இந்தியா வரும் கப்பலை குறிவைத்து கொடூர தாக்குதல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் உச்சக்கட்ட பதற்றம்! | Thailand Cargo Ship attacked: Mayuree Naree Attacked in Strait of Hormuz 3 missing, En Route to India

International

oi-Vigneshkumar

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தியிலும் சரக்கு சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்றைய தினம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற 3 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுக்க பதற்றம் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு ஈரானும் கூட பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பரபரப்பு நிலவுகிறது. மேலும், சர்வதேச கச்சா எண்ணெய் வழித்தடத்தில் முக்கியமானதாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியிலும் இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Thailand Cargo Ship attacked

ஹார்முஸ் ஜலசந்தி

இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரக துறைமுகத்திலிருந்து புறப்பட்ட தாய்லாந்து கொடியுடன் கூடிய ‘மயூரி நாரி’ என்ற சரக்குக் கப்பல், ஹார்முஸ் ஜலசந்தி அருகே புதன்கிழமை தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கப்பலிலிருந்த 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர். அதேநேரம் மூன்று பேரின் நிலை என்னவானது என தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.

தாக்குதல்

பிரஷியஸ் ஷிப்பிங் பிசிஎல் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த சரக்கு கப்பல், கலிஃபா துறைமுகத்திலிருந்து இந்தியாவின் காண்ட்லா துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 178 மீட்டர் நீளமும் 30,000 டன்கள் எடை கொண்ட இந்த கப்பலில் இருந்து அடர்த்தியான கருப்புப் புகை எழும்புவதும், உயிர் காக்கும் படகுகள் அருகே மிதப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

யார் காரணம்

இந்த தாக்குதலுக்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தாய்லாந்து கடற்படை கூறியது. இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. ஒரு பக்கம் ஹார்முஸ் ஜலந்தி வழியாக வரும் கப்பல்களைத் தாக்குவோம்.. எந்த கப்பலையும் ஹார்மூஸ் ஜலசந்தியை தாண்ட விட மாட்டோம் என ஈரான் மிரட்டுகிறது. இன்னொரு பக்கம் ஹிஸ்புல்லா படைகளும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பதில் தெளிவான தகவல்கள் இல்லை.

மூன்று கப்பல்கள்

இந்த தாக்குதலைத் தொடர்ந்து கடலில் குதித்த உயிர் தப்பிய 20 மாலுமிகளை ஓமன் கடற்படை மீட்டது.. மாயமான மீதமுள்ள மூவரையும் தேடும் பணிகள் தொடர்கின்றன. முன்னதாக, மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக மையமும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியே இந்த தாக்குதலுக்குக் காரணமாகும். பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது முதலில் இஸ்ரேல் தனது தாக்குதலைத் தொடங்கியது. இதற்குப் பதிலடியாக ஈரானும் கூட இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீதும் தாக்குதல் நடத்தியது. மேலும், மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகின் முக்கிய எரிசக்தி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியிலும் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/thailand-cargo-ship-attacked-mayuree-naree-attacked-in-strait-of-hormuz-3-missing-en-route-to-indi-780541.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo