
International
oi-Rajkumar R
துபாய்: இஸ்ரேல் – ஈரான் – அமெரிக்கா போர் காரணமாக் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முக்கிய எண்ணெய் மையமான போர்ட் ஆஃப் புஜைரா எண்ணெய் துறைமுகத்தில் பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் நடத்தியதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதலின் காரணமாக எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் தீப்பற்றி எரிந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில், புஜைரா துறைமுகத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையங்களை குறிவைத்து பல ட்ரோன்கள் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக அங்கு பெரிய தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு துறைமுகத்தில் எண்ணெய் ஏற்றும் மற்றும் இறக்கும் பணிகள் சில நேரத்திற்கு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ப்ளூம்பெர்க் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அவசர மீட்பு நடவடிக்கை
சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், புஜைரா நகரில் உள்ள அவசர சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பரவாமல் தடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய எண்ணெய் மையம்
புஜைரா துறைமுகம் உலகளவில் மிக முக்கியமான எண்ணெய் சேமிப்பு மற்றும் விநியோக மையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது ஹோர்மூஸ் நீரிணைக்கு வெளியே அமைந்துள்ளதால், வளைகுடா நாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்கள் அந்த பாதையை தவிர்த்து நேரடியாக ஏற்றுமதி செய்ய இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் “பங்கரிங் ஹப்” ஆகவும் இந்த துறைமுகம் அறியப்படுகிறது. இதனால் சர்வதேச எண்ணெய் சந்தையில் இந்த துறைமுகம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
மத்திய கிழக்கில் பதற்றம்
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில், உலகளவில் முக்கியமான எண்ணெய் மையங்களில் ஒன்றான புஜைரா துறைமுகத்தில் தாக்குதல் நடந்ததாக வெளியாகியுள்ள தகவல், சர்வதேச எண்ணெய் சந்தையிலும் கவலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A fire broke out at oil storage facilities at the UAE’s Port of Fujairah early Saturday, following an attack pic.twitter.com/rsms0pzYtx
— Anadolu English (@anadoluagency) March 14, 2026
இஸ்லாம் நாடுகள்
இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் போர் விமான தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் அருகில் உள்ள இஸ்லாமிய நாடுகளான பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் முக்கிய எண்ணெய் வர்த்தக மையமான புஜைரா துறைமுகத்தில் ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் காலங்களில் எண்ணெய் வர்த்தகத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்கின்றனர்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/drone-attack-reported-at-fujairah-oil-port-amid-escalating-iran-gulf-tensions-781455.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
