ஈரானை தொட்டிருக்கக் கூடாது.. உலக நாடுகளின் ஃப்யூஸை பிடிங்கிட்டாங்களே! கதிகலங்க வைத்த கச்சா எண்ணெய் | Crude Oil Prices Surge Past $100 Amid Iran–US–Israel Conflict, Global Energy Market Shaken

International

oi-Rajkumar R

டெல்லி: மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் மற்றும் இராணுவ பதற்றம் உலகளாவிய எரிசக்தி சந்தையை கடுமையாக பாதித்துள்ளது. அதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்து, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் 26 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு உலக பொருளாதாரத்திலும், எரிபொருள் விலைகளிலும் புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.

சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம், மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் மோதல்களுடன் நேரடியாக தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்கள் மற்றும் அதற்கு பதிலடியாக ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள் அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

இந்த தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் பாதுகாப்பு சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஈரானின் பதிலடி நடவடிக்கையாக, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Crude Oil Iran US Israel

ஈரான் இஸ்ரேல் மோதல்

குறிப்பாக சவூதி, கத்தார் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனுடன் சேர்த்து இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்களும் நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த தொடர் தாக்குதல்கள் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் ஹேர்மூஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் ஏற்றுமதி

உலகின் பெரும்பாலான கச்சா எண்ணெய் ஏற்றுமதிகள் இந்த கடல் வழித்தடத்தின் மூலமே நடைபெறுவதால், அங்கு ஏற்பட்டுள்ள எந்த தடையும் சர்வதேச சந்தையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். இந்த சூழ்நிலையில், சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை

இது உலகளாவிய பொருளாதாரத்திலும் பணவீக்கத்திலும் புதிய அழுத்தத்தை உருவாக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலைமையின் தாக்கம் இந்திய சந்தையிலும் பிரதிபலித்துள்ளது. நாட்டில் நடைபெறும் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 26 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு ரூ.10,549 என்ற அளவுக்கு சென்றுள்ளது. இந்த உயர்வு சமீப காலங்களில் காணப்பட்ட மிகப்பெரிய உயர்வாகக் கருதப்படுகிறது.

எம்சிஎக்ஸ் கச்சா எண்ணெய்

இந்தியாவின் முக்கிய வர்த்தக தளமான Multi Commodity Exchange of India-ல் மார்ச் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் ஒப்பந்தங்களின் விலை வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தை ஒப்பிடும்போது ரூ.2,186 வரை அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பீப்பாய் ஒன்றுக்கு ரூ.8,363 ஆக இருந்த விலை, இன்று வர்த்தகத்தின் போது ரூ.10,549 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

எரிசக்தி சந்தை பதற்றம்

எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு உலக நாடுகளில் பல்வேறு பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதால் பொருட்களின் விலையும் உயரக்கூடும்.

எண்ணெய் இறக்குமதி

இந்தியாவைப் போன்ற எண்ணெய் இறக்குமதி அதிகம் செய்யும் நாடுகளுக்கு இந்த நிலைமை கூடுதல் சவாலாக மாறக்கூடும். ஏற்கனவே உலக பொருளாதாரத்தில் நிலவி வரும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை உயர்வு புதிய பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றம் குறையாமல் தொடருமானால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்னும் அதிக மாற்றங்கள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/crude-oil-prices-surge-past-100-amid-iran-us-israel-conflict-global-energy-market-shaken-780027.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo