
International
oi-Vigneshkumar
தெஹ்ரான்: இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் 2வது வாரமாகத் தொடர்கிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல்- அமெரிக்கப் படைகள் இப்போது ஈரானின் கச்சா எண்ணெய் கிடங்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளன. இது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் இஸ்ரேல்- அமெரிக்கப் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்தது. கடந்த சனிக்கிழமை ஈரான் மீது இரு நாடுகள் இணைந்து தாக்குதல்களை நடத்தின. இதில் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அதன் பிறகும் கூட ஈரான் மீது தொடர் தாக்குதல்கள் நடந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க… ஈரானும் கூட பதிலடி தாக்குதல்களில் இறங்கியது. இஸ்ரேலைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும், மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளில் இருக்கும் அமெரிக்கத் தூதரகங்கள் மீதும் ஈரான் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் வரலாறு காணாத பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று சனிக்கிழமையன்று தெஹ்ரானில் உள்ள ஈரானின் எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. போர் தொடங்கிய பிறகு ஈரானின் எண்ணெய் உள்கட்டமைப்பின் மீதான முதல் தாக்குதல் இதுவாகும்.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “உளவுத்துறை வழிகாட்டுதலின்படி, இஸ்ரேல் விமானப்படை விமானங்கள் ஈரான் ராணுவத்தின் பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களைத் தாக்கியுள்ளன. இந்த கிடங்குகள் ராணுவ உள்கட்டமைப்புக்கு ஆதரவளித்து, ராணுவத்திற்கு எரிபொருள் வழங்கப் பயன்படுகின்றன” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானும் கூட தங்கள் மீதான தாக்குதலை உறுதி செய்துள்ளது. தெற்கு தெஹ்ரானில் உள்ள முக்கிய சுத்திகரிப்பு வளாகம் அருகிலுள்ள ஒரு எண்ணெய் கிடங்கு தாக்கப்பட்டதாக ஈரான் அரசு ஊடகம் கூறியது. அதேநேரம் சுத்திகரிப்பு நிலையம் சேதமடையவில்லை என ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், வடமேற்கு தெஹ்ரானில் ஒரு எரிபொருள் கிடங்கும் தாக்கப்பட்டது. அங்கிருந்து தீ, அடர்ந்த புகை எழுந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஷாஹ்ரான் பகுதியிலும் ஒரு தாக்குதல் பதிவானது.
இது ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பை இலக்காகக் கொண்ட தாக்குதல்களின் திட்டம் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல்களை நீக்கி, ஈரானின் திறன்களைக் கணிசமாகக் குறைக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/first-strike-on-oil-infrastructure-us-israel-hit-infrastructures-fuel-depots-flames-smoke-seen-779507.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
