“கையிலே ஆகாசம்”.. அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா அழைத்து சென்ற தலைமையாசிரியர் | Tenkasi Head master sponsors first flight for 21 government school students

Tamilnadu

oi-Nantha Kumar R

சென்னை: விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகளை பணம் செலவழித்து தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தலைமையாசிரியர் ஒருவர் அழைத்து சென்று அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

நம்மில் பலரும் பயணங்களின் காதலனாக இருக்கலாம். டூவீலர், கார், பஸ் உள்ளிட்டவற்றில் பயணம் செய்திருந்தாலும் கூட பெரும்பாலானவர்களுக்கு விமான பயணம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கலாம் நல்ல சம்பளத்தில் அரசு அல்லது தனியார் வேலை செய்து வரும் பலரும் கூட இன்று வரை விமானத்தில் பயணித்தது இல்லை என்று நொந்து கொள்வது உண்டு.

tenkasi-head-master-sponsors-first-flight-for-21-government-school-students

ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் என்றாவது ஒருநாள் விமானத்தில் கண்டிப்பாக பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே தான் இருக்கும். இப்படி விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகளை தலைமையாசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளார். மாணவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றிய தலைமையாசிரியர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

அரசு தொடக்கப்பள்ளி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கொண்டலூர் கிராமம் உள்ளது. இது சாதாரண கிராமம். பெண்கள் பீடி சுற்றுவதையும், ஆண்கள் சாக்குபை தைய்ப்பது, கட்டுமான பணி உள்ளிட்டவற்றை தொழிலாக செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் ஏழையாகவும், நடுத்தர வர்த்தகத்தை சேர்ந்தவர்களாக தான் உள்ளனர்.

இந்த கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தலைமை ஆசிரியராக மைக்கேல் ராஜ் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் 100க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் விமானத்தை கண்டுபிடித்த ‘ரைட் சகோதரர்கள்’ பற்றி பாடம் எடுத்தார் மைக்கேல் ராஜ். அப்போது பாடம் நடத்தும்போது விமானம் எப்படி சார் வானத்தில் பறக்கிறது? என்று மாணவர்கள் வியப்புடன் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் விளக்கம் அளித்தார்.

ரைட் சகோதரர்கள் பற்றிய பாடம்

அதன்பிறகு பள்ளி மாணவ-மாணவிகளிடம் தங்களின் கனவு என்ன? என்பது பற்றி அவர் கேட்டார். அதற்கு பல மாணவ-மாணவிகளும் விமானத்தில் பறக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து மைக்கேல் ராஜ் கடந்த ஆண்டு 5ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை தனது சொந்த செலவிலும், நண்பர்களின் உதவியுடன் சென்னைக்கு சுற்றுலா அழைத்து சென்றார்.

அதேபோல் இந்த ஆண்டு 5ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளும் தங்களை விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்று தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளனர எப்படியாவது மாணவ-மாணவிகளின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மைக்கேல் ராஜ் நினைத்தார். மீண்டும் அவர் தனது சொந்த பணம், நண்பர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்த செல்ல முடிவு செய்தார்.

தூத்துக்கு டூ சென்னை

அதன்படி மைக்கேல் ராஜ் தனது 21 மாணவ-மாணவிகள், சக ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்டவர்களை நேற்று விமானத்தில் சென்னைக்கு அழைத்து சென்றார். நேற்று காலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றனர். விமானத்தில் ஏறியதும் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர்.

சென்னையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. அதன்பிறகு சென்னை மெரினா கடற்கரை, பிர்லா பிர்லா கோளரங்கம், கலங்கரை விளக்கம் உள்ளிட்டவற்றை ரசித்தனர்.இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவை ரசித்து வருகின்றனர். பிறகு அவர்கள் சென்னையில் இருந்து ரயிலில் நாளை காலை தென்காசி வருகின்றனர்.

விமான டிக்கெட் செலவு

விமான டிக்கெட்டுக்காக ரூ.1.9 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. பிற நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள், கிராம மக்களின் சப்போர்ட்டில் மாணவ-மாணவிகள் சென்னையில் தங்கும் செலவு, சாப்பாடு, பிற போக்குவரத்து செலவு, என்ட்ரி டிக்கெட்டுகளுக்கு பணம் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் விமானத்தில் பயணித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தலைமையாசிரியர் மைக்கேல் ராஜ்க்கு பாராட்டுகள் குவிகிறது. இதுபற்றி மைக்கேல் ராஜ் கூறுகையில், ”விமான பயணத்தில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒன்று முதல் 16 வரையிலான வாய்ப்பாட்டை மறக்காமல் சொல்ல வேண்டும். இதனை தவறின்றி செய்தால் விமானத்தில் அழைத்து செல்வதாக கூறினேன்.

மாணவ-மாணவிகள் ஆர்வமாக வாய்ப்பாடு கற்று ஒப்பித்தனர். விமான பயண டிக்கெட்டுக்கு டிஎஸ் குரூப் தொழிலதிபர் டி.ஜெயசிங் உதவி செய்தார். கிராம மக்கள், நண்பர்களும் உதவி செய்தனர். இது மாணவ-மாணவிகளுக்கு உத்வேகம் அளிக்கும்” எனக்கூறி நெகிழ்ந்தார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/tenkasi-head-master-sponsors-first-flight-for-21-government-school-students-779653.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo