
Cricket
oi-Yogeshwaran Moorthi
அகமதாபாத்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தியுள்ளார். டி20 உலகக்கோப்பைத் தொடரில் சஞ்சு சாம்சன் அடிக்கும் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும். இதனால் மைதானத்தில் உள்ள 11 நியூசிலாந்து வீரர்களும் சைலண்ட்டாக வேடிக்கை பார்க்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்சல் சான்ட்னர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்களில் இந்திய அணி நிதானமாக ஆடியது.

எந்த அவசரமும் இல்லாமல் சஞ்சு சாம்சன் காத்திருந்தார். அதற்கேற்ப ஜேக்கப் டஃபி வீசிய 3வது ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசப்பட, ஃபெர்குசன் வீசிய 4வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 24 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து அபிஷேக் சர்மா அட்டாக்கை கையில் எடுக்க, சஞ்சு சாம்சன் கொஞ்சம் நிதானம் காட்டினார். அதேபோல் ஹென்றி மற்றும் சான்ட்னர் இருவரையும் சஞ்சு சாம்சன் எச்சரிக்கையுடன் எதிர்கொண்டார்.
இதையடுத்து ரச்சின் ரவீந்திரா பந்தில் அபிஷேக் சர்மா 52 ரன்களில் ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் – இஷான் கிஷன் கூட்டணி இணைந்தது. இப்போது சஞ்சு சாம்சன் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் 127 ரன்களை குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் ஹாட்ரிக் அரைசதத்தை விளாசினார்.
இதன்பின்னர் தான் சஞ்சு சாம்சனின் விஸ்வரூபம் வெளிப்பட்டது. ஃபெர்குசன் வீசிய 12வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாச, ரச்சின் ரவீந்திரா வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசி ஒட்டுமொத்த அகமதாபாத் மைதானத்தையும் அலறவிட்டார். ஆனால் நீஷம் வீசிய டாஸ் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்ற சஞ்சு சாம்சன், 46 பந்துகளில் 8 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 89 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலமாக 3வது முறையாக சஞ்சு சாம்சன் சதத்தை தவறவிட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் சஞ்சு சாம்சனுக்கு ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது. மேலும் டி20 உலகக்கோப்பையில் 5 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 321 ரன்களை விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-sanju-samson-scored-a-33-ball-fifty-against-new-zealand-in-the-final-of-the-t20-world-779703.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
