
International
oi-Rajkumar R
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு பெரிய தொகை பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோஜ்தபா கமேனி குறித்து முக்கிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு கோடி அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.92 கோடிக்கு சமமானதாகும்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து வான்வழித் தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே, ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. பின்னர் இதனை ஈரானும் உறுது செய்தது.

பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய இந்த தாக்குதல்களில் ஈரானின் பல முக்கிய ராணுவ மற்றும் அரசியல் இலக்குகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதல்களில் கமேனி உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.
மோஜ்தபா கமேனி
இதைத் தொடர்ந்து, அவரது மகன் மோஜ்தபா கமேனி புதிய தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, ஈரான் மக்களுக்கு மோஜ்தபா கமேனி அளித்ததாக கூறப்படும் அறிக்கை அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டது. அந்த அறிக்கையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை தொடர்ந்து தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பெஞ்சமின் நெதன்யாகு
இந்த சூழலில் பெஞ்சமின் நெதன்யாகு ஜெருசலேமில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மோஜ்தபா கமேனியின் உயிருக்கு பாதுகாப்பு உறுதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையில் அமெரிக்க அரசு, மோஜ்தபா கமேனி உள்ளிட்ட ஈரானின் 10 முக்கிய தலைவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அவர்களைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு ஒரு கோடி டாலர் வரை பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் புரட்சிகர காவல்படை
இந்த பட்டியலில் மோஜ்தபா கமேனியின் அலுவலகத்தின் துணைத் தலைவர், பாதுகாப்புத் துறை செயலாளர், ராணுவ ஆலோசகர், உள்துறை அமைச்சர் மற்றும் புலனாய்வு துறை அமைச்சர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அமெரிக்காவின் குற்றச்சாட்டுப்படி, இவர்கள் உலகம் முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிட்டு நடத்தும் ஈரானின் புரட்சிகர காவல்படையை வழிநடத்தும் முக்கிய நபர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஆபரேஷன் எபிக் ஃப்யூரி
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை “ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” என்ற பெயரில் நடைபெற்று வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் முதல் வாரத்திலேயே ஈரானில் 3,000க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல்
இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளும் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் இந்த நிலைமையை கவனமாகக் கண்காணித்து வருகின்றன.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-announces-10-million-bounty-on-mojtaba-khamenei-amid-iran-war-781199.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
