
Business
oi-Vigneshkumar
சென்னை: ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கையை எப்படி ஓட்டுவது.. எப்படி வருமானம் ஈட்டுவது.. எந்தளவுக்குச் சொத்து தேவைப்படும் எனப் பல கேள்விகள் இருக்கும். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
வாழ்க்கையில் நாம் வேலை செய்யும் வரை வருமானத்திற்குப் பிரச்சினை வராது. ஆனால், ஓய்வு பெற்ற பிறகு வருவாய் இருக்காது. அதுபோன்ற சூழலைச் சமாளிக்க பொதுவாக மக்கள் ரியல் எஸ்டேட்டை நாடுவார்கள். இதற்கிடையே ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கை நடத்த எது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பதைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.

ஏர்லி ரிட்டயர்மென்ட்
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில், “முதலில் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் ஏர்லி ரிட்டயர்மென்ட் எனப்படும் முன்கூட்டியே ஓய்வு பெறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், முன்கூட்டியே ஓய்வு பெறுவது என்பது வேறு, பைனான்சியல் செக்யூரிட்டி என்பது வேறு.. நீங்கள் பொருளாதார ரீதியாக போதுமானதாக இருந்து ஓய்வு பெறுகிறார்கள் என்றால்.. இப்போது செய்யும் வேலை பிடிக்கவில்லை. இதில் இருந்து எஸ்கேப் ஆகவே முன்கூட்டியே ஓய்வு பெறுகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த விவகாரத்தில் எனது கருத்து என்னவென்றால் உங்களுக்கு ஓரளவுக்குப் பொருளாதார பாதுகாப்பு இருந்தாலே போதும் உங்களுக்கு எது பிடித்து இருக்கிறதோ அந்த வேலையைச் செய்யலாம். அதைவிட்டுவிட்டு வேலையே இல்லாமல் பணம் இருக்கு.. வீட்டில் காலை ஆட்டிக் கொண்டு இருப்பேன் என்றால் அது ரொம்பவே ஆபத்து!
எப்போது ஓய்வு பெறலாம்
உங்களுக்கு இப்போது செய்யும் வேலை பிடிக்கவில்லை.. பணத்திற்காகச் செய்கிறேன். இந்த வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு நாளையில் இருந்து வேறு வேலை செய்வேன் என்றால் அது ஓகே. சாய்ஸ் உங்களுடையது. ஆனால், சாகும் வரை ஏதாவது ஒன்றை நீங்கள் செய்து கொண்டு தான் இருக்க வேண்டும். அது நீங்கள் பணத்திற்காகக் கூட செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை.
அடுத்து பணவீக்கம் அதிகம் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு வேண்டும் என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுவது ரொம்பவே கடினம். ஆனால், இதுபோன்ற காலகட்டத்தில் சொத்துகளாக (Hard assert) சில விஷயம் இருந்தால் சமாளிக்கலாம். ஏனென்றால் அதன் விலையும் ஏறும். தங்கம் என்பது சொத்து. நிலம் ஒரு காலத்தில் ஹார்ட் அசர்ட்டாக இருந்தது. ஆனால், ஒரு அளவுக்கு மேல் ஏறியிருப்பதால் ஒரு ஹார்ட் அசெட்டாக இருக்குமா என்பது எனக்குச் சந்தேகம்.
தங்கம்
தங்கம் என்னிடம் ஒரு 1000 கிராம் இருக்கிறது என வைத்துக் கொள்வோம். எனக்கு மாதம் 45,000 செலவுக்குத் தேவை என்றால் நான் மாதம் 3 கிராம் விற்றால் போதும். ஆனால், இது உளவியல் ரீதியாக ரொம்பவே கடினம். ஒவ்வொரு கிராமும் குறையும்போது படுத்தி எடுக்கும். அதேநேரம் எப்போதும் 3 கிராம் விற்கத் தேவையிருக்காது. பணவீக்கத்தை விடத் தங்கம் விலை வேகமாக உயர்வதால் காலப்போக்கில் நீங்கள் விற்க வேண்டிய தங்கத்தின் அளவு குறையலாம். அதாவது இன்று 3 கிராம் விற்று செலவு செய்தால், அடுத்தாண்டு தங்கம் விலை ஏறி இருப்பதால் 2.5 அல்லது கிராம் விற்றால் போதும் என்ற நிலை வந்துவிடும்.
உங்களுக்கு 60 வயது ஆகிவிட்டது. 80 வயது வரை தேவை என்று கணக்குப் போட்டால் உங்களுக்கு 240 மாதம் வரும். ஒவ்வொரு மாதமும் 3 கிராம் என்றால் உங்களுக்கு 750 கிராம் தங்கம் வேண்டும். உங்களுக்கு மாத செலவு ரூ.50,000 செலவு என்றால் ஈஸியாக 80 வயது வரை சமாளிக்கலாம். விலைவாசியை விடத் தங்கம் விலை வேகமாக உயரும் என்பதால் நீங்கள் விற்க வேண்டிய தங்கமும் குறையும். ஆனால், இதில் விஷயம் என்னவென்றால் உங்களுக்கு மாதம் 3 கிராம் தங்கத்தை விற்கும் அளவுக்கு மன தைரியம் வேண்டும். அது ஈஸியாக வந்துவிடாது.
ரியல் எஸ்டேட்
இன்னும் சிலர் வீட்டைக் கட்டி, அந்த வாடகையை வைத்துச் சாப்பிடலாம் என்பார்கள். உங்கள் மூதாதையர்கள் யாராவது நிலத்தை வாங்கி வைத்திருந்தால்.. அதில் வீடு கட்டி வாடகைக்கு விடலாம். அப்போது உங்களுக்கு 10% முதல் 15% வரை பணம் கிடைக்கும். ஏனென்றால் நிலத்திற்கு நீங்கள் எந்தவொரு பணத்தையும் செலவிடவில்லை. அதேநேரம் இன்று நிலம் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விடுகிறேன் என்றால் 2% கூட வராது. அது சரிப்பட்டு வராது” என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு, உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-vs-real-estate-which-is-best-for-retirement-and-stable-income-anand-srinivasan-explains-781149.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
