
Cricket
oi-Mani Singh S
சென்னை: டி 20 உலக கோப்பை நடப்பு சாம்பியனான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2024-ல் சாம்பியன் பட்டம் கிடைத்தது. தற்போது 3வது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதனை நாடு முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
4வது முறையாக டி.20உலக கோப்பையில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி இன்று பைனலில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இதில் 255 ரன்கள் விளாசிய இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம்
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியாவும், சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணியும் கோப்பையை பெறுவதற்காக மோதின.
ஏற்கனவே கடந்த 2007 மற்றும் 2024-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்த இந்திய அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 3-அது முறையாக சாம்பியன் பெறுமா என ரசிகர்களும் எதிர்பார்த்து போட்டியினை பார்த்து வந்தனர். கடந்த அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா பைனலுக்குள் நுழைந்து இருந்தது.
ரன் மழை பொழிந்த இந்திய அணி
இதன் மூலமாக 4-வது தடவையாக இந்திய அணி இறுதிப் போட்டியில் இன்று ஆடியது. ஆனால் டாஸ்-இல் இந்தியாவுக்கு தோல்வியே கிடைத்தது. இதனால் இந்திய அணியை முதலில் பேட் செய்ய நியூஸிலாந்து அணி அழைத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆட தொடங்கினர்.
நியூசிலாந்தின் பவுலர்களை நாலாபுறமும் சிதற அடித்தனர். ஆரம்ப ஜோடியே அதிரடியாக ஆடியதால் ரன் ரேட்டும் மளமளவென ஏறியது. மேலும் குஜராத்தின் அகமதாபாத் கிரவுண்டும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே பார்க்கப்பட்டது. இதனால் ரன் மழை பொழிந்தது இந்திய அணி.. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசினார். அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷானும் அதிரடியாக ஆடி அரை சதம் விளாசினர்.
96 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி
20 ஓவர் முடிவில் இந்திய அணி 255 ரன்கள் எடுத்து இருந்தது. இதையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே ரன் குவிக்க தடுமாறியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் சரிந்ததால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அப்படியே மங்கிவிட்டது. இறுதியில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அதுமட்டும் இன்றி எந்த நாடுகளும் செய்யாத பல்வேறு சாதனைகளையும் இந்திய அணி தன் வசப்படுத்தியுள்ளது.
வரலாற்றை மாற்றி ரெக்கார்டு படைத்த இந்திய அணி
* இதுவரை எந்த ஒரு அணியும் 3 முறை டி20 உலக கோப்பைகளை வென்றதில்லை.
* தொடர்ந்து இருமுறை எந்த அணியும் டி20 உலக கோப்பைகளை வென்றதில்லை என்ற புதிய ரெக்கார்டுகளையும் இந்திய அணி தன் வசப்படுத்தியுள்ளது.
* போட்டியை நடத்திய நாடு இதுவரை சாம்பியன் பட்டம் வென்றதில்லை என்ற வரலாற்றையும் இந்த வெற்றியின் மூலம் இந்தியா மாற்றியுள்ளது.
அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன்
வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்துடன் மோதும் போதும் சஞ்சு சாம்சன் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் இங்கிலாந்து உடனான ஆட்டத்திலும் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடியிருந்தார். தற்போது பைனலிலும் 89 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளம் இட்டார் சஞ்சு சாம்சன். இந்த உலக கோப்பை போட்டியில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 24 சிக்சர்களை விளாசியுள்ளார்.
நாடு முழுக்க கொண்டாடிய ரசிகர்கள்
இந்தியா வெற்றி அடைந்ததும் நாடு முழுக்க ரசிகர்கள் வெற்றியை கொண்டாடினர். பட்டாசு வெடித்து உற்சாகத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடினர். இதேபோன்று நாடு முழுக்க கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி உலக கோப்பையை வெற்றி பெற்றதை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி உற்சாகத்துடன் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். சிலர் இந்திய அணி வெற்றி பெற்றதை இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். டெல்லி, மும்பை, குஜராத், கொல்கத்தா என பல்வேறு இடங்களில் ரசிகர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்து இந்திய அணி வெற்றியை கொண்டாடித் தீர்த்தனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/india-wins-t20-world-cup-for-third-time-fans-celebrate-historic-triumph-779725.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
