
Business
oi-Prasanna Venkatesh
டெல்லி: உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மத்தியில் டிரம்ப் சமீபத்தில் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாய் மார்ச் மாதத்தில் கடுமையாக சரிந்துள்ளது என அந்நாட்டின் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உடனடியாக சரி செய்ய ரஷ்யா இந்தியா உடனான எரிபொருள் வர்த்தகத்தை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

ரஷ்ய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2026 மார்ச் மாதத்தில் ரஷ்யாவின் வருவாய் 43% குறைந்து 617 பில்லியன் ரூபிள் சுமார் 7.72 பில்லியன் டாலர் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த சரிவிற்கு முக்கிய காரணம் அமெரிக்கா விதித்த கட்டுப்பாடுகள்.
டிரம்ப் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதலாக வரி விதிக்கப்படும் என எச்சரித்த நிலையில் இந்தியா உட்பட பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. இதனால் ரஷ்யாவின் ஏரிபொருள் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதித்தது.
ரஷ்யாவின் கஜானா
ரஷ்யாவின் மொத்த அரசு வருவாயில் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையின் பங்கு சுமார் 25% ஆகும். இந்த துறையின் வருவாய் குறைவு, அரசின் நிதிநிலையை நேரடியாக பாதிக்கும் விஷயமாக இருக்கும் காரணத்தால் இப்பிரிவில் ஏற்றுமதி வர்த்தகம் பாதித்தால் இது உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதேவேளையில் 2025 ஆம் ஆண்டில், அதிகப்படியான ராணுவ செலவுகளின் காரணமாக ரஷ்யாவின் பட்ஜெட் பற்றாக்குறை 5.6 டிரில்லியன் ரூபிள் அல்லது GDP-இன் 2.6% ஆக உயர்ந்துள்ளது எனவும் ரஷ்ய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.
மத்திய கிழக்கு பதற்றம்
மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் மோதல்கள், குறிப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தடைகள், உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையை பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில், எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட குழப்பம் பல நாடுகளுக்கு சவாலாக மாறியுள்ளது. இதனால், மாற்று விநியோகஸ்தர்களை நாடும் முயற்சிகள் அதிகரித்துள்ளன.
இதை ரஷ்யா தற்போது வாய்ப்பாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்
இந்த உலகளாவிய குழப்பத்தின் மத்தியில், ரஷ்யா இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாண்டுரோவ், தனது இந்திய பயணத்தின் போது பல முக்கிய தலைவர்களுடன் சந்திப்புகளை நடத்தினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், வெளியுறவு விவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளை விவாதித்தார்.
இந்த அனைத்து சந்திப்புகளில், இந்தியா – ரஷ்யா மத்தியிலான எரிசக்தி ஒத்துழைப்பு முக்கிய அம்சமாக இருந்தது. ரஷ்ய நிறுவனங்களுக்கு இந்திய சந்தைக்கு தொடர்ந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் LNG வழங்கும் திறன் உள்ளதாக மாஸ்கோ உறுதியளித்துள்ளது.
இந்தியா-ரஷ்யா உறவு
இந்த நடவடிக்கை, இந்தியாவின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க ரஷ்யாவின் இந்த திட்டம் உதவக்கூடும்.
இதன் மூலம், இந்தியாவின் எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்தும் முயற்சிக்கும் வலு சேர்க்கும். இதன் மூலம் இனி வரும் காலக்கட்டத்தில் இந்தியா – ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் எண்ணெய் வருவாய் குறைவு அதன் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிப்பது அதன் முக்கிய வர்த்தக உக்தியாக மாறியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/russia-offers-to-ramp-up-oil-lng-supplies-to-india-as-its-own-revenues-crash-43-due-to-west-asia-787003.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
