
International
oi-Oneindia Staff
துபாய்… பகட்டான கட்டிடங்களும், மின்னும் விளக்குகளும் நிறைந்த இந்த நகரம், சில நேரங்களில் துரோகத்தையும் ஒரு கலைப் பொருளாகக் காட்டும் வித்தை அறிந்தது. 2019-ஆம் ஆண்டு, துபாயின் ஜே.டபிள்யூ மேரியட் ஹோட்டலின் 72-வது மாடியில் ஒரு மாலை நேர விருந்து. அமெரிக்கத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்வில், ஆசிய நாடுகளின் முன்னணி பத்திரிகையாளர்கள் மதுக்கோப்பைகளுடனும், அரசியல் கிசுகிசுக்களுடனும் உரையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்திருந்த காலம். புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்த அந்த ரணம் இன்னும் ஆறவில்லை. அந்தச் சூழலில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மூத்த பத்திரிகையாளரிடம் நான் மெல்ல ஒரு பெயரைக் குறிப்பிட்டேன்.

“ஜாவேத் கானானி (Javed Khanani)…”
அடுத்த நொடி, சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்தப் பத்திரிகையாளரின் முகம் வெளிறிப் போனது. கையில் இருந்த மதுக்கோப்பை நடுக்கத்தில் தளும்பியது. சுற்றும் முற்றும் பார்த்தவர், என் காதருகே வந்து கிசுகிசுத்தார்: “ரொம்பத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க… தயவுசெய்து அந்தப் பெயரை இங்கே சொல்லாதீங்க. இங்கேயும் கூட, அந்தப் பெயர் ஒருவரைக் கொலை செய்யப் போதுமானது.”
அந்த நடுக்கம் எனக்கு ஒன்றை உணர்த்தியது. நாம் சினிமாவில் பார்க்கும் ‘துரந்தர்’ போன்ற வில்லன்கள் வெறும் கற்பனை. ஆனால், நிஜமான வில்லன் கராச்சியின் சந்துகளில் அமர்ந்து கொண்டு, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை உடைக்க ஒரு பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருந்தான். அவன் தான் ஜாவேத் கானானி. இவ்வாறு ஒரு மூத்த பத்திரிக்கையாளர் பதிவு செய்திருந்தார்.
யார் இந்த ஜாவேத் கானானி?
2000-களின் நடுப்பகுதியில், ஜாவேத் கானானி வெறும் கரன்சி டீலர் அல்ல. அவர் ‘கானானி அண்ட் காலியா இன்டர்நேஷனல்’ (KKI) என்ற பிரம்மாண்டமான ஹவாலா நிறுவனத்தின் தூண். கராச்சியின் சந்துகள் முதல் துபாயின் வர்த்தக மையங்கள், கனடாவின் பிளாசாக்கள், கிழக்கு ஆப்பிரிக்காவின் துறைமுகங்கள் வரை இவரது வலைப்பின்னல் பரவியிருந்தது.
தோற்றத்தில் இவர் ஒரு சாதாரண அக்கவுண்டண்ட் போலத் தெரிவார். மென்மையான பேச்சு, கண்கண்ணாடி, அடக்கமான நடை. ஆனால், இவரது கணக்குப் புத்தகத்தில் ஊடாடியவை சாதாரண எண்கள் அல்ல. மெக்சிகோ போதைப்பொருள் கும்பலின் பணம், வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயங்கரவாத நிதி, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகளின் கணக்குகள், மற்றும் தாவூத் இப்ராகிமின் டி-கம்பெனி முதலீடுகள் என அனைத்தும் கானானியின் கைகள் வழியாகவே ‘வெள்ளை’யாக்கப்பட்டன.
அமெரிக்கக் கருவூலம் இவரை “சர்வதேச குற்றக் கும்பல்” என்று முத்திரை குத்தியது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI), தங்களின் அழுக்குப் பணத்தைப் பரிமாற கானானியை ஒரு ‘நிதி ஸ்விட்ச்போர்டு’ (Financial Switchboard) போலப் பயன்படுத்தியது.
போலி ரூபாய் நோட்டுகள்: ஒரு கண்ணுக்குத் தெரியாத போர்
கானானியின் எழுச்சி ஒருபுறம் இருக்க, இந்தியாவுக்குள் அதிநவீன போலி ரூபாய் நோட்டுகள் (FICN) ஊடுருவத் தொடங்கின. இவை சாதாரண நகல்கள் அல்ல; ஏடிஎம் இயந்திரங்களையே ஏமாற்றும் அளவுக்கு தரம் வாய்ந்தவை.
தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் இதர அமைப்புகளின் விசாரணையில் ஒரு அதிர்ச்சியான உண்மை வெளிப்பட்டது:
- இந்த நோட்டுகள் பாகிஸ்தானின் அரசு அச்சகங்களிலேயே, உயர்தரம் வாய்ந்த பாதுகாப்பு காகிதங்களில் அச்சிடப்படுகின்றன.
- துபாய், காட்மாண்டு, டாக்கா வழியாக இவை இந்தியாவுக்குள் கடத்தப்படுகின்றன.
- லஷ்கர் பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா போன்றவர்கள் மூலம் இந்தத் திட்டத்தை ஐஎஸ்ஐ நேரடியாகக் கண்காணித்தது.
ஆண்டுக்கு சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான போலி நோட்டுகள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன. இதன் நோக்கம் இரட்டைத் தாக்குதல்: ஒன்று, இந்த நோட்டுகளைக் கொண்டு இந்தியாவில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுவது. இரண்டு, இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கையைத் தகர்த்து பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது. இந்தப் பெரும் சதித்திட்டத்தின் நிதி மேலாளராக ஜாவேத் கானானி செயல்பட்டார்.
லண்டன் நிறுவனத்தின் மர்மப் பின்னணி
இந்தத் திரைக்கதையில் ஒரு கறுப்பு அத்தியாயம் லண்டனில் தொடங்குகிறது. உலகின் முன்னணி கரன்சி காகிதத் தயாரிப்பு நிறுவனமான ‘டி லா ரூ’ (De La Rue) மீது இந்தியா 2010-ல் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. தரம் குறைந்த காகிதங்கள் மற்றும் போலிச் சான்றிதழ்கள் காரணமாக அந்த நிறுவனம் கறுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டது.
ஆனாலும், சில அதிகாரிகளின் உதவியுடன் அந்த நிறுவனம் மறைமுகமாக இந்தியச் சந்தையில் நீடித்தது. அப்போது எழுந்த ஒரு பெரிய கேள்வி: பாகிஸ்தான் அச்சடிக்கும் ‘சூப்பர் நோட்டுகள்’ எப்படி இந்திய நோட்டுகளைப் போலவே இருக்கின்றன? இந்தியாவின் ரகசியத் தொழில்நுட்பம் அல்லது காகிதத் தரம் எப்படிப் பாகிஸ்தானுக்குக் கசிந்தது? இதற்குப் பின்னால் இருந்த இடைத்தரகர்களுக்கும் கானானிக்கும் தொடர்பு இருந்ததாகப் பல மர்மங்கள் இன்றும் நீடிக்கின்றன.
பணமதிப்பிழப்பு: கானானியின் சாம்ராஜ்யம் சரிந்த இரவு
2016 நவம்பர் 8. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த அந்த இரவு, டெல்லியை விட கராச்சியில் தான் அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஐஎஸ்ஐ சேமித்து வைத்திருந்த கோடிக்கணக்கான போலி நோட்டுகள் ஒரே இரவில் வெறும் காகிதங்களாக மாறின. கடத்தல் பாதைகள் முடங்கின. ஹவாலா ஏஜெண்டுகள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறினர். ஜாவேத் கானானியின் ஒட்டுமொத்த பிசினஸ் மாடலும் நிலைகுலைந்தது.
அடுத்த சில வாரங்களிலேயே, 2016 டிசம்பர் 4-ஆம் தேதி, கராச்சியின் முஹம்மது அலி சொசைட்டியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. அதன் 4-வது மாடியில் இருந்து ஜாவேத் கானானி கீழே விழுந்து கிடந்தார். ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாகக் கிடந்த செய்தி உலகையே உலுக்கியது.
பாகிஸ்தான் காவல்துறை இதை ‘தற்கொலை’ என்றது. குடும்பத்தினர் ‘விபத்து’ என்றனர். பிரேதப் பரிசோதனை முறையாக நடக்கவில்லை. ஆனால், நிழல் உலகத் தகவல்களோ வேறு கதையைச் சொன்னன. கானானியிடம் ரகசியங்கள் அதிகம் இருந்தன; அவர் உயிருடன் இருப்பது ஆபத்து எனக்கருதிய ‘சக்திகள்’ அவரைத் தள்ளிவிட்டிருக்கலாம் அல்லது பெரும் பண இழப்பால் அவர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கலாம்.
முடிவடையாத போர்
சினிமாவில் வரும் வில்லன்கள் கிளைமாக்ஸில் இறந்துவிடுவார்கள். ஆனால் ஜாவேத் கானானி மறைந்தாலும், அவர் உருவாக்கிய அந்த ‘நிழல் பொருளாதார’ வலைப்பின்னல் இன்னும் முழுமையாக அழியவில்லை. அவரது வாரிசுகளும், புதிய ஹவாலா மன்னர்களும் இன்றும் ஐஎஸ்ஐ-யின் கைப்பாவைகளாக இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இந்தியா தனது எல்லைகளைப் பலப்படுத்தி, தொழில்நுட்பத்தை மேம்படுத்தினாலும், கானானி போன்றவர்களின் தீவிரவாத வாரிசுகள், கராச்சியின் நிதிச் சந்தைகளில் இன்னும் உலவிக்கொண்டுதான் இருக்கின்றன.
பொருளாதாரப் போர் என்பது துப்பாக்கித் தோட்டாக்களால் நடப்பதல்ல; அது கணக்குப் புத்தகங்களாலும், கள்ள நோட்டுகளாலும், நிழல் உலக வங்கிப் பரிமாற்றங்களாலும் நடத்தப்படுகிறது. அந்தப் போரின் ஒரு முக்கிய தளபதியின் வீழ்ச்சி தான் ஜாவேத் கானானியின் மரணம். அதை துரந்தர் 2 திரைப்படம் காட்சிப்படுத்தியுள்ளது. நீங்களும் பார்த்துவிட்டால் கமெண்ட் செய்யலாம். பார்க்காவிட்டால் காரணத்தையும் கமெண்ட் செய்யலாம்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/beyond-dhurandhar-2-the-terrifying-true-story-of-javed-khanani-the-isi-s-real-life-shadow-banker-783141.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
