
Business
oi-Prasanna Venkatesh
மும்பை: உலகப் பொருளாதாரத்தில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும் வகையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 15 நாட்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு ஆசிய பங்குச் சந்தைகள் வேகமாக உயர்ந்துள்ளன. அதே நேரத்தில், எண்ணெய் விலை கடுமையாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் 10 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டு சந்தைக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஆசிய சந்தையில் உருவாகியுள்ள சாதகமான சூழ்நிலையால் இந்திய பங்குச்சந்தைக்கு மிகவும் சிறப்பான முதலீட்டு சூழ்நிலை உருவாகியுள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி
ஏப்ரல் 7ஆம் தேதி காலை இந்தியப் பங்குச் சந்தை பெரும் உயர்வுடன் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் ப்ரீ-ஓப்பனிங் வர்த்தகத்தில் 2,600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. நிஃப்டி 23,900 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இது தொடர்ச்சியாக நான்காவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தைப் பதிவு செய்துள்ளன.
ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும் மீட்சி
ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான உடனேயே ஆசிய சந்தைகள் பெரும் உயர்வைக் கண்டுள்ளன. ஜப்பானின் நிக்கி குறியீடு 5 சதவீதம் உயர்ந்து 56,060 புள்ளிகளைத் தொட்டது. தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு 5.58 சதவீதம் உயர்ந்து 5,801 புள்ளிகளை எட்டியது. இந்த உயர்வு, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நிலைத்திருந்த போர் பதற்றத்திற்குப் பிறகு முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
ஜப்பானின் டாபிக்ஸ் 3.1 சதவீதம் உயர்வு கண்டது. ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 2.6 சதவீதமும், ஹாங்காங்கின் ஹாங் செங் 2.5 சதவீதமும், சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 1.3 சதவீதமும் உயர்ந்துள்ளன. யூரோ ஸ்டாக்ஸ் 50 பியூச்சர்ஸ ஒப்பந்தங்கள் 4.9 சதவீதம் உயர்வு பெற்றுள்ளன.
அமெரிக்க பியூச்சர்ஸ் சந்தைகளும் இதே நிலை பிரதிபலித்துள்ளன. E-mini Nasdaq 100 பியூச்சர்ஸ ஒப்பந்தங்கள் 3 சதவீதம் உயர்ந்துள்ளன. டவ் ஜோன்ஸ் பியூச்சர்ஸ ஒப்பந்தங்களும் 3 சதவீதம் அதிகரித்துள்ளன. S&P 500 பியூச்சர்ஸ ஒப்பந்தங்கள் 2.2 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்த ஒருங்கிணைந்த உயர்வு, உலக சந்தைகளில் புதிய நம்பிக்கை திரும்பியதை தெளிவாகக் காட்டுகிறது.
இந்திய பங்குச் சந்தைக்கு பெரும் நிம்மதி
இந்தியப் பங்குச் சந்தையும் இந்த நல்ல செய்தியால் பெரிதும் பயனடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிஃப்ட் நிஃப்டி 700 புள்ளிகள் அல்லது 3 சதவீதம் உயர்ந்து 23,830 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் காரணமாக புதன்கிழமை இந்திய சந்தை gap-up opening உடன் தொடங்க உள்ளது.
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தால் பெரும் இழப்பை சந்தித்த முதலீட்டாளர்களுக்கு இந்த உயர்வு பெரும் நிம்மதியை அளிக்கும். இன்று பல லட்சம் சிறு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டின் மதிப்பு மீண்டும் உயரும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை சரிவு
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சற்று தளர்வு இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் அறிவிக்கப்பட்ட இரண்டு வார போர் நிறுத்தம் உலக சந்தைகளில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விலை குறைந்து, பங்குச் சந்தையில் நேர்மறை உணர்வு பரவியுள்ளது.
எண்ணெய் விலை 14 சதவீதம் குறைந்தது
போர் நிறுத்த அறிவிப்பால் எண்ணெய் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. உலக அளவில் எண்ணெய் விலை 14 சதவீதம் வரை குறைந்துள்ளது. இது இந்தியா போன்ற அதிக இறக்குமதி எண்ணெய்-ஐ நம்பியிருக்கும் நாடுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று தளர்வடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் அன்றாட செலவு சுமை சற்று குறையலாம்.
அடுத்த முக்கிய பிரச்சனை
ஏப்ரல் 10 அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை முடிவுகள் சந்தையின் அடுத்த போக்கை தீர்மானிக்கும். போர் நிறுத்தம் வெற்றிகரமாகத் தொடர்ந்து, நீண்டகால அமைதி ஏற்பட்டால், உலகப் பொருளாதாரம் முழுமையாக மீண்டு வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் அல்லது பதற்றம் மீண்டும் அதிகரித்தால், சந்தைகள் மீண்டும் ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/sensex-surges-over-2-600-points-in-pre-opening-asian-markets-rally-5-after-iran-us-15-day-ceasefi-788053.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
