போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? | US Israel Strike Iran Natanz Nuclear Facility Tensions Intensify

International

oi-Rajkumar R

டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையமான நடன்ஸ் அணுசக்தி நிலையத்தை (Natanz Nuclear Facility) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்த பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

உலகளவில் பெரும் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஈரானின் பல முக்கிய இலக்குகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

US Israel Strike

அதனைத் தொடர்ந்து ஈரானும் பதிலடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதால், கடந்த சில வாரங்களாக இரு தரப்பும் இடைவிடாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களில் ஈரானின் பல முக்கிய ராணுவ தளங்கள், ஆயுத உற்பத்தி மையங்கள் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நடன்ஸ் அணுமையம்

இந்த சூழலில், ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இன்று காலை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி அமைப்புகளில் ஒன்றான டான்சிம்செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தாக்குதல்

இந்த தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்தவித கதிரியக்கக் கசிவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், சர்வதேச சமூகத்தில் இந்த சம்பவம் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் கடும் பதிலடி

இந்நிலையில், ஈரான் தரப்பிலும் கடும் பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஈரான் தரப்பில் இருந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளின் பல பகுதிகளை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான பென் குரியன் பகுதியில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் துறைமுக தாக்குதல்

மேலும், அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுகின்ற வளைகுடா நாடுகளின் எண்ணெய் வளங்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ராஸ் அல் கைமா துறைமுக நகரம் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை வளைகுடா நாடுகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது.

பஹ்ரைன்

இதற்கிடையில், பஹ்ரைன் பாதுகாப்புப் படைகள் ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ளன. பிப்ரவரி 28ஆம் தேதி முதல் இதுவரை மொத்தம் 143 ஏவுகணைகள் மற்றும் 242 ஆளில்லா விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக பஹ்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேபோல், சவூதி அரேபிய பாதுகாப்பு அமைச்சகமும் தங்கள் நாட்டின் கிழக்கு பகுதிகளில் அதிக அளவில் ஏவப்பட்ட ஆளில்லா விமானங்களை இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளது.

மினா அல்-அஹ்மதி

மூன்று மணி நேரத்திற்குள் 38 ஆளில்லா விமானங்களை உள்ளடக்கிய தாக்குதலை தடுத்து நிறுத்தியதாகவும், மொத்தமாக 47 விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்நாட்டு பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இதனிடையே, குவைத் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் ஒன்றான மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு ஆலையையும் ஈரான் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்காவது வார போர்

நாள் ஒன்றுக்கு சுமார் 7,30,000 பீப்பாய் எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து, உலக எண்ணெய் சந்தையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த போர் தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், அதன் விளைவாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஈரான் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 1,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 204 குழந்தைகள் உட்பட மொத்தம் 1,444 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-israel-strike-iran-natanz-nuclear-facility-tensions-intensify-783357.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo