
International
oi-Velmurugan P
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமடைந்தனர் என்று தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் காபூலின் 9-வது போலீஸ் மாவட்டப் பகுதியில் அமைந்துள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மருத்துவமனையின் பெரும் பகுதி தரைமட்டமானது. சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதில் தற்போது வரை 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இடிபாடுகளை அகற்றும்போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் முற்றிலுமாக மறுத்துள்ளது. காபூலில் எந்த ஒரு மருத்துவமனையும் இலக்கு வைக்கப்படவில்லை என்றும், தலிபான்களின் குற்றச்சாட்டு “அடிப்படையற்றது” என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
தாக்குதல் பின்னணி என்ன?
இந்தத் தாக்குதல் திடீரென நடந்த ஒன்று அல்ல; கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நிலவி வரும் கடும் பதற்றத்தின் உச்சக்கட்டமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்புதான், இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான எல்லைப் பகுதியில் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டனர். இதில் ஆப்கானிஸ்தான் தரப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே மிக மோசமான எல்லை மோதல் நிலவி வருகிறது.
வான்வெளி மீறல்
பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறித் தாக்குதல் நடத்துவதாகத் தலிபான்கள் குற்றம் சாட்டுகின்றனர். “இது அனைத்து சர்வதேச விதிகளுக்கும் எதிரானது மற்றும் மனிதநேயமற்ற செயல்” என்று ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதக் குற்றச்சாட்டுகள்
பாகிஸ்தானில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தளம் பயன்படுத்தப்படுவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது . இதற்குப் பதிலடி கொடுக்கவே பாகிஸ்தான் அவ்வப்போது எல்லைத் தாண்டித் தாக்குதல் நடத்துகிறது. ஆனால், ஒரு மருத்துவமனையைத் தாக்கியதாகக் கூறப்படுவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/kabul-hospital-strike-taliban-claims-400-dead-in-pakistan-airstrike-pakistan-denies-allegations-781961.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
