
International
oi-Vigneshkumar
டெல் அவிவ்: புனித ரம்ஜான் நாளிலும் கூட பாலஸ்தீனியர்கள் அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைய இஸ்ரேல் படைகள் தடை விதித்துள்ளன. இதனால் அங்கு வசிக்கும் பல ஆயிரம் மக்கள் மசூதியின் வாயில்களிலும், அருகிலுள்ள தெருக்களிலும் தொழுகை நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மசூதி வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் ஈரான் போரைத் தீவிரமாக நடந்து வருகிறது. அதேநேரம் மற்றொரு பக்கம் காசாவில் வாழும் பாலஸ்தீனர்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே அங்குள்ள அல்-அக்ஸா மசூதிக்குள் பாலஸ்தீனியர்களை நுழைய விடாமல் இஸ்ரேல் தடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தடுத்து நிறுத்திய இஸ்ரேல்
இதனால் அங்குள்ள மக்கள் கிழக்கு ஜெருசலேமின் ஆக்கிரமிக்கப்பட்ட டமாஸ்கஸ் வாயிலுக்கு அருகிலும், மசூதிக்கு எவ்வளவு அருகே செல்ல முடியுமோ அந்தளவுக்கு நெருக்கமான இடங்களிலும் கூடினர். இந்த தடையை ஜெருசலேம் ஆளுநர் அலுவலகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இஸ்ரேல் தேவையில்லாமல் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதாகவும் இதை மத சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் ஈரான் ஆளுநர் அலுவலகம் கண்டித்துள்ளது. யூத அடையாளத்தைத் திணிக்கவும் மசூதியை பாலஸ்தீனிய மற்றும் இஸ்லாமிய அடையாளத்திலிருந்து விலக்கவுமே இஸ்ரேல் இதுபோல செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அல்-அக்ஸா மசூதி மூடல்
அல்-அக்ஸா மசூதி தொடர்ச்சியாக 21 நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள், இடிபாடுகளுக்கு மத்தியில் ஈத் பண்டிகையைக் கொண்டாடினர். அங்கு வசிக்கும் மக்கள் திறந்தவெளிகளிலும், சேதமடைந்த மசூதிகளுக்கு வெளியேயும் தொழுகை நடத்த ஒன்று கூடின. கடந்த 2023ஆம் ஆண்டில் மோதல் தொடங்கியது முதலே இஸ்ரேல் மசூதிகளை அழித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. காசாவில் இருந்த சுமார் 1,240 மசூதிகளில் 1,100க்கும் மேற்பட்டவற்றை இஸ்ரேல் தாக்குதல்கள் அழித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
ஜெருசலேமின் டெம்பிள் மவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அல்-அக்ஸா மசூதி, மத மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது மெக்கா மற்றும் மதீனாவுக்குப் பிறகு, இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாக கருதப்படுகிறது. நபிகள் நாயகத்தின் இரவுப் பயணம் மெக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம் மசூதியிலிருந்து “மஸ்ஜித் அல்-அக்ஸா” நோக்கிச் சென்றதாகவே குறிப்பிடுகிறது.
வரலாற்று பின்னணி
இந்த மசூதி கி.பி. 7ஆம் நூற்றாண்டில் உமையாத் கலீஃபா அப்துல் மாலிக் என்பவரால் கட்டப்பட்டது. உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் இப்போது மெக்காவை நோக்கியே தொழுகை நடத்துவார்கள். ஆனால், அதற்கு முன்பு முஸ்லிம்களின் தொழுகை திசையாக இந்த மசூதி தான் இருந்தது. முகமது நபிகள் காலத்தில் தான் தொழுகை திசை மெக்காவுக்கு மாற்றப்பட்டது.
கி.பி. 705 இல் அப்துல் மாலிக் / அல்-வாலித் I இந்த மசூதியைக் கட்டினார் கி.பி. 746 மற்றும் 1033 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் இந்த அழிந்ததாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இது மீண்டும் கட்டப்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் பாத்திமித், 1187இல் சலாதீனால் அய்யூப் வம்சம், மம்லுக் மற்றும் உதுமானியர்களால் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1099-1187 காலகட்டத்தில் சிலுவைப் போரின் போது இது அரண்மனையாகவும் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
முக்கியம்
இஸ்லாமிய மதத்தில் மட்டுமின்றி யூத மதத்திலும் இந்த மசூதி முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. யூத மக்களிடையே புனிதமான தலமாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த மசூதியை முழுக்க முழுக்க தன்வசப்படுத்த இஸ்ரேல் முயல்கிறது. தற்போதைய சூழலில், இஸ்லாமியர்கள் இங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்கொள்கிறார்கள். மறுபுறம் யூதர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.. ஆனால் வழிபாடு நடத்த இதுவரை அனுமதி இல்லை.
மோதல் பின்னணி
1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரில் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. அந்த மோதலில் கிழக்கு ஜெருசலேம், ஒல்ட் சிட்டி, வெஸ்ட் பேங்க் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றியது. அப்போது முதலே அல்-அக்ஸா மசூதி புனித பூமியில் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதியாக உள்ளது. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இஸ்ரேல் உருவாவதற்கு முன்பு கூட இந்த மசூதி தொடர்பான சர்ச்சைகள் இருந்துள்ளது.
1947ஆம் ஆண்டில், அப்போது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தை இரண்டு நாடுகளாகப் பிரிப்பதற்கான ஒரு திட்டத்தை ஐநா வகுத்தது. யூதர்களுக்காக ஒன்று, பாலஸ்தீனியர்களுக்காக ஒன்று என இரு நாடுகளை உருவாக்கத் திட்டமிட்டனர்.. யூத நாட்டிற்கு 55 சதவீத நிலமும், மீதமுள்ள 45 சதவீதம் பாலஸ்தீனிய நாட்டிற்கும் ஒதுக்கப்பட்டது. அப்போதும் மசூதி சர்ச்சையானதால் அல்-அக்ஸா வளாகம் அமைந்துள்ள ஜெருசலேம், ஐ.நா நிர்வாகத்தின் கீழ் சர்வதேச சமூகத்திற்குச் சொந்தமாகப்பட்டது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/israel-blocks-al-aqsa-eid-prayers-gaza-ramadan-ends-amid-mosque-closures-what-is-the-real-issue-782947.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
