஜக வென்று ஆட்சியை அமைத்தது.

அசாம்
சுமார் 10 ஆண்டுகளாக அங்கு பாஜகவே ஆட்சியில் உள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸின் அசாம் முகமாக இருந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, இப்போது கடந்த 4 ஆண்டுகளாக அங்கு பாஜக சார்பில் முதல்வராக இருக்கிறார். முன்னாள் காங்கிரஸ் முதல்வர் தருண் கோகோயின் மகன் கௌரவ் கோகோய் தலைமையில் காங்கிரஸ் இந்த முறை தேர்தலைச் சந்திக்கிறது.
இதற்கிடையே அங்கு யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாக வோட்வைப் கருத்துக் கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. சிஎன்என்- நியூஸ்18 சேனல் இந்த சர்வேயை வெளியிட்டுள்ளது. அதில் அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பாஜக வெல்லும்
126 இடங்களைக் கொண்ட அசாம் சட்டசபையில் ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கக் குறைந்தது 64 இடங்களில் வெல்ல வேண்டும். இதற்கிடையே பாஜக 87-97 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 26-36 இடங்களில் மட்டுமே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி கடந்த 2021 தேர்தலில் 75 இடங்களில் வென்ற சூழலில், இந்த முறை அதை விட மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதில் பாஜக 89 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் சூழலில், அதில் 60 இடங்களில் வெல்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்
வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான NDA கூட்டணி 44% வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 36.7% வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. யார் சிறந்த முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு தற்போதைய முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கே ஆதரவு அதிகமாக இருக்கிறது. பிஸ்வா சர்மாவுக்கு 47% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மறுபுறம் அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயியை 35% பேர் ஆதரித்துள்ளனர்.
பிரச்சினை
வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், மறைந்த பாடகர் ஜூபின் கார்கின் மரணம் குறித்த நியாயமான விசாரணை ஆகியவை இந்த தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக இருக்கும் என அசாம் மக்கள் கருதுகிறார்கள். அசாம் மாநிலத்தில் மொத்தம் இருக்கும் 126 இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/assam-opinion-poll-bjp-led-nda-set-for-big-win-in-north-eastern-state-congress-lagging-very-behind-011-786245.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
