
Business
oi-Vigneshkumar
டெல்லி: இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை சமீப காலங்களில் இல்லாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் இந்தளவுக்கு உச்சத்திற்குப் போய் இருப்பதால் பல்வேறு பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சாதாரண குடிநீர் பாட்டில் விலையும் இதனால் உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய கிழக்கு போர் 4வது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்த மோதல் நாம் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. என்ன தான் நாம் கிரீன் எனர்ஜியை நோக்கிச் சென்றாலும் கூட இன்னுமே கச்சா எண்ணெய் தான் பல விஷயங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை
இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல், டீசலை தாண்டியும் பல பொருட்களின் விலை உயரவே செய்கிறது. அப்படி தான் இப்போது குடிநீர் பாட்டில் விலையும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் தினசரி அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் பாட்டில் குடிநீர் விலை சுமார் 11% அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தான் மத்திய அரசு குடிநீர் பாட்டில்களுக்கு வரிச் சலுகை அறிவித்து இருந்தது. இதன் விலை அதன் விலை குறைத்து இருந்த சூழலில், இப்போது வரிச் சலுகையின் பலன் இல்லாமல் போய்விட்டது.
குடிநீர் சவால்
இந்தியாவில் 140 கோடி மக்களுக்குத் தூய குடிநீர் கிடைப்பது சவாலாகவே இருக்கிறது. குறிப்பாக வட இந்தியாவில் இன்னுமே பல பகுதிகளில் தூய்மையான குடிநீர் என்பது சிக்கலாகவே இருக்கிறது. சுமார் 70% நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. இதனால் வெளியே செல்லும்போது நாம் பாட்டில் நீரையே வாங்க வேண்டி இருக்கிறது. குடிநீரில் கொஞ்ச ரிஸ்க் எடுத்தாலும் மிக மோசமான பாதிப்பு ஏற்படும் என்பதால் மக்கள் பாட்டில் நீரையே வாங்குகிறார்கள்.
இந்தியாவில் பிஸ்லெரி, கோகோ-கோலா, பெப்சிகோ, ரிலையன்ஸ், டாடா குரூப் ஆகிய நிறுவனங்களே பாட்டில் தண்ணீர் சந்தையைக் கட்டுப்படுத்துகிறது. நமது நாட்டில் இதன் சந்தை மதிப்பு இப்போது 5 பில்லியன் டாலராக உள்ளது. மாசுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பாட்டில் தண்ணீர் தேவைகளும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. இந்தச் சூழலில் தான் போர் காரணமாகத் தண்ணீர் பாட்டில் விலை உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
கச்சா எண்ணெய் விலை ஏற்றமே பாட்டில் குடிநீர் உயர்வுக்கான முக்கிய காரணம். கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான பாலிமரின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதன் தாக்கத்தால் பாட்டில் உற்பத்தி செலவு உயர்ந்துள்ளது. அதாவது உள்ளே இருக்கும் தண்ணீருக்கான விலை உயரவில்லை. மாறாகப் பாட்டிலின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பாட்டில் குடிநீர் நிறுவனமாக பிஸ்லெரி இருக்கிறது. நாட்டின் பாட்டில் தண்ணீர் சந்தையின் மூன்றில் ஒரு பங்கை தன்வசம் வைத்திருக்கிறது. பாலிமர் விலை உயர்வு காரணமாக பிஸ்லெரி தனது குடிநீர் விலையை 11% வரை உயர்த்தியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. உதாரணமாக, 12 ஒரு லிட்டர் பாட்டில்கள் கொண்ட பெட்டியின் விலை ₹216ல் இருந்து ₹240ஆக அதிகரித்துள்ளது.
எவ்வளவு உயர்வு?
பிஸ்லெரியின் தலைமை செயல் அதிகாரி ஏஞ்சலோ ஜார்ஜ் இது தொடர்பாக ராய்ட்டர்ஸிடம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த இரு வாரங்களாக பேக்கேஜிங் பொருட்களின் விலை 70%க்கும் மேல் உயர்ந்ததால், ஒரு லிட்டர் பாட்டில் குடிநீரின் விலை 20 ரூபாயாக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை குறையவில்லை என்றால் நிலைமை மேலும் மோசமாகலாம் என அஞ்சப்படுகிறது.
இப்போது பிலாஸ்டிக் பொருட்களின் விலை உயர்வு தீவிரமாக இருக்கிறது. பாட்டில் பிளாஸ்டிக் விலை ஒரு கிலோவுக்கு 50% உயர்ந்து ₹170ஆக இருக்கிறது. அதேபோல மூடிகள் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. பெட்டிகள், லேபிள்கள் என அனைத்து பேக்கேஜிங் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதுவே குடிநீர் பாட்டில்கள் விலையை உயர்த்தியுள்ளது.
வரிச்சலுகை பலன் போச்சு
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பைச் செய்திருந்தது. அதில் பாட்டில் குடிநீருக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை 18%இல் இருந்து 5%ஆக குறைத்து இருந்தது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பாட்டில் தண்ணீர் ரேட் குறைந்து இருந்தது. ஆனால், தற்போதைய விலை உயர்வு, வரிச் சலுகையின் பலனை முழுவதுமாகப் பறித்துவிட்டது.
பிஸ்லெரியைப் போலவே, பிற நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளன. பெய்லி தனது பாட்டில் குடிநீர் விலையை சுமார் 11% உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.. அதேபோல கிளியர் பிரீமியம் வாட்டர் நிறுவனம் தனது பாட்டில்கள் விலையை 8% முதல் 11% வரை உயர்த்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நயன் ஷா தெரிவித்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/iran-crisis-bottled-water-prices-raised-in-india-as-plastic-costs-raises-tax-cut-benefits-no-more-783431.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
