
Business
oi-Vigneshkumar
சென்னை: பொதுவாகப் போர்க் காலங்களில் தங்கம் தான் உச்சத்திற்குச் செல்லும். கடந்த காலங்களில் எல்லா போர்களிலும் இதுவே நடந்துள்ளது. ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாகப் போர் வெடித்த பிறகும் தங்கம் உயரவில்லை. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து சர்வதேச சந்தைகள் பெரும் கொந்தளிப்பைச் சந்திக்கின்றன. இந்த போரால் கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் ஆபத்து எனக் கருதப்படும் பங்குச்சந்தையைத் தவிர்த்துவிட்டு, பாதுகாப்பான புகலிடத்தை நோக்கிச் செல்கிறார்கள்.

உயராத தங்கம்
வழக்கமாக, இதுபோன்ற நெருக்கடிக் காலத்தில் முதலீட்டாளர்கள் தங்கம் அல்லது அமெரிக்க டாலரை பாதுகாப்பான முதலீடுகளாகக் கருதி முதலீடு செய்வார்கள். ஆனால் இந்த முறை தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை. சொல்லப்போனால் சரிந்தே வருகிறது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய ஈரான் மோதலுக்குப் பிறகு, பிட்காயின் $73,000ஐ தாண்டியுள்ளது. எண்ணெய் மற்றும் பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கும் நேரத்தில், பிட்காயின் மதிப்பு உயர்ந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. போர் ஆரம்பித்த பிறகு பிட்காயின் சுமார் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நிச்சயமற்ற சூழலில் பிட்காயின் தனித்து நிற்கிறது.
கடந்த காலங்களில் பிட்காயின் முதலீடு எப்போதும் ஆபத்தானதாகவே பார்க்கப்பட்டது.. ஒரே நாளில் கூட மிகப் பெரிய ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கும் ஒன்றாகவே பிட்காயின் பார்க்கப்பட்டது. இதற்கு முன்பு பிட்காயின் பாதுகாப்பான புகலிடமாகச் செயல்பட்டதில்லை. ஆனால், இப்போது அது உயர்ந்து வருவது பலருக்கும் ஆச்சரியத்தைத் தருவதாகவே உள்ளது.
வல்லுநர்கள் சொல்வது என்ன
இது குறித்து INRGrid ஸ்டேபிள் நிறுவனர் அனூஜ் சவுத்ரி கூறுகையில், “ஈரான் போர் காரணமாக புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பிட்காயின் கிட்டத்தட்ட 10% உயர்ந்து. இது தங்கம், அமெரிக்க டாலரை விஞ்சும் வகையில் உள்ளது. முதலீட்டாளரிடையே ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் குறிக்கிறது. பாரம்பரிய பாதுகாப்பான புகலிடங்களைப் போலல்லாமல், பிட்காயின் நீங்கள் வைத்திருக்கும் சொத்து மட்டுமல்ல.. வங்கிகள், அரசுகள் போன்ற கட்டமைப்புகள் இல்லாமல் உடனடியாக எங்கு வேண்டும் என்றாலும் அனுப்ப முடியும்.. நிச்சயமற்ற தன்மை கூடும்போதும் இது பிட்காயினுக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்டாக மாறுகிறது.
தங்கம் பறிமுதல் செய்யப்படலாம்.. தங்க நாணயங்கள் முடக்கப்படலாம், வங்கி அமைப்புகள் தடைப்படலாம். ஆனால் பிட்காயினை அதன் உரிமையாளர்கள் எப்போது வேண்டும் என்றாலும் அணுகலாம். எனவே, இந்த காலத்திற்கு ஏற்ற ஒரு புதிய பாதுகாப்பான புகலிடமாக இது உருவாகிறது” என அவர் சுட்டிக்காட்டினார்.
நிரந்தர புகலிடம் இல்லை
ஈரான் போர்க் காலத்தில் இந்த ஒரு முறை கிரிப்டோ அதிகரித்து இருக்கலாம். ஆனால், தங்கத்துடன் பிட்காயினை ஒப்பிடுவது சரியானதாக இருக்காது என்றே பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்கள் அல்லது கொரோனா போன்ற புவிசார் அரசியல் நெருக்கடிகளின்போது கிரிப்டோ வர்த்தகம் அதிகரித்துள்ளது. நிதிச் சந்தைகளில் பல முதலீட்டாளர்கள் பிட்காயினை ஒரு நெகிழ்வான சொத்தாகக் கருதுகின்றனர்.
தங்கம்
அதே சமயம், கடந்த சில ஆண்டுகளாக அனைத்து முக்கிய மத்திய வங்கிகளும் தங்கள் தங்க இருப்பை அதிகரித்துள்ளன.. இது பாரம்பரிய சொத்துகளின் மீதான நம்பிக்கையை உணர்த்துகிறது. வரலாற்று ரீதியாக, மோதல்களின்போது தங்கம் தான் எப்போதுமே வேகமாக உயர்ந்துள்ளன. ஆனால், நடப்பு ஈரான் போரில் தங்கத்தின் விலை உயர்வு இல்லை. போர் தொடங்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு ஒரு அவுன்ஸ் $5,327.42 என வர்த்தகம் செய்யப்பட்ட தங்கம், பின்னர் $5,000-$5,200 வரம்பிற்குள் நிலைபெற்றுள்ளது.
விலை உயராதது ஏன்
அது சரி தங்கம் விலை ஏன் இந்த முறை உயரவில்லை.. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வதே இதற்குக் காரணம். போர் காரணமாக மத்திய கிழக்கில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், முதலீட்டாளர்கள் டாலரை நோக்கிச் செல்கிறார்கள். கச்சா எண்ணெய் தொடங்கி அனைத்து சர்வதேச வர்த்தகமும் டாலரில் தான் நடக்கும் நிலையில், மக்கள் அதை நோக்கிச் செல்கிறார்கள். இதன் காரணமாகவே முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு அல்லது அதைக் கண்டு கொள்ளாமல் டாலரை வாங்குகிறார்கள். இதுவே இந்த குறிப்பிட்ட போரில் தங்கம் விலை குறையப் பிரதான காரணமாக இருக்கிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-is-not-raising-despite-middle-east-tension-this-new-asset-has-surged-the-most-during-crisis-782151.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
