
International
oi-Mani Singh S
தெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், இஸ்ரேல் மக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளை பாஸ்பரஸ் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்தி வரும் தாக்குதல் 10-வது நாளை எட்டியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதற்கு பழி தீர்க்காமல் விட மாட்டோம் என்று கூறியுள்ள ஈரான், பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

வெள்ளை பாஸ்பரசை பயன்படுத்தி தாக்குதல்
அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபானான் மீதும் வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில்தான், லெபனான் மீதான தாக்குதலுக்கு சட்ட விரோதமாக வெள்ளை பாஸ்பரசை இஸ்ரேல் பயன்படுத்தியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த மார்ச் 3 ஆம் தேதி லெபனானில் தெற்கு பகுதியில் உள்ள யோஹ்மோர் நகரம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியுள்ளது சட்ட விரோதமானது என்று தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் லெபனானை சேர்ந்த ஆய்வாளர் ராம்ஸி கைஸ், இது பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
உடனடியாக நிறுத்த வேண்டும்
இது போன்ற தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிக்குள் இந்த தாக்குதலை நடத்தக்கூடாது என்று அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். குடியிருப்புகள் மீது வான்வெளியில் வெடித்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளைக் காட்டும் ஏழு படங்களைச் சரிபார்த்து, புவிஇருப்பிடத்தையும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், குறைந்தது இரண்டு வீடுகளிலும் ஒரு காரிலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான ஆதாரங்களையும் பதிவு செய்தது, மனித உரிமை கண்காணிப்பகம். லெபனான் ஆராய்ச்சியாளர் ரம்சி கைஸ் கூறுகையில், “இஸ்ரேலிய இராணுவம் குடியிருப்புகள் மீது வெள்ளை பாஸ்பரஸை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது மிகவும் கவலையளிக்கிறது. இது பொதுமக்களுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வெள்ளை பாஸ்பரஸின் எரியூட்டும் தன்மை மரணத்தையோ அல்லது ஆயுள் முழுவதும் துன்புறுத்தும் கொடூரமான காயங்களையோ ஏற்படுத்தும்” என்றார்.
வெள்ளை பாஸ்பரஸ் என்றால் என்ன?
வெள்ளை பாஸ்பரஸ் என்பது பீரங்கி குண்டுகள், வெடிகுண்டுகள், ராக்கெட்களில் பயன்படும் ரசாயனப் பொருள். ஆக்ஸிஜனுடன் சேரும்போது தீப்பிடித்து எரியும். இது வீடுகள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கட்டமைப்புகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தும். சர்வதேச மனிதாபிமான சட்டப்படி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் வான்வெளியில் பாஸ்பரஸ் பயன்படுத்துவது பாகுபாடற்ற செயலாகும்.
பாதிப்பைத் தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இது மீறுகிறது. வெள்ளை பாஸ்பரஸ், புகைத்திரை உருவாக்குதல், இலக்குகள் குறித்தல், எதிரிப் படையினர், உபகரணங்களைத் தாக்குதல் போன்ற ராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது. எனினும், மக்கள் நிறைந்த பகுதிகளில் இதை உபயோகிப்பது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/israel-accused-of-using-white-phosphorus-in-lebanon-strikes-human-rights-group-raises-alarm-779947.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
