
Tamilnadu
oi-Pavithra Mani
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளிலுமே சீட் கிடைக்காத அதிருப்தியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கள்ளக்குறிச்சியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் அதிமுக நகர செயலாளர், வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் மன உளைச்சலுடன் பேசி, மேடையில் விழுந்து கும்பிட்டு பதவியை ராஜினாமா செய்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனியார் மண்டபத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ சீட்டுக்கு அதிமுகவில் பலரும் முயற்சி செய்து வந்தனர். இதில் அதிமுக நகர செயலாளராக இருந்த பாபுவும் முயற்சி செய்தார். தன் மனைவியும், முன்னாள் எம்எல்ஏவுமான அழகுவேலுவுக்கு சீட் பெற அவர் முயற்சி செய்துள்ளார்.

மேடையிலேயே பதவி ராஜினாமா
ஆனால் சீட் கிடைக்காததால் பாபு அதிர்ச்சியடைந்துள்ளார். வேட்பாளர் கூட்டத்தில் பேசிய பாபு, “நான் வந்துள்ள காரணம்.. பல்வேறு மன உளைச்சல்கள் இருந்தாலும் தீர்க்கமாக முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளேன். நான் போதும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன். இன்று மனநிலை சரியில்லாத ஒரு நபராக வலம் வந்து கொண்டிருக்கிறேன். நான் வந்த நோக்கம் நம் கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் இனிமேல் நான் நகர செயலாளர் பதவியில் பணியாற்றும் மனநிலையில் இல்லை. என் உடல்நிலையும் சரியில்லை. எனக்காக உழைத்த, என்னுடன் பணியாற்றிய அனைவரின் பொற்பாதங்களுக்கு என் நன்றியை கூறி, தம்பி ராஜீவ் காந்தி வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் சிறப்பாக பணியாற்றுங்கள். நான் விடைபெறுகிறேன்” என்றார். மேடையில் அமர்ந்திருந்த மாவட்டச் செயலாளர் குமரகுருவிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
கள்ளக்குறிச்சி அதிமுகவில் பரபரப்பு
பிறகு மேடையில் இருந்தபடியே அரங்கில் இருந்தவர்களை விழுந்து கும்பிட்டு வேதனையுடன் புறப்பட்டார். பாபுவின் மனைவி அழகுவேல் கடந்த 2011 காலத்தில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தார், கடந்தமுறை போட்டியிட வாய்ப்பு கேட்டபோது அவருக்கு கிடைக்கவில்லை. அவரின் மனைவி அழகுவேல் பாபு மாவட்ட மகளிரணி தலைவராக உள்ளார். இருவரும் கட்சி பதவி, அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இதனால் கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது அந்த தொகுதியில் அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-kallakurichi-admk-cadre-upset-with-not-give-stage-resign-his-party-post-in-stage-785969.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
